தேடுதல்

திருஅவையின் தீர்ப்பு மன்ற நீதிபதிகளைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை திருஅவையின் தீர்ப்பு மன்ற நீதிபதிகளைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

நீதிபதிகளே, தூய ஆவியாரின் துணையில் தெளிந்து தேர்வு செய்யுங்கள்!

விவேகம், நீதி ஆகிய இரண்டு முக்கியமான நற்பண்புகள் நீதிபதியின் தேர்ந்து தெளிதலுக்குத் தேவைப்படுகின்றன என்றும், இது கருணையின் வழியாகவே வெளிப்படுத்தப்பட வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தெளிந்து தேர்தல் என்பது தூய ஆவியாரின் கொடையை இறைஞ்சி மன்றாடுவதில் அடங்கியுள்ளது என்றும்,  இந்த வழியில் மட்டுமே தனிநபர்கள் மற்றும் முழு திருஅவை சமூகத்தின் நன்மைக்கான வழியில் செல்லும் முடிவுகளை நாம் அடைகிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 25, இவ்வியாழனன்று, திருமண விவகாரங்களைக் கவனிக்கும் திருஅவையின் தீர்ப்பு மன்ற நீதிபதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்த வேளை, இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெளிந்து தேர்தல் என்ற தலைப்பில் தனது உரையை அவர்களுக்கு வழங்கினார்.

திருமணத்தை முற்றிலும் செல்லாதது என்று அறிவிப்பதற்கான காரணங்கள் இருப்பது அல்லது இல்லாதது குறித்து, திருமண செயல்முறைகளில் மேற்கொள்வது உங்களுடையது என்ற குறிப்பிட்ட தேர்ந்து தெளிதலில்  கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று கூறிய திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையின் உச்சமன்றத்தில், உங்கள் கூட்டுத் தீர்ப்பு, உள்ளூர் குழுமம்சார் தீர்ப்பாயங்கள் அல்லது இது சாத்தியமில்லாத இடங்களில், ஒற்றை நீதிபதியின் உதவியால் ஒருவேளை இரண்டு மதிப்பீட்டாளர்கள் மற்றும் மறைமாவட்ட ஆயர் அவர்களால் வெளியிடப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றைப் பற்றி நான் சிந்திக்கிறேன் என்றும் உரைத்தார்.

இது எப்பொழுதும் தலையாயப் பிரச்சினையாக உள்ளது என்றும், இது நடைமுறைச் சீர்திருத்தமான திருமணச் சீர்திருத்தம் மற்றும் குடும்ப மேய்ப்புப்பணிப் பொறுப்பையும் பாதித்துள்ளது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மறுபுறம், செல்லாத வழக்குகளில் இரட்டை இணக்கமான தீர்ப்பின் தேவையை நீக்குதல், மறைமாவட்ட ஆயர் முன் குறுகிய விசாரணையை அறிமுகப்படுத்துதல், அத்துடன் நீதிமன்றங்களின் பணிகளை நெறிப்படுத்தவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான முயற்சி ஆகியவை இருக்கக்கூடாது என்றும், திருமணத்தைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள உதவும் சேவை மனப்பான்மையுடன் விசுவாசிகளுக்குப் பணியாற்றவேண்டிதன் அவசியத்தை ஒருபோதும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் விளக்கினார்.

அதேவேளை, குடும்ப மேய்ப்புப் பணிப் பொறுப்பில் இரக்கத்தின் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தியதால், திருமணம், குடும்பம், விவாகரத்து மற்றும் பிற முக்கியமான நவீன பிரச்சினைகள் குறித்து பேசும் 'அன்பின் மகிழ்வு' (Amoris laetitia) என்ற எனது திருமடலில் செல்லாத வழக்குகள் தொடர்பான நீதியைப் பின்தொடர்வதில் நமது அர்ப்பணிப்பைக் குறைக்கவில்லை என்றும் உரைத்துள்ளார்.

மாறாக, துல்லியமாக நபர்கள் மற்றும் அவர்களின் மனசாட்சிகள் மீதான இரக்கத்தின் ஒளியில், செல்லா நிலையின் மீதான (nullity) நீதித்துறையின் தேர்ந்து தெளிதல் முக்கியமானது என்றும், இது ஈடுசெய்ய முடியாத மேய்ப்பணி மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் குடும்பங்கள் காரணமாக ஒட்டுமொத்த மேய்ப்புப்பணி பொறுப்பில் இணக்கமாக பொருந்துகிறது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, 'இரக்கம் நீதியைப் பறிக்காது அகற்றாது, மாறாக, அது நீதியின் முழுமையாக அமைகிறது' என்ற புனித தாமஸ் அக்குவினாசின் இரக்கம் மற்றும் நீதி குறித்த கூற்றையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

தெளிந்து தேர்தல் என்பது தூய ஆவியாரின் கொடையை இறைஞ்சி மன்றாடுவதில் அடங்கியுள்ளது என்றும்,  இந்த வழியில் மட்டுமே தனிநபர்கள் மற்றும் முழு திருஅவை சமூகத்தின் நன்மைக்கான வழியில் செல்லும் முடிவுகளை நாம் அடைகிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

நீதித்துறையின் தேர்ந்துதெளிதலின் சார்பற்ற நிலையானது, செல்லுபடியாகும் அறிவிப்புக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்பட விரும்பும் எந்தவொரு தப்பெண்ணத்திலிருந்தும் விடுபட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, இது, முழுமையான உறுதியைக் கோருபவர்களின் கடினத்தன்மையிலிருந்தும், சிறந்த பதில் எப்பொழுதும் வெற்றிடமே என்ற தவறான நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட அணுகுமுறையிலிருந்தும் தன்னை விடுவிப்பதைக் குறிக்கிறது என்றும் விளக்கமளித்தார்.

விவேகம், நீதி ஆகிய இரண