தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - உலகப் போக்கிலான வருத்தம்

பிப்ரவரி 7 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மனவருத்தம் என்னும் தீயொழுக்கம் பற்றிய தனது கருத்துக்களை மறைக்கல்வி உரையில் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிப்ரவரி 7 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மனவருத்தம் என்னும் தீயொழுக்கம் பற்றிய தனது கருத்துக்களை மறைக்கல்வி உரையில் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதயத்தைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வோம், ஆன்மிகப்போராட்டம், பெருந்தீனி, சிற்றின்பஆசை, பேராசை, சினம், பற்றிய தலைப்புக்களில் கடந்த வாரங்களில் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அதன் தொடர்ச்சியாக வருத்தம் என்பது பற்றி இவ்வார மறைக்கல்வி உரையில் எடுத்துரைத்தார்.

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய தனது தொடர் மறைக்கல்வி உரையின் 7ஆம் பகுதியாக வருத்தம் என்னும் தீயொழுக்கம் பற்றிய தனது கருத்துக்களை திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான திருப்பயணிகள் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தையின் வருகைக்காக மகிழ்வுடன் காத்திருந்தனர். கரவொலியும் மகிழ்வொலியும் எழுப்பி திருத்தந்தையை திருப்பயணிகள் வரவேற்க, கரமசைத்து அனைவரையும் வாழ்த்தியபடியே  அரங்கத்தை வந்தடைந்தார் திருத்தந்தை. அதன்பின் சிலுவை அடையாளத்துடன் மறைக்கல்வி உரைக் கூட்டத்தை துவக்கிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து திருப்பாடல் எண் 13 இல் உள்ள "உதவிக்காக மன்றாடல்" என்னும் தலைப்பில் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, இஸ்பானியம் போன்ற பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

திருப்பாடல் 13: 2,3,6

ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்? எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்? நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது; எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்? என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்; என் விழிகளுக்கு ஒளியூட்டும். நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  வருத்தம் என்னும் தீயொழுக்கம் குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய நமது தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நாம் வருத்தம் என்னும் தீயொழுக்கம் பற்றிக் காண்போம். ஆன்மாவின் வருத்தம் என்று அழைக்கப்படும் இந்த சோகமானது, மனிதன் தனது மகிழ்ச்சியை உணரவிடாமல் தடுக்கின்றது.   

வருத்தம் என்பதில் உள்ள இரண்டு வேறுபாட்டை நமது முன்னோர்கள் நன்கு விளக்கியுள்ளனர். ஏனெனில் வருத்தம் என்பதில் கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான மனவருத்தம் ஒன்றும் உள்ளது. கடவுளின் அருளால் அத்தகைய மனவருத்தமானது மகிழ்ச்சியாக மாறுகின்றது. மனமாற்றத்தின் பயணமான இந்த மனவருத்தமானது ஒருபோதும் நிராகரிக்கப்படக் கூடாது. இரண்டாவது வருத்தமானது ஆன்மாவின் வருத்தமாக, மனச்சோர்வடைந்த நிலையில் நம்மை வைத்திருக்கின்றது. இரண்டாவது வருத்தத்தைக் குறித்து நாம் உறுதியுடனும் துணிவுடனும் போராடவேண்டும்.

