தேடுதல்

திருச்சிலுவை திருச்சிலுவை  

தவக்காலம் விடுதலை தரும் காலம் : திருத்தந்தையின் தவக்காலச் செய்தி!

கடவுள் தம் மக்களை வடிவமைக்கிறார், நம் அடிமைத்தனத்தை விட்டுவிட்டு, மரணத்திலிருந்து வாழ்வுக்குக் கடந்து செல்லும் பாஸ்காவை அனுபவிக்க அவர் நமக்கு உதவுகிறார் : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூஓசைமாணிக்கம் - வத்திக்கான்

"நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்" (காண்க விப 20:2) என்ற கடவுளின் வார்த்தைகளை மனதில் கொண்டு, இத்தவக்காலத்தை அடிமை வாழ்விலிருந்து சுதந்திர வாழ்விற்கு அழைக்கும் பெரியதொரு காலமாக வரவேற்போம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 1, இவ்வியாழனன்று, தான் வழங்கியுள்ள இவ்வாண்டிற்கான தவக்காலச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலம் என்பது மனமாற்றத்தின் காலம் என்றும் அருளின் காலம் என்றும் உரைத்துள்ளார்.

சுதந்திர வாழ்விற்கான அழைப்பு என்பது மிகவும் தேவையான ஒன்று, அதற்கு உடனடியாக நம்மிடம் பதில் இல்லை என்றாலும், அது நமது பயணத்தின் ஒரு பகுதியாக முதிர்ச்சியடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை,  பாலைவனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்கள் அடிக்கடி எகிப்தை நினைத்து ஏங்கியவர்களாக,  கடவுளுக்கும் மோசேவுக்கும் எதிராக முணுமுணுத்து அடிமைநிலையிலேயே தங்கள் வாழ்வைத் தொடர விரும்பியதுபோல, இன்றும், கடவுளுடைய மக்கள் ஒரு அடக்குமுறை அடிமைத்தனத்தைப் பற்றிக்கொள்ள முடியும், ஆனால் அடிமை வாழ்வுக்கு அழைக்கும் இந்நிலையை நாம் விட்டுவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தவக்காலம் என்பது அருளின் காலமாகும், அதில் பாலைவன அனுபவம் மீண்டும் ஒருமுறை வரும், ஆனால் இறைவாக்கினர் ஓசேயாவின் வார்த்தைகளில் கூறவேண்டுமாயின், அது கடவுளை முழுமையாக அன்புகூரும் இடம்  (காண்க ஒசே 2:16-17) என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கடவுள் தம் மக்களை வடிவமைக்கிறார், நம் அடிமைத்தனத்தை விட்டுவிட்டு, மரணத்திலிருந்து வாழ்வுக்குக் கடந்து செல்லும் பாஸ்காவை அனுபவிக்க அவர் நமக்கு உதவுகிறார் என்றும், ஒரு மணமகனைப் போல, இறைவன் நம்மை மீண்டும் ஒருமுறை தன்னிடம் கவர்ந்திழுத்து, நம் இதயங்களோடு அன்பாகப் பேசுகிறார் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமான வாழ்வுக்குக் கடந்து செல்வதென்பது ஒரு பலனாகாதப் (abstract) பயணம் அல்ல என்றும், நமது தவக்கால கொண்டாட்டம் உறுதியானதாக இருக்க வேண்டுமெனில், உண்மைக்கு நம் கண்களைத் திறக்க நாம் ஆசைப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆண்டவராகிய கடவுள் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் மோசேவுக்குத் தோன்றியபோது (காண்க விப 3:7-8), “எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்” என்று கூறி அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுதலை வாழ்வுக்கு கொண்டு செல்ல அவருக்கு அழைப்புவிடுகிறார் என்று விளக்கிய திருத்தந்தை, அவ்வாறே, இன்றும், ஒடுக்கப்பட்ட எத்தனையோ சகோதரர் சகோதரிகளின் அழுகுரல்கள் விண்ணைநோக்கி எழுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அழுகுரல்களை இன்று நாம் கேட்கிறோமா? அவை நம்மை பாதிப்படையச் செய்கின்றவா? அவை நம்மை அவர்களை நோக்கி நகர்த்துகின்றனவா? என்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்று உரைத்த திருத்தந்தை, தொடக்கத்திலிருந்தே  ஒருவரையொருவர் பிணைக்கும் உடன்பிறந்த உறவு நிலையிலிருந்து பல காரியங்கள்  நம்மை ஒருவர் ஒருவரிடமிருந்து ஒதுக்கி வைக்கின்றன என்றும் கவலை தெரிவித்தார்.

உலகமயமாக்கல் குறித்த எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக நான் Lampedusa-வுக்குச் சென்றபோது "நீ எங்கே இருக்கின்றாய்?" (தொநூ 3:9) மற்றும் "உன் சகோதரன் எங்கே?" (தொநூ 4:9) என்ற இரண்டு கேள்விகளை எழுப்பி அவர்களைச் சிந்திக்க அழைத்தேன் என்று கூறிய திருத்தந்தை, இந்த இரண்டு கேள்விகளுக்கும் மீண்டும் ஒருமுறை செவிசாய்ப்பதன் வழியாக, இன்றும் நாம் பார்வோனின் ஆட்சியில் அதாவது அடிமைத்தளையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தால், நமது தவக்காலப் பயணம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது உறுதி என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

உண்மையான திருமுழுக்கு நமது விடுதலைக்கான செயல்முறையைத் தொடங்கிவிட்டது, ஆனால் அடிமைத்தனத்திற்கான விவரிக்க முடியாத ஏக்கம் நம்மில் உள்ளது என்றும், நமக்குப் பழக்கமான காரியங்களில் பாதுகாப்பைத் தேடி நாம் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருந்தால், அது நமது சுதந்திர வாழ்விற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்வோம் என்றும் நினைவூட்டிவுள்ளார் திருத்தந்தை.

