தேடுதல்

Sagrada Familia திருத்தலப் பொறுப்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் Sagrada Familia திருத்தலப் பொறுப்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

செபச்சூழலை முக்கியத்துவப்படுத்தும் திருத்தலங்கள்

திருநற்கருணை ஆராதனை, மறைபொருள்களை சிந்தித்து தியானிக்கும் செபம் போன்றவற்றின் வழியாக இயேசு என்னும் அந்த ஒளிக்காக நம்மை நம் இதயத்தைத் திறப்போம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

செபச்சூழலானது திருத்தலங்களில் இழக்கப்பட்டமால் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும், அத்தகைய நிலையில் திருத்தலங்கள் உருவாக்கப்படுவது முக்கியம் என்றும், திருத்தலப் பராமரிப்பிற்கான பொறுப்பாளர்கள் அதற்கான கடமையை தங்களது பொறுப்பாக ஏற்று செயல்படுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 17 சனிக்கிழமை வத்திக்கானின் திருத்தந்தையர் அறையில், இஸ்பெயினில் உள்ள பர்செலோனாவின் சாக்ரதா ஃபமீலியா எனப்படும் திருக்குடும்ப திருத்தலத்தின் பரமாரிப்பு சங்க உறுப்பினர்கள் ஏறக்குறைய 23 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

சாக்ரதா திருக்குடும்ப திருத்தலத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு கருப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளது, விவிலிய பகுதிகளால் மெருகேற்றப்பட்டு, செபத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தலத்தின் முதல் கதவானது நம்பிக்கையை அடையாளப்படுத்துகின்றது, மறைவல்லுனர்கள் மத்தியில் இயேசு போதிக்கும் படமானது புனித திரிசாஜோவை வெளிக்காட்டுகின்றது என்றும் கூறி நமது நம்பிக்கை, செபமாக உருப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.    

இரக்கத்தை அடையாளப்படுத்தும் திருத்தலத்தின் நடுக்கதவானது, திருக்குடும்பம், மனிதனாக உருவெடுத்த கிறிஸ்துவின் மறைபொருள், ஒளிவீசும் செபமாலையின் மணிகள், பெத்லகேமின் நட்சத்திரம் போன்றவை நமது ஒளி இங்கே இருக்கின்றது என்பதை அடையாளப்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

திருநற்கருணை ஆராதனை, மறைபொருள்களை சிந்தித்து தியானிக்கும் செபம் போன்றவற்றின் வழியாக, இயேசு என்னும் அந்த ஒளிக்காக நம்மை, நம் இதயத்தைத் திறப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இறைஊழியர் அந்தோனி கவுடி அவர்களின் முயற்சியால் திருத்தலத்தின் மணிகள், கடவுள் தூயவர், வலிமையானவர், என்றும் அழியாதவர் என ஒலி எழுப்பி மகிழ்விக்கின்றன என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2024, 14:52