தேடுதல்

தூய பேதுரு பெருங்கோவில் தூய பேதுரு பெருங்கோவில்   (ANSA)

புதுமையின் கடவுளாம் இயேசுவைக் கரங்களில் ஏந்துவோம்

கடவுளுக்காகக் காத்திருப்பது என்பது நமக்கும் நமது நம்பிக்கை வாழ்விற்கும் மிக முக்கியமானது

மெரினா ராஜ் - வத்திக்கான்

சிமியோன் மற்றும் அன்னாவைப் போல, புதுமை மற்றும் வியப்பின் கடவுளை நாம் நம் கைகளில் ஏந்தி வரவேற்போம் என்றும், புதுமையின் கடவுள் ஒரு குழந்தையாக நம்முன் இருக்கின்றார் என்பதை உணர்ந்து, புதுமையை முழுமனதுடன் வரவேற்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை மாலை, உரோம் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற 28ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாள் திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அகவாழ்க்கைப் புறக்கணிப்பு மற்றும் உலகப்போக்கிற்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்ளுதல் என்னும் இரண்டு தடைகளைக் குறித்து தனது மறையுரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளார்ந்த வாழ்வின் காத்திருப்பில், நற்செய்தியின் வழியில், ஒளியும் நம்பிக்கைவாழ்வுமான இயேசுவைக் கைகளில் ஏந்தக் காத்திருப்போம் என்றும் கூறினார்.

கடந்த காலம் எதிர்காலத்தை வரவேற்கின்றது, பழமை புதியதை வரவேற்கத் தூண்டுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சிமியோனும் அன்னாவும் காத்திருப்பின் அடையாளமாகக் காட்சியளிக்கின்றார்கள் என்றும், பொறுமையுடன் காத்திருத்தல், தூய ஆவியினால் பெற்ற விழிப்புணர்வு, விடாமுயற்சியுடைய செபம் போன்றவற்றில் நிலைத்திருந்த சிமியோன், அன்னா என்னும் இரு வயதானவர்களையும் நினைத்துப் பார்த்து நமது வாழ்வை வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடவுளுடைய மீட்பிற்காக மக்கள் காத்திருந்தபோது இறைவாக்கினர்கள் அவருடைய வருகையை அறிவித்தார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இறைவாக்கினர் மலாக்கி (3,1). “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்று எடுத்துரைக்கின்றார் எனவும் கூறினார்.

மெழுகுதிரி பவனியில் துறவறத்தார்
மெழுகுதிரி பவனியில் துறவறத்தார்

காத்திருப்பின் அடையாளமான சிமியோன், அன்னா

சிமியோனும் அன்னாவும் காத்திருப்பின் அடையாளமாகக் காட்சியளிக்கின்றார்கள். குழந்தை இயேசு ஆலயத்திற்குள் நுழைந்ததை தூய ஆவியின் உள்ளொளியினால் அறிவுறுத்தப்பட்டு அன்னை மரியாவின் கைகளில் இருக்கும் குழந்தை இயேசுவை அடையாளம் கண்டுகொள்கின்றனர். நேர்மையானவரும் இறைப்பற்றுக் கொண்டவருமான எருசலேமைச் சார்ந்த சிமியோன், கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்த அன்னா இருவரும் கடவுளைக் கண்டுகொள்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அவர்களின் இதயங்கள் எப்பொழுதும் சுடர்விடும் தீபங்கள் போல ஒளிவீசிக்கொண்டிருந்தன. வயதில் முதியவர்களாக இருந்தாலும் இதயத்தளவில் இளமையுடன் இருந்தார்கள். கடவுளுடைய வருகைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார்கள். தங்களது நீண்ட வாழ்வில் ஏராளமான துன்பங்களை ஏமாற்றங்களையும் சந்தித்திருந்தாலும் தோல்விக்கு ஒருபோதும் அடிபணியவில்லை. நம்பிக்கை கொள்வதில் ஓய்வடையவில்லை. அதனால் குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டுகொண்டு மக்களை மீட்கும் மெசியா மீட்பர் வந்துவிட்டார். இறைவாக்கு நிறைவேறிவிட்டது என்று அறிக்கையிட்டு மகிழ்கின்றனர். மீட்பரின் வருகைக்காகக் காத்திருந்து அவரை  மகிழ்வுடன் வரவேற்கும் ஆற்றலைப் பெறுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

