தேடுதல்

UNICOOP Florence மற்றும், உருகும் இதயம் நிறுவனங்களின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை UNICOOP Florence மற்றும், உருகும் இதயம் நிறுவனங்களின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை  (ANSA)

பிறரன்பு நடவடிக்கைகளுக்காக ஓர் உருகும் இதயம்

பல வாய்ப்புக்கள் இருப்போருக்கும், பல தேவைகள் இருப்போருக்கும் இடையேயான தொடர்பு, ஒருவரையொருவர் வளப்படுத்துவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட வாய்ப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

50 ஆண்டுகளாக ஒரு கூட்டுறவு இயக்கமாகவும், கடந்த 10 ஆண்டுகளாக உருகும் இதயம் என்ற நிறுவனமாகவும் பிறரன்பு செயல்களை ஆற்றிவரும் அமைப்பிற்கு தன் நன்றியையும் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

UNICOOP Florence என்றக் கூட்டுறவு இயக்கத்தின் அங்கத்தினர்களையும் அவ்வியக்கத்தால் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ‘உருகும் இதயம்’ என்ற நிறுவனத்தின் அங்கத்தினர்களையும் ஜனவரி 5ஆம் தேதியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் ஏழ்மை, அவர்களின் தனிமை, கல்வி, கலை, இசை என பல துறைகளில் பிறரன்புச் சேவைகளை ஆற்றிவரும் அவர்களுக்கு நன்றியை வெளியிட்டதுடன், தங்களைப்போல் பிறரும் இத்தகையச் செயல்களை ஆற்ற அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு தன் ஊக்கத்தையும் அளித்தார்.

UNICOOP Florence கூட்டுறவு இயக்கம் பொருட்களைத் தயாரிப்பதிலும், விற்பதிலும், வணிக நோக்கங்களை மட்டும் பார்க்காமல், ஒருவருக்கொருவர் உதவும் மனநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறித்தும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்களின் நலனை பாதுகாக்க உழைக்கும் எந்த ஒரு நிறுவனமும் அவர்களின் மாண்பை பாதுகாக்க உதவுவதாக இருக்கின்றது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உதவுவதற்கான பல வாய்ப்புக்கள் இருப்போருக்கும், பல தேவைகள் இருப்போருக்கும் இடையேயான தொடர்பு என்பது பிறரன்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒருவரையொருவர் வளப்படுத்துவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட வாய்ப்பாக நோக்கப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பினரிடம் எடுத்துரைத்தார்.

இந்த துயர வேளையில் உக்ரைன் நாட்டிற்காக UNICOOP Florence  கூட்டுறவு இயக்கம்  திருப்பீடத்தின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கான துறையின் வழியாக ஆற்றிவரும் பிறரன்பு பணிகள் குறித்தும் தன் நன்றியை வெளியிட்ட திருத்தந்தை, மனிதனின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கும், வளங்களையும் திறமைகளையும் பகிர்வதில் கிட்டும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தூண்டுகோலாக இருக்குமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2024, 15:08