தேடுதல்

புனித பூமி புனித பூமி  (AFP or licensors)

புனிதபூமி சகோதர சகோதரிகளுக்குத் திருத்தந்தையின் கடிதம்

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7 ஆம் நாள் புனித பூமியில் தொடங்கிய வன்முறைச் சூழலானது, பிரிவினை மற்றும் வெறுப்பின் காரணமாக பல்வேறு துயரமான செயல்களை ஏற்படுத்துகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

புனித பூமி மற்றும் அதில் வாழும் இஸ்ரயேல், பாலஸ்தீனியர் என அனைத்து மக்களோடும் இதயத்தளவில் தான் உடன் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தனது மற்றும் திருஅவையின் இதயத்தருகில் இருக்கின்றனர் என்றும் கடிதம் ஒன்றில்  தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில், இஸ்ரயேலில் இருக்கும் யூத சகோதர சகோதரிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய கடிதமானது யூத-கிறிஸ்தவ உரையாடலின் இறையியலாளர் கர்மா பென் ஜோஹான் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் போர்களும் பிளவுகளும் அதிகரித்து வரும் மிகவும் கடினமான துயரமான சூழலில் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், நடந்து கொண்டிருக்கும் உலகப்போர்களினால் உலகம் பல துண்டுகளாகி, மக்களின் வாழ்வில் துயரமான பல விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7 ஆம் நாள் புனித பூமியில் தொடங்கிய இந்த வன்முறைச் சூழலானது, பிரிவினை மற்றும் வெறுப்பின் காரணமாக பல்வேறு துயரமான செயல்களை ஏற்படுத்துகின்றது என்றும், அவை அனைத்தும் தன் இதயத்தைக் கிழிக்கும் அளவிற்கு வேதனையைத் தருகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அனைவரும், புனித பூமியில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிந்து, தங்களது அன்பையும் ஆன்மிக நெருக்கத்தையும் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள் என்று  குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், வன்முறை மற்றும் போரானது, பிளவுமனப்பான்மை, யூதர்கள் எதிர்ப்பு, யூதமத எதிர்ப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளுக்கு எதிரான பாவம்

திருஅவை மற்றவர்களுடன் வைத்திருக்கும் குறிப்பிட்ட மற்றும் தனிப்பட்ட உறவையும் அர்ப்பணிப்பையும் மறைத்துவிடாமல், ஒன்றாக இணைக்கின்றது என்றும், யூத மற்றும் யூதமத எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வடிவங்களையும் கடவுளுக்கு எதிரான பாவம் என்று நிராகரித்து, உடன்படிக்கையின் மக்கள் ஒவ்வொருவருடனும் புதிய பாதையை உருவாக்க அழைக்கின்றது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

முழு உலகத்தையும் ஆபத்தில் ஆழ்த்தும் போர் மற்றும் வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க, தந்தையாகிய கடவுளிடம் மன்றாடுகிறோம் என்றும், பிணையக்கைதிகள் விடுதலை பெறவும், அவர்கள் குடும்பத்தருடன் மீண்டும் சேரவும் சிறப்பாக செபிக்கின்றொம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உறுதியான மற்றும் நிலைத்த அமைதியைப் பெறுவதற்கான நம்பிக்கையில் ஒரு போதும் சோர்வடையக்கூடாது என்றும், தோல்வி மற்றும் அவநம்பிக்கையின் வடிவங்களை நிராகரித்து, நம்பிக்கையிலும் உறுதியிலும் மேம்படுவதற்கான செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

உறுதியான நம்பிக்கையின் ஒரே ஆதாரமான கடவுளை நாம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், பத்து வருடங்களுக்கு முன்பு கூறிய வார்த்தைகளான, “நம்முடைய ஆற்றல்கள் போதாது என்பதை வரலாறு கற்பிக்கின்றது. கடவுளின் உதவி நமக்குத் தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அதை நம்புகின்றோம்” என்பதனை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுப்பு மற்றும் வன்முறையின் சுழலை, நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் உடைத்தெறிய வேண்டும் என்றும், நம் கண்களை விண்ணை நோக்கி உயர்த்த வேண்டும், ஒரே தந்தையின் குழந்தைகளாக அனைவரையும் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

யூதர்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் இருவரும், நட்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் பாதையில் வாழ, தங்களையே அர்ப்பணிக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரின் முகத்திலும் கடவுளின் முகத்தை, உருவைக் கண்டு, பாதிக்கப்பட்ட உலகை மீட்பதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2024, 11:47