திருப்பலியின்போது கர்தினால்கள்
திருப்பலியின்போது கர்தினால்கள்

கடவுளுக்காகக் காத்திருத்தல்

கடவுளுக்காகக் காத்திருப்பது என்பது நமக்கும் நமது நம்பிக்கை வாழ்விற்கும் மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் இறைவன் நம்மைச் சந்திக்கிறார், நம்மிடம் பேசுகிறார், எதிர்பாராத விதத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார். நமது காலம் மற்றும் வாழ்வின் முடிவில் அவர் மீண்டும் வருவார். ஆகையால் நாம் விழிப்புடன் இருக்கவும், விடாமுயற்சியுடன் காத்திருக்கவும் நமக்கு அழைப்புவிடுக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதயத்தை, ஆன்மாவை மயக்கமடையச் செய்தல், ஏமாற்றங்கள், தோல்விகள் என்னும் இருண்ட பகுதிகளில் நம்பிக்கையை வைத்துவிடுவது போன்ற தூக்கத்தில் நாம் இருக்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அர்ப்பணிக்கப்பட்ட சகோதர சகோதரிகளாக, ஒரு கொடையாக இருக்கும் எல்லாரும், காத்திருப்பில் வாழ தயாராக இருக்கின்றோமா?  என்றும் கேள்வி எழுப்பினார்.

கடவுள் எப்போதும் நம்முடன் வருவார் என்பதை மறந்து, நமது தனிப்பட்ட செயல்கள், அன்றாட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். நமது துறவற வாழ்வைப் பாதிக்கும் அளவிற்கு ஏராளமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். நம்மிடம் கடவுள் கொடுத்த சிறிய விதையைக் கொண்டு மகிழ்ச்சி மற்றும் பணிவை பொறுமையுடன் அறுவடை செய்ய மறந்து விடுகின்றோம். காத்திருப்பு என்பதை செய்ய இயலாதவர்களாகி விடுகின்றோம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

காத்திருத்தல் என்பதை துறவற வாழ்வில் உணரத்தடைகளாக, உள்ளார்ந்த வாழ்வின் புறக்கணிப்பு மற்றும் உலக போக்கிற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளுதல் என்பது குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவை அடையாளப்படுத்தும் மெழுகுதிரி
கிறிஸ்துவை அடையாளப்படுத்தும் மெழுகுதிரி

1.உள்ளார்ந்த வாழ்வின் புறக்கணிப்பு

வியப்பை விட சோர்வு, உற்சாகத்தை விட பழக்கவழக்கம் அதிகமாகும் போது, ஆன்மிக வாழ்வின் பாதையில் விடாமுயற்சியை இழக்கும்போது, எதிர்மறை எண்ணங்கள், மோதல்கள், தாமதாமாக நடக்கும் நிகழ்வுகள் போன்றவை வெறுப்பையும் மனக்கசப்பையும் நம்மில் ஏற்படுத்தும்போது, உள்ளார்ந்த வாழ்வின் புறக்கணிப்பு நடைபெறுகின்றது. மனக்கசப்பை மறைத்து விடுதல் நல்லதல்ல என்று கூறிய திருத்தந்தை அவர்கள், துறவறக்குடும்பத்தில் மனச்சோர்வினால் இருளான முகத்தைக் கொண்டிருப்பவர்கள் அதிகமாகின்றார்கள். எனவே இழந்துபோன அருளை நாம் மீட்கவேண்டும்.  நமது உள்ளார்ந்த வாழ்விற்குள் சென்று, தாழ்ச்சியின் மகிழ்ச்சி, அமைதியின் நன்றியுணர்வு போன்றவற்றை நாம் மீட்கவேண்டும். முழங்கால் படியிட்டு முழு இதயத்துடன் திருநற்கருணை முன் நாம் செய்யும் செபம், மன்றாட்டுக்கள் வழியாக கடவுள் மீது நாம் கொண்ட தெரிநிலை விருப்பம், அன்பு, அதன் சுவை போன்றவற்றை எழுப்பும் திறனைப் பெறுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

2. உலகப்போக்கிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல்

நற்செய்தியின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு மிகுந்த வேகத்துடன் செயல்படுவது உலகப் போக்கிற்கு ஏற்றவாறு நம்மை மாற்றியமைத்துக் கொள்ளுதல் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எல்லாம் விரைவாக நடைபெற வேண்டும் என்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வுலகில், அமைதி என்பது இல்லாத ஒன்றாகவும், காத்திருப்பு என்பது இயலாத ஒன்றாக மாறி விடுகின்றது என்றும் கூறினார்.

உலகத்தின் இத்தகைய ஆற்றல் நமது துறவற குழுமம் திருஅவை மற்றும் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்தில் நுழையாமல் இருக்க கவனமாக இருப்போம். இல்லையென்றால் நம்மால் பலன் தர இயலாது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வும், அப்போஸ்தலிக்க மறைப்பணியும், தினசரி செபத்திலும்  நம்பிக்கையில் வளர்ச்சியிலும் முதிர்ச்சியடையவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிமியோனையும் அன்னையும் போல கடவுளுக்காகக் காத்திருந்து, நற்செய்தியின் வழியில் நடந்துவந்தால், ஒளியும் நம்பிக்கை வாழ்வுமாகிய கிறிஸ்துவை நம் கரங்களில் ஏந்துவோம் அவரை அரவணைப்போம் என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2024, 15:28