1.மீட்பை அளிக்கும் மனவருத்தம்

நமக்கு நன்மையை, மீட்பை அளிக்கின்ற ஒரு வருத்தத்தை குறித்து நாம் சிந்திக்க நற்செய்தியில் உள்ள ஊதாரி மைந்தன் உவமையைக் குறித்து நினைத்துப் பார்ப்போம். தந்தையிடமிருந்து சொத்துக்களைப் பிரித்து ஊதாரித்தனமாக அத்தனையையும் இழந்த இளையமகன் மனம் வருந்துகின்றார். தனது வாழ்க்கை சீரழிந்த நிலையில் இளையமகன் உணர்ந்த மனக்கசப்பானது, அவனது நிலையைப் பற்றி சிந்திக்கவும், தனது தந்தையிடம் திரும்புவதைப் பற்றி சிந்திக்கவும் வைக்கின்றது. எதுவும் இல்லாத நிலைமையில் தந்தையிடம் திரும்பி வருகின்றார். தந்தையும் அவர்மேல் பரிவு கொண்டு அவரை ஏற்கின்றார். நம் பாவங்களுக்காக மனம் வருந்துவதும், பலவீனங்களினால் நாம் வீழ்ந்ததைக் குறித்தும் மனம் வருந்துவதும், கடவுள் நம்மில் கண்ட கனவின் தூய்மையை நாம் இழந்துவிட்டோம் என்பது குறித்து நாம் வருந்தி அழுவதும் கடவுளின் அருளே.

2. ஆன்மாவின் நோயான வருத்தம்

ஆன்மாவின் நோயாக் கருதப்படும் வருத்தமானது இரண்டாவது வருத்தமாகும். இது ஒரு மனிதனின் விருப்பம் மற்றும் நம்பிக்கை மறையும்போது இதயங்களில் உருவாகின்றது. இதற்கு உதாரணமாக எம்மாவூஸ் சீடர்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். இரண்டு சீடர்கள் இதயத்தில் துயரத்துடனும் ஏமாற்றத்துடனும் எருசலேமை விட்டு வெளியேறி எம்மாவூஸ் நோக்கிச் செல்கின்றனர். இதனை தங்களுடன் வரும் அன்னியர்  யார் என்று தெரியாமலேயே அவரிடம் எடுத்துரைக்கின்றனர். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம் என்ற அச்சீடர்களின் வார்த்தைகள் இதனை வெளிப்படுத்துகின்றன. வருத்தத்தின் பரிமாணமானது அனுபவ இழப்பை ஏற்படுத்துகின்றது. மனிதனின் இதயத்தில் எழும் நம்பிக்கைகள் பல நேரங்களில் சிதைந்து விடுகின்றன. நம்மால் பெற முடியாத அடையமுடியாத ஒன்றின் விருப்பமாகக் கூட அவை வெளிப்படும். நமது உணர்வுகள் இழக்கப்படுவது போன்ற முக்கியமான நேரங்களில் இதயமானது பள்ளத்தில் விழுவது போன்ற நிலையை அடைகின்றது. உணர்வுகள் ஊக்கமிழந்து, ஆற்றல் பலவீனமடைந்து, மனச்சோர்வு, துன்பம் போன்றவற்றால் ஆட்கொள்ளப்படுகின்றோம். நாம் அனைவரும் நமக்குள் ஏற்படும் வருத்தம் என்னும் உணர்வை சோதனையைக் கடந்து செல்ல முயலவேண்டும். ஏனெனில் வாழ்க்கையானது வீழ்ச்சியடையும் பல கனவுகளை நாம் காண வைக்கின்றது. இதனாலேயே பல நேரங்களில் நாம் வருத்தமடைகின்றோம். இத்தகைய வருத்தமான சூழலில் சிலர் நம்பிக்கையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் மற்றும் சிலர் தீயோனிடமிருந்து வரும் மனக்கசப்பு இதயத்தை பாதிக்க அனுமதிக்கின்றனர்.  விருப்பமின்மையின் விருப்பமான வருத்தம் குறித்து நாம் கவனமாக இருப்போம். வருத்தப்படுவது என்பது மிகவும் கசப்பான, இனிப்பற்ற மோசமான மிட்டாய் சுவைப்பது போன்றது.         

நீடித்த வருத்தமானது ஆன்மிக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. இது ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மில் உருவாக்காது மாறாக, மிகக் குறைவான ஒரு கிறிஸ்தவ விழுமியங்கள் கொண்டவராகவே நம்மை மாற்றும். நம் ஒவ்வொருவரின் கடந்த காலத்திலும் ஏற்பட்ட வருத்தத்திலிருந்து நாம் குணமடைய வேண்டி உள்ளது. இயற்கையான உணர்வான வருத்தம் அதிலிருந்து மாறி தீய மனநிலையாக மாறுகின்றது. வருத்தம் என்பது ஒரு தந்திரமான அலகை. இதனை பாலைவனத் தந்தையர்கள் இதயத்தின் புழு என்று கூறுகின்றனர். ஏனெனில் வருத்தத்தைக் கொண்டிருப்பவர்கள் இதயத்தை, அப்புழுவானது அரித்து ஒன்றுமில்லாமல் செய்கிறது. மிகவும் அழகான இந்த உருவகமானது, வருத்தத்தினால் நாம் அடைய இருக்கும் விளைவுகளை எடுத்துரைக்கின்றது. எனவே வருத்தத்தைக் குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும்.

உயிர்த்த இயேசு தரும் மகிழ்ச்சியை நாம் நினைத்து வருத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நாம் வருத்தமாக இருக்கும்போது என்ன செய்யவேண்டும்? ஒரு நிமிடம் நின்று நான் அடையும் வருத்தம் நல்லதா அல்லது தீமையைத் தருவதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கேற்றவாறு நாம் செயல்களை மாற்றிக்கொள்ளவேண்டும். மிகவும் மோசமான வருத்தமானது நம்மை அவநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  சுயநலத்தையும், குணப்படுத்த முடியாத, தான் என்ற உணர்வுக்கும் நம்மை இட்டுச்செல்லும் வருத்தம் குறித்து நாம் அனைவரும் மிக கவனமாக இருக்கவேண்டும். அனைவருக்கும் நன்றி  

இவ்வாறு தனது கருத்துக்களை எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்தினார். இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளைக் குறிப்பாக, தங்கள் சபையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் Pious Disciples of the Divine Master சபையாரை வாழ்த்தினார். தங்களது துறவறக் கொள்கைகளை இன்னும் அதிகமாக உறுதிப்படுத்துவதற்கும், கடவுளுக்கும் உடன் வாழும் சகோதரகளுக்கும் தங்களது அர்ப்பணிப்பை இன்னும் அதிகமதிகமாக வெளிப்படுத்துவதற்கும் ஒரு தூண்டுதலாக இந்த நூற்றாண்டு அமையட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும் 25ஆவது ஆண்டு குருத்துவ அர்ப்பணிப்பு ஆண்டை நினைவுகூரும் பேராயர் Giovanni Tani அவர்களையும் அவரோடு உடன் வந்திருந்த அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், 25ஆவதுஆண்டு ஜூபிலியானது, கிறிஸ்துவுக்கும் திருஅவைக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.  

அருள்பணித்துவ மாணவர்கள், அருள்தந்தையர்கள் என வந்திருந்த அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இறைத்தந்தையின் உதவியுடன் வளரவும் செயல்களைச் செய்யவும் மனித உடன்பிறந்த உணர்வுடன் ஒற்றுமையாக சான்றுள்ள வாழ்க்கை வாழவும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் பிப்ரவரி மாதம் 11 ஞாயிற்றுக்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்படும் தூய லூர்து அன்னையின் திருவிழாவை நினைவுகூர்ந்து அன்னை மரியா தனது மென்மையான தாய்மை உணர்வினால் நம் பயணத்தில் நம்முடன் வருவார் என்றும் எடுத்துரைத்தார்.

போரையும் போரினால் பாதிக்கப்படும் மக்களையும் நாம் மறந்துவிடவேண்டாம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உக்ரைன் ,இஸ்ரயேல், பாலஸ்தீனம், ரோஹிஞ்கியா என்று பல இடங்களில் போர் நடைபெற்று வருகின்றது பாதிக்கப்படும் அத்தகைய மக்களுக்காக சிறப்பாக செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

எப்போதும் தோல்வியைத்தரும் போர் நிறுத்தப்பட செபிப்போம், அமைதிக்காக தொடர்ந்து செபிப்போம், அமைதி நமக்கு தேவை என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து, கூடியிருந்த மக்களுக்குத் தன்அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2024, 08:49

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >