தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - உறவை அழிக்கும் சினம்

சனவரி 31 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு உறவை அழிக்கும் சினம் குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சனவரி 31 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு உறவை அழிக்கும் சினம் குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி மாதத்தின் இறுதி வாரமும் இறுதி நாளுமாகிய 31 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த திருப்பயணிகள் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்காகக் கூடியிருந்தனர். கரவொலி எழுப்பி மிகுந்த மகிழ்வுடன் திருத்தந்தையை திருப்பயணிகள் வரவேற்க, சிலுவை அடையாளத்துடன் புதன் மறைக்கல்வி உரையினை துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலில் உள்ள "புதிய வாழ்வுக்கான விதிமுறைகள்" என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.  

எபேசியர் 4 26,27,31,32

சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும், தொடர் புதன் மறைக்கல்வி உரையின் ஆறாம் பகுதியாக, சினம் என்னும் தீயொழுக்கம் பற்றிய தனது கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்கள் இதோ.     

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய நமது தொடர் மறைக்கல்வியில் இன்று நாம் சினம் என்னும் தீயொழுக்கம் பற்றிக் காணலாம். தீயொழுக்கங்களில் மிகவும் இருளானதாக கொடியதாக சினம் உள்ளது. சினமுள்ள ஒருவரை அவரது வெளித்தோற்றத்தின் வழியாக எளிதில் கண்டு கொள்ளலாம். அவரது உடல் அசைவுகள், கோபஉணர்வு, பெருமூச்சு, கொடிய மற்றும் வெறுக்கத்தக்க கோபம் கொண்ட அவரது முகம் போன்றவற்றின் வழியாக இதனை நாம் எளிதாக அடையாளம் காண்கின்றோம்.

கோபம் என்பது இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து இருக்கக்கூடிய உணர்வு என்பதனை அதன் மிகத்தீவிரமான வெளிப்பாடு உணர்த்துகின்றது. அநீதியால் உருவாக்கப்பட்ட சினம், குற்றம் செய்தவருக்கு எதிராக அல்ல மாறாக யார் முதலில் தென்படுகின்றார்களோ அவர்கள் மீதே முதலில் காட்டப்படுகின்றது. அலுவலகத்தில் தங்களது சினத்தை கட்டுப்படுத்தி அமைதியாகவும், இணைந்து செயல்படுபவராகவும் தோற்றமளிக்கும் ஆண்கள் சிலர், வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளிடத்தில் அந்த சினத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களாக மாறிவிடுகின்றனர். கோபம், சினம் என அழைக்கப்படும் இத்தகைய உணர்வானது பரவலான தீமையாகும். நமது தூக்கத்தை நீக்கி, நமது எண்ணத்தில் நிலைத்து நின்று, ஒரு வழியை, தீர்வைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்மை வருத்துகின்றது.   

சினம் என்பது மனித உறவுகளை அழிக்கும் தீமை. மற்றவர்களின் பன்முகத்தன்மையை, குறிப்பாக அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் நம்மிலிருந்து வேறுபடும்போது அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் இருக்கும் தன்மையை வெளிப்படுத்துகிறது. மனிதரின் தவறான செயல்பாட்டை வெளிப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாது, அவனுடைய எல்லா செயல்களையும் சினம் என்னும் பெரிய கொப்பரைக்குள் வீசுகிறது. ஆண், பெண் என யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால் சினம் கொண்டவரின் குரல் ஒலி, அவரது வழக்கமான செயல்கள், சைகைகள், பகுத்தறிகின்ற மற்றும் உணர்கின்ற வழிகள் என எல்லாவற்றையும் வெறுக்க வைக்கின்றது.

இத்தகைய உறவுச்சீரழிவை சினத்தினால் அடையும்போது தெளிவற்ற நிலைக்கு ஆளாகின்றோம். கோபம் என்பது காலப்போக்கில் குறைந்துவிடுவதற்குப் பதிலாக சில நேரங்களில் தூரமும் அமைதியும் தவறான புரிதல்களும், சினத்தின் தீவிரத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகமாக்குகின்றன. எனவே தான் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலில், கிறிஸ்தவர்கள் தங்களது பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணவும், சமரசம் செய்ய முயற்சிக்கவும் வலியுறுத்துகின்றார் இன்று நாம் வாசிக்கக் கேட்ட வாசகத்தில், பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். (எபே;4;26) என்கின்றார். இருவருக்குள் ஏற்படும் சினமானது பகலில் தோன்றினாலும் இரவிற்குள் அது தணிந்துவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். சினத்தினால் இருவர் பிரிந்திருக்கும் சூழலில் இருந்தாலும், இரவிற்குள் அதனை சரிசெய்து விட வேண்டும். அலகையின் பிடிக்குள் தங்களை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. தீயொழுக்கமானது இரவில் விழித்திருக்கும். நமது எண்ணங்களை மாற்றி, நமது தவறுகளை சிந்திப்பதை விட்டுவிட்டு, பிறரது தவறுகளை சிந்திக்க வைக்கும். சினத்தினால் ஆள்கொள்ளப்பட்ட நபர் எப்போதும் அடுத்தவர் தான் தனக்கு பிரச்சனை, என்று கூறுவாரே தவிர, தன்னுடைய தவறுகளையும் தவற விட்டவைகளையும் பற்றி ஒருபோதும் நினைக்க மாட்டார்.  

விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்தில் இயேசு நம்மை மனித உறவுகளுக்காக செபிக்க வைக்கின்றார். நமது வாழ்க்கைத் திட்டத்தில் நமக்குத் தீமை செய்பவர்களை நாம் சமாளித்து, மன்னித்து வாழ்கின்றோம். எப்போதும் எல்லாரையும் சரியான அளவில் அன்பு செய்வதில்லை. ஒருவருக்கு உரிய அன்பை நாம் திருப்பிக் கொடுப்பதில்லை. பதிலன்பு செலுத்துவதில்லை. நாம் அனைவரும் பாவிகள், கணக்குக் கொடுக்கப்படவேண்டிய பாவிகள் என்பதனை மறந்து விடக்கூடாது. நாம் அனைவரும் மன்னிக்கப்பட்டவர்களாக வாழ, மன்னிக்கும் குணத்தை நம்மில் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஒன்றிணைந்து வாழ மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மன்னிக்கும் கலையைக் கடைப்பிடிக்கும் போது நாம் ஒன்றிணைந்து வாழ்கின்றோம். கருணை, பரந்த உள்ளம், சாந்தம், பொறுமை என்னும் பண்புகளை நம்மில் வளர்க்கின்றோம்.

சினம் என்பது போர் மற்றும் வன்முறையின் தோற்றமாகக் கருதப்படுகின்றது. இலியாட் என்னும் ஆசிரியர் அகில்லெசின் சினம் பற்றி தனது புத்தகத்தில் எடுத்துரைக்கையில் சினம் எல்லையற்ற துயரம் என்று விவரிக்கின்றார். கோபத்திலிருந்து எழும் அனைத்தும் தவறானவை அல்ல. மறுக்க முடியாத, மறுக்கக்கூடாத ஒரு சில பகுதிகள் வாழ்க்கையின் அனுபவங்களாக நமக்குள் இருப்பதை முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர். கோபத்தின் எழுச்சிக்கு நாம் பொறுப்பல்ல, ஆனால் கோபத்தை சரியான முறையில் வெளிப்படுத்துவது நல்லது. ஒருவன் அநீதியை எதிர்கொள்ளும் போது, பலவீனமான ஒருவனுக்கு அளிக்கப்படும் அடக்குமுறையை எதிர்கொள்ளும் போது உடலுக்குள் ஒரு நடுக்கம் ஏற்படவில்லை என்றால், அவர்கள் மனிதர்களும் இல்லை உண்மையான கிறிஸ்தவர்களும் இல்லை.

தூய சினம் என்று ஒன்று உள்ளது அது கோபம் அல்ல மாறாக உள்ளுக்குள் நடக்கும் ஓர் இயக்கம். இயேசு இதனைத் தனது வாழ்வில் பலமுறை சந்தித்தார். கை சூம்பியவரை ஓய்வு நாளில் குணப்படுத்தும் நிகழ்வில் இயேசு சினத்துடன், கூடியிருந்தவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் ஒருபோதும் தீமைக்கு தீமையுடன் பதிலளிக்கவில்லை. தனது ஆன்மாவினால் அதனை உணர்கின்றார். கோவிலைத் தூய்மையாக்குதல் பகுதியில் கோவிலுக்குள் சென்று கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். “என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். இவை கோபத்தினால் அல்ல மாறாக இறைத்தந்தையின் இல்லமாகிய கோவிலின் மேல் இருந்த பேரார்வத்தாலேயே இதனை செய்தார். பேரார்வம், சினம் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க நாம் அறிந்திருக்க வேண்டும். 

தூய ஆவியின் துணையுடன் நமது உணர்வுகளின் சரியான அளவைக் கண்டுபிடுத்து வாழ்வது என்பது நமது கையில் உள்ளது. மற்றவர்களும் தீமையின் பக்கம் அல்ல  நன்மையின் பக்கம் நின்று நல்லவர்களாக மாற அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார். பிப்ரவரி 1 வியாழன் அன்று இத்தாலியில் சிறப்பிக்கப்பட உள்ள போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள் இரண்டு உலகப் போர்களினால் பாதிக்கப்பட்ட மக்கள், மத்திய கிழக்கு பகுதி, இஸ்ரயேல், பாலஸ்தீனம், உக்ரைன் பகுதி மக்களுக்காக செபிக்கக் கேட்டுக்கொண்டார். இன்னும் அதிகமதிகமாக இரத்தம் சிந்திக்கொண்டிருக்கக்கூடிய பொதுமக்களின் துயரக்குரலானது நாடுகளின் தலைவர்களின் இதயத்தை தொட்டு அமைதிக்கான திட்டங்களை செயல்படுத்தத் தூண்டட்டும் என்றும் கூறினார். இந்த நாள் குறித்த செய்திகளை வாசிக்கும் போது, போர்க்காலம் எத்துணை கொடியது என்பதை உணர முடிகின்றது என்றும், வன்முறையை அல்ல மென்மையைக் கொடுக்கும் அமைதிக்காக இறைவனிடம் வேண்டுவோம் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் இன்று சனவரி 31 புதன்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்படும் தூய தொன்போஸ்கோ நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையிலும் உலகத்திலும் நமது பணியைச் சிறப்பாகச் செய்ய அதற்கான அழைப்பை நாம் ஒவ்வொருவரும் பெற தூய தொன்போஸ்கோ உதவுவாராக என்று  கூறி அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2024, 08:56