தேடுதல்

திருத்தந்தையின் முன் இத்தாலி-சீனா கூட்டமைப்பினர் திருத்தந்தையின் முன் இத்தாலி-சீனா கூட்டமைப்பினர்  (Vatican Media)

பேச்சுவார்த்தைகளின் பாதையில் சவால்களை வெற்றிகாணுங்கள்

திருத்தந்தை : இத்தாலி மற்றும் சீன சமூகத்தினர் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், உடன்பிறந்த உணர்வுக்கும் உதவ வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலி மற்றும் சீன தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவ்வமைப்பின் அங்கத்தினர்களை வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சீன புத்தாண்டு தினத்திற்கான தயாரிப்பின் ஒரு பகுதியாகவும் இச்சந்திப்பு இடம்பெறுவதாக இவர்களுக்கான உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி, சீனா இடையேயான உறவில் கலாச்சார உடன்பாடு, கல்வி, பொதுவான சமூக மதிப்பீடுகளை ஊக்குவித்தல் போன்றவைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை இவ்வமைப்பு ஊக்குவித்துவருவது குறித்தும் தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

ஏற்கனவே தொடர்ந்துவரும் இத்தகையப் பணிகளை தாராளமனத்துடன் கூடிய அர்ப்பணத்துடன் தொடர்ந்து ஆற்றுமாறு இவ்வமைப்பினரை ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய மற்றும் சீன சமூகத்தினர் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், உடன்பிறந்த உணர்வுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். 

சீனர்களின் புத்தாண்டு மிகவும் வளம் நிரம்பியதாகவும், பலன் கொடுப்பதாகவும் இருக்கும் என்ற வாழ்த்தையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேச்சுவார்த்தைகளின் பாதையில் எதிர்கொள்ளும் சவால்களை  வெற்றிகண்டு, அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வுக்காக உழைக்க வேண்டும் என இத்தாலி-சீனா தேசீய கூட்டமைப்பினருக்கு அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2024, 15:29