தேடுதல்

கடவுளை அடையாளப்படுத்தும் இயேசுவின் செயல்

இறைத்தந்தை அன்புமிக்கவர் நம்மைத்தேடி வருபவர் நமது நோய்களைத் தொட்டு குணமாக்குபவர் என்பதனை இயேசு நமக்கு எடுத்துரைக்கின்றார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுள் எப்போதும் நம் அருகில் இருக்கின்றார், அருகிருப்பு, இரக்கம், மென்மை என்னும் அணுகுமுறைகள் வழியாக இரக்கத்துடன் நம் அருகிலிருந்து நம்மை மன்னிக்கின்றார் என்றும், காயம்பட்ட மனிதகுலத்தை சந்திக்கும் இயேசுவின் செயல் கடவுளை அடையாளப்படுத்துகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையில் இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுக்காலத்தின் ஐந்தாம் வார நற்செய்தி வாசகம் குறித்து எடுத்துரைத்தார்.

தொழுகைக்கூடத்தை விட்டு வெளியேறிய இயேசு சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்துகின்றார், நகர் முழுதும் உள்ள நோயாளிகள், பேய்பிடித்தவர்கள் என, அனைவரையும் குணப்படுத்துகின்றார், விடியற்காலையில் எழுந்து செபிக்கின்றார், கலிலேயா முழுதும் சென்று போதிக்கின்றார் என்று இயேசுவின் செயல்பாடுகள் அனைத்தையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காயம்பட்ட மனிதகுலத்தைச் சந்திக்கச் செல்லும் இயேசு தந்தையின் முகத்தைக் வெளிக்காட்டுகிறார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கடவுள் எங்கோ தொலைதூரத்தில் இருப்பவர் என்ற எண்ணத்தை மாற்றி கடவுள் நம் அருகில், நமக்காக இருக்கின்றார் என்பதைத் தனது செயல்களினால் இயேசு எடுத்துரைக்கின்றார் என்றும் கூறினார்.

இறைவார்த்தையானது தொழுகைக்கூடத்தில் எடுத்துரைக்கப்பட்ட பிறகு மக்களைச் சென்றடைந்து, அவர்களைத் தொட்டு குணப்படுத்துகின்றது என்பதை இயேசு தனது செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இதன் வழியாக இறைத்தந்தை, அன்புமிக்கவர், நம்மைத்தேடி வருபவர், நமது நோய்களைத் தொட்டு குணமாக்குபவர் என்பதனை இயேசு நமக்கு எடுத்துரைக்கின்றார் என்றும் கூறினார்.

ஒவ்வொரு நாளும் நற்செய்தியின் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளை அறிந்து மனம்மாறவும், கடவுள் அன்பானவர், இரக்கமுள்ளவர் நம் அருகில் இருப்பவர் மென்மையானவர் என்பதை அறிந்து கொள்ளவும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுளின் உண்மையான முகத்தை நாம் கண்டுகொள்ளும்போது, நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக, நம்பிக்கையையும் கடவுளின் குணப்படுத்தும் ஆற்றலையும் எடுத்துச்செல்பவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்வோம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2024, 13:45