தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (ANSA)

தலைவர்களாக அல்ல உடன்பணியாளர்களாக மாற...

திருஅவை வலியுறுத்துவது போல ஒன்றிப்பின் மறைபொருளாகவும், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பணிவின் அடையாளமாகவும், சான்றாகவும், அருள்பணியாளர்கள் இருக்கவேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நம்பிக்கையுள்ள உடன்பணியாளர்களாகவும், இறைமக்களுக்குப் பணிபுரிபவர்களாகவும், தூயஆவியின் வழிகாட்டுதலின்கீழ் இருப்பவர்களாகவும் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட உள்ள திருத்தொண்டர்கள் இருக்கவேண்டும் என்றும், திருஅவை தலைவர்களாக அல்ல மாறாக உடன்பணியாளர்களாக மாறவேண்டும் என்றே அழைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 24 சனிக்கிழமை வத்திக்கானில் உரோம் மறைமாவட்ட குருக்களாக திருநிலைப்படுத்தப்பட இருக்கும் திருத்தொண்டர்கள் 14 பேரை சந்திக்க வேண்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லேசான காய்ச்சல் காரணமாக தனது இன்றைய சந்திப்புக்களைத் தவிர்த்துள்ளார். உரோம் மறைமாவட்ட திருத்தொண்டர்களுக்கான திருத்தந்தையின் கருத்துக்கள் அவர்களுக்கு எழுத்து வடிவில் வழங்கப்பட்டுள்ளன.

நம்பிக்கையின் உடன்பணியாளர்களாக...

தாயாம் திருஅவை தலைவர்களாக அல்ல மாறாக நம்பிக்கையின் உடன்பணியாளர்களாக மாற வேண்டும் என்றே குருக்களை அழைக்கின்றது என்றும், திருஅவை வலியுறுத்துவது போல ஒன்றிப்பின் மறைபொருளாகவும், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பணிவின் அடையாளமாகவும், சான்றாகவும், அருள்பணியாளர்கள் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனித்தனியாக அல்ல குழுவாக, உடன்சகோதரர்களுடன் மட்டுமான குழுவாக அல்ல, எல்லாருக்குமான அருள்பணியாளராக, தன்னிறைவு பெற்றவர்களாக அல்ல தொடர்ந்து பயிற்சி பெறுபவர்களாக தங்களை திருத்தொண்டர்கள் நினைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பயிற்சி பெறுபவர்களாகவும், திறந்த இதயம் கொண்டவர்களாகவும், உடன்அழைக்கப்பட்டவர்கள் மற்றும் அர்ப்பணவாழ்வில் வழிகாட்டுபவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களாகவும், தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை நிர்வகிக்கும் சோதனையில் விழாமல் இருப்பவர்களாகவும்வாழவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இறைமக்களுக்கு பணியாற்றுபவர்களாக...

பணியாற்றும் மனப்பான்மை குருத்துவ வாழ்வின் அடிப்படை என்றும், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் என்னும் நற்செய்தி வரிகளுக்கு ஏற்ப திருத்தொண்டர்கள் வாழவேண்டும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணித்துவ வாழ்வின் அடித்தளமான இப்பணி மனப்பான்மையை  உயர் நிலை மனசாட்சி என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு நாளும் காலையில் ஆண்டவரே இன்று நான் பணியாற்ற எனக்கு உதவியருளும் என்று செபிக்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அன்றைய நாளின் முடிவில், ஆன்ம ஆய்வுசெய்து ஆண்டவரே பிறர்ப்பணிகளை விட எனது தனிப்பட்ட செயல்களில் ஈடுபட்டதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்போம் என்றும், பணியாற்றுதல் என்பது எப்போதும் பிறருக்கு உதவுவதற்காகத் தயார் நிலையில் இருப்பது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தூயஆவியின் வழிகாட்டுதலின்கீழ் இருப்பவர்களாக...

நம்மீது பொழியப்படும் தூயஆவிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வழும் போது நமது வாழ்வும் திருத்தூதர்களின் வாழ்வைப்போல கடவுளைச் சார்ந்ததாக இருக்கும் என்றும், இதற்கு மாறாக நமது சொந்த ஆற்றலை நம்புவது என்பது மிகவும் கடினமான வாழ்வாக அமையும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2024, 14:39