ஆகவே, "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்" (காண்க விப 20:2) என்ற கடவுளின் வார்த்தைகளை மனதில் கொண்டு, இத்தவக்காலத்தை அடிமை வாழ்விலிருந்து சுதந்திர வாழ்விற்கு அழைக்கும் பெரியதொரு காலமாக வரவேற்போம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் அடிமைத்தனத்தில் மீண்டும் விழக்கூடாது என்ற தனிப்பட்ட முடிவில் நமது சுதந்திரம் முதிர்ச்சியடையும் இடம் பாலைவனம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை,  தவக்காலத்தில், நீதிக்கான புதிய அளவுகோல்களையும், இன்னும் பயணிக்காதப் பாதையில் ஒரு குழுமமாக முன்னேறக்கூடிய சமூகத்தையும் காண்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விடுதலைப்பயண நூலும், பாலைவனத்தில் இயேசு மேற்கொண்ட சோதனைகளும் விடுதலை வாழ்வுக்கான பயணத்தில் போராட்டம் இருக்கும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" (மாற் 1:11), மற்றும் "என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப. 20:3) என்று கூறும் கடவுளின் குரல் எதிரியான அலகையாலும் அவனது பொய்களாலும் எதிர்க்கப்படுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தத்தை.

நாம் பணத்துடன், சில திட்டங்கள், யோசனைகள் அல்லது இலக்குகள், நமது நிலை, ஒரு பாரம்பரியம், சில தனிநபர்களிடம் கூட இணைந்திருக்கலாம். ஆனால் இவைகள் நம்மை முன்னேறச் செய்வதற்குப் பதிலாக, நம்மை முடக்குகின்றன. உரையாடலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மோதலை உருவாக்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தவக்காலம் செயல்பட வேண்டிய காலம் மற்றும் இக்காலத்தில், செயல்படுவது என்பது ஓர் இடைநிறுத்தமாகும் என்று கூறிய திருத்தந்தை, கடவுளுடைய வார்த்தையைப் பெறுவதற்காக இறைவேண்டலில் இடைநிறுத்தம் தேவை, அதாவது சற்றுநேர அமைதி வேண்டும் என்றும், அவ்வாறே, காயமடைந்த நம் சகோதரர் அல்லது சகோதரியின் முன்னிலையில் நல்ல சமாரியன் போல அவர்களின் தேவைகளை கவனித்துக்கொள்வதில் நாம் இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

கடவுளை அன்பு செய்வதும், நமக்கு அடுத்திருப்போரை அன்பு செய்வதும் ஒன்றுதான் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை. இந்தக் காரணத்திற்காக, இறைவேண்டல், தர்மம் மற்றும் உண்ணாநோன்பு மூன்றும் இத்தவக்காலத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைகின்றன  என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

கடவுளின் முன்னிலையில், நாம் சகோதரர் சகோதரிகளாகவும், ஒருவருக்கொருவர் அதிக உணர்திறன் கொண்டவர்களாகவும் மாறுகிறோம் என்று உரைத்த திருத்தந்தை, இது கடவுளின் கனவு, வாக்குறுதியளிக்கப்பட்ட தேசம், நம் அடிமைத்தனத்தை விட்டுவிட்டு சுதந்திர வாழ்வை நோக்கியப் பயணம் என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்தின் வடிவத்தை, இந்தக் காலங்களில் நாம் மீண்டும் கண்டுபிடித்து அதனை வளர்த்து வருகிறோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, தவக்காலம் என்பது சமூகத்துவ (communitarian) முடிவுகளின், சிறிய மற்றும் பெரிய முடிவுகளின் காலமாக உள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகத்தையும் அதன் உறுப்பினர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறைகளை மறுபரிசீலனை செய்ய ஒதுக்கப்பட்ட தருணங்களை வழங்கவும், சமூகத்தில் அவர்களின் இருப்பையும், அதன் முன்னேற்றத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்பையும், ஆராய்வதற்கு நான் அழைப்புவிடுகிறேன் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

உண்மையில், நாம் மூன்றாம் உலகப் போரைத் சிறிது சிறிதாக அனுபவித்து வருகிறோம். என்றாலும்கூட, நம் உலகம் அதன் மரணத் தறுவாயில் இருப்பதைப் போல இல்லாமல், புதிதாய்ப் பிறக்கும் செயல்முறையில் இருப்பதைக் காணும் வலிமையைக் கண்டுபிடிப்போம், முடிவில் அல்ல, ஆனால் வரலாற்றின் ஒரு பெரிய புதிய காலத்தின் தொடக்கத்தில் என்று கூறி தனது தவக்கால செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2024, 15:33