தேடுதல்

Notre Dame பல்கலைக் கழகத்தின் தலைவர் மற்றும் அதன் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் திருத்தந்தை Notre Dame பல்கலைக் கழகத்தின் தலைவர் மற்றும் அதன் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

கல்வி வழி முழுமனித வளர்ச்சி காண்போம்! : திருத்தந்தை பிரான்சிஸ்

கத்தோலிக்கக் கல்வியாளர்களும் மாணவர்களும் பொதுவாக கற்றலின் மதிப்பை மட்டுமல்ல, குறிப்பாக கத்தோலிக்க அறிவுசார் பாரம்பரியத்தின் வளமையையும் ஆழமாகப் பாராட்டுவதற்கு அழைக்கப்படுகிறார்கள்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒருவருக்கொருவர் இசைவான சகவாழ்வு, சகோதர ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவற்றைக் கற்பிப்பதன் வழியாகச் சிறந்ததொரு உலகைக் கட்டியெழுப்ப கத்தோலிக்கக் கல்வி நம்மை அர்ப்பணிக்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

பிப்ரவரி 1, இவ்வியாழனன்று, அமெரிக்காவின் இந்தியானவிலுள்ள Notre Dame பல்கலைக் கழகத்தின் தலைவர் மற்றும் அதன் அறக்கட்டளை உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, மூன்று முக்கியமான தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அறிவு 

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் இயல்பிலேயே கல்விப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மூலம் அறிவின் முன்னேற்றத்தைத் தொடர உறுதிபூண்டுள்ளன என்று கூறிய திருத்தந்தை, உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில், இது ஒரு கூட்டு மற்றும் குறுக்கு-ஒழுங்கு அணுகுமுறையை உள்ளடக்கியது என்றும்,  உண்மையில், கத்தோலிக்க நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இந்தக் கல்வி முயற்சிகள் நம்பிக்கை மற்றும் பகுத்தறிவின் உள்ளார்ந்த நல்லிணக்கத்தின் உறுதியான நம்பிக்கையில் அடித்தளமாக  உள்ளன என்றும் விளக்கினார்.

இதன் விளைவாக, கல்வியாளர்களும் மாணவர்களும் பொதுவாக கற்றலின் மதிப்பை மட்டுமல்ல, குறிப்பாக, கத்தோலிக்க அறிவுசார் பாரம்பரியத்தின் வளமையையும் ஆழமாகப் பாராட்டுவதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

இதயம்

ஒரு கத்தோலிக்கப்  பல்கலைக்கழகத்தின் பணி, மனதை, அறிவை விரிவுபடுத்துவது மட்டுமல்ல; அது இதயத்தையும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, முழு பல்கலைக்கழகக் குழுமமும் மற்றவர்களுடன், குறிப்பாக இளைஞர்களுடன், ஞானத்துடனும் மாண்புடனும் வாழ்க்கையின் பாதைகளில் செல்லவும், உண்மை, நன்மையான மற்றும் அழகான அனைத்திற்கும் திறந்த மனப்பான்மையை வளர்ப்பதற்கும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் விண்ணப்பித்தார்.

மேலும் இத்தகையதொரு நிலை, கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உண்மையான உறவுகளை வளர்ப்பதை  உள்ளடக்கியுள்ளது என்றும்,  இதனால் அவர்கள் ஒன்றித்துப் பயணித்து மனித வாழ்க்கையில் அனுபவிக்கும் ஆழமான கேள்விகள், தேவைகள் மற்றும் கனவுகளைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

கரங்கள்

ஒருவருக்கொருவர் இசைவான சகவாழ்வு, சகோதர ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவற்றைக் கற்பிப்பதன் வழியாகச் சிறந்ததொரு உலகைக் கட்டியெழுப்ப கத்தோலிக்கக் கல்வி நம்மை அர்ப்பணிக்கிறது என்று எடுத்துக்காட்ட்டிய திருத்தந்தை, நாம் நமது நிறுவனங்களின் சுவர்கள் அல்லது எல்லைகளுக்குள்ளேயே இருக்க முடியாது, ஆனால் சுற்றுப்புறங்களுக்குச் சென்று, நமக்கு அடுத்திருப்போரின் இல்லங்களில் கிறிஸ்துவைச் சந்திக்கவும் சேவை செய்யவும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் வழியாக, பின்தங்கிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆர்வத்தை அதன் மாணவர்களில் வளர்ப்பதற்கான பல்கலைக்கழகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை நான் ஊக்குவிக்கிறேன் என்றும் அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2024, 15:59