தேடுதல்

Madrid சபை அருள்பணித்துவ மாணவர்களுடன் திருத்தந்தை Madrid சபை அருள்பணித்துவ மாணவர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

மேய்ப்புப்பணிக்கான கனவு வேரூன்றப்படும் இடம் அருள்பணித்துவ இல்லம்

தங்களது தலத்திருஅவையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் துணிவுடன் செயலாற்றிய இஸ்பானிய ஆயர்கள் பலர், அருள்பணித்துவ இல்லத்தை தங்களது மேய்ப்புப்பணிக்கான கனவு வேரூன்றப்பட்ட இடமாக, வளரும் இடமாகப் பார்த்தார்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

அருள்பணித்துவ இல்லத்தை தங்களது மேய்ப்புப்பணிக்கான கனவு வேரூன்றப்பட்ட இடமாகவும், வளரும் இடமாகவும் பார்க்கவேண்டும் என்றும், திருஅவையாக, கிறிஸ்துவின் உடலாக நாம் மாற விரும்பினால், நற்கருணை வடிவில் இயேசு உருமாற்றமாகி நம்மிடையே இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

பிப்ரவரி 3 சனிக்கிழமை வத்திக்கானின் தூய கிளமெந்தினா அறையில் இஸ்பெயின் நாட்டின் Madrid சபை அருள்பணித்துவ மாணவர்கள் ஏறக்குறைய 85 பேரை சந்தித்த போது தனது கருத்துக்களை எழுத்து வடிவில் அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

நமது வாழ்வின் மையம், அடித்தளம், மூலைக்கல் என எல்லாமாக இருப்பவர் கடவுள் என்பதை திருநற்கருணை வழிபாடு நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், கிறிஸ்துவே நமது பொறுமை, உறுதி, இனிமை, நமக்காகக் காத்திருப்பவர், நமது பயணத்தில் நம்மை ஊக்குவிப்பவர், நம்மை நன்கு அறிந்தவர், தெளிந்துதேர்தலில் நமக்கு உதவுபவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் தனது மக்களுக்கு இதயப்பூர்வமாக நல்ல மேய்ப்பர்களைக் கொடுக்க விரும்புகின்றார் என்றும், இயேசுவிடமிருந்து நாம் விடயங்களை கற்றுக்கொள்வதை விட அவரை வரவேற்கின்றோம், அவரைப் பற்றிக்கொள்கின்றோம், மற்றவர்களிடம் அவரைக் கொண்டு செல்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் நமக்குக் கற்றுத்தரும் மிக உயர்ந்த பாடம் மனித நேயம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நம்மேல் கொண்ட அன்பின் காரணமாக இயேசு மனிதஉரு எடுத்து நமக்காக பூமிக்கு வந்தார் என்றும், அவர் சாந்தகுணம் மற்றும் தாழ்ச்சி நிறைந்த இதயம் கொண்டவர் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.

பகுத்தறிவு, அறிவியல் மற்றும் விழிப்புணர்வை அருள்பணித்துவ வாழ்வில் திறவுகோல்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், துறவு இன்றி எந்தப் பயனும் இல்லை, ஒரு கலைப் படைப்பை உருவாக்க தூண்டுதல், முயற்சி மற்றும்  உழைப்பும் தேவை என்றும் வலியுறுத்தினார்.

இயேசு நம் இதயத்துடன் பேசுவதை உணர பாலைவன அனுபவம் பெறவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உலக விஷயங்கள் நிறைந்ததாக நம் உள்ளம் இருந்தால் கடவுள் நம் இதயத்துடன் பேசுவதையோ, நமது உள்ளக்கதவை தட்டுவதையோ நம்மால் கண்டுணர முடியாது என்றும், அமைதி, செபம், தவம், துறவு, நோன்பு, மிக அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2024, 14:58