தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை  (ANSA)

மறைப்பணி தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

மறைப்பணி என்பது, எவ்விதச் சோர்வுமின்றி மீண்டும் மீண்டும் மக்களை நோக்கிச் சென்று அவர்கள் இறைவனைச் சந்திக்க வர அழைப்பதாகும் என்பதை திருமண விருந்து உவமை காட்டுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மறைப்பணி தினத்திற்கான செய்தியை, “எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” என்ற விவிலிய வார்த்தைகளுடன் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டின் மறைப்பணி தினத்திற்கான தலைப்பை, இயேசுவின் திருமண விருந்து உவமையிலிருந்து (மத் 22:1-14) எடுத்துள்ளதாக தன் செய்தியின் துவக்கத்தில் கூறும் திருத்தந்தை, நம் ஒன்றிணைந்த பயணத்தின் நோக்கமான, “ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்பவை இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பதை தன் முதல் பணியாகக் கொண்டுள்ளதை நினைவுபடுத்தி நிற்கின்றன என மேலும் அதில் தெரிவித்துள்ளார்.

‘போய் அழைத்துவாருங்கள்’, ‘திருமணவிருந்துக்கு’, ‘எல்லாரையும்’ என்ற மூன்று வார்த்தைகளையும் தனித்தனியாக விளக்கிமளித்து திருஅவையின் மறைப்பணிக் கடமைகள் குறித்து தன் செய்தியில் விளக்கமளித்துள்ளார் திருத்தந்தை.

இயேசுவின் உவமையில், ஏற்கனவே விருந்தாளிகளை அழைக்கச் சென்று வெற்றியின்றி திரும்பியப் பணியாளர்களை நோக்கி, மீண்டும் வெளியேச் செல்லவும், அழைத்துவரவும் கூறும் மன்னரின் வார்த்தைகள், மறைப்பணியின் முக்கியக் கருத்தைத் திறந்துகாட்டுவதாக உள்ளன என்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைப்பணி என்பது, எவ்விதச் சோர்வுமின்றி மீண்டும் மீண்டும் மக்களை நோக்கிச் சென்று அவர்கள் இறைவனைச் சந்திக்க வர அழைப்பதாகும் என்பதை இந்த உவமை காட்டுகிறது என உரைத்த திருத்தந்தை, இயேசுவின் நற்செய்தி அறிவிப்புக்காக தங்களுக்கிருப்பதையெல்லாம் துறந்து வந்திருக்கும் மறைப்பணியாளர்களுக்கு இவ்வேளையில் தன் நன்றியை வெளியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நற்செய்தியின் சான்றுகளாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயல்படவேண்டியதன் கடமையையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

தன் இரண்டாவது வார்த்தையாக, ‘திருமண விருந்துக்கு’ என்பதை எடுத்து அதற்கு விளக்கமளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வருகையால் இறையரசில் நாம் பெறும் மீட்பின் உருவகமாக நிற்கும் இந்த திருமண விருந்து, ஆதிக் கிறிஸ்தவர்களைப்போல் நாமும் இறைவன் அருகில் உள்ளார் என்ற எண்ணத்துடன் நற்செய்தி அறிவித்தலின் அவசரத் தேவையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பை தன் செய்தியில் விடுத்துள்ளார்.   

நுகர்வுக் கலாச்சாரம், தன்னல சுகம், சொத்து சேர்த்தல்,   தனியுரிமை கோட்பாடு என பல்வேறு விருந்துக்களால் ஈர்க்கப்படிருக்கும் இன்றைய உலகிற்கு இறைவன் விடும் அழைப்போ, மகிழ்வு, பகிர்தல், நீதி, உடன்பிறந்த உணர்வு என்பவைகளை உள்ளடக்கிய திருமண விருந்து என எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இவ்வாண்டு மறைப்பணி தினத்திற்கான செய்தியின் தலைப்பில் காணப்படும் ‘எல்லாரையும்’ என்ற வார்த்தையை எடுத்து, மறைப்பணி என்பது எல்லாருக்குமானது என்பதை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைமகனின் திருமண விருந்திற்கு எவ்வித வித்தியாசமும் பாராட்டப்படாமல் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஏனெனில் நம் ஒவ்வொருவருக்குமான இறைவனின் அன்பு அளவிடமுடியாதது மற்றும் முன்நிபந்தனையற்றது என்பதையும் தன் செய்தியில் நினைவூட்டியுள்ள திருத்தந்தை, திருஅவையின் நற்செய்தி அறிவிப்பு மறைப்பணிகளுக்காக அன்னைமரியாவின் பரிந்துரைகளை வேண்டுவோம் என கேட்டு தன் செய்தியை நிறைவுச் செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2024, 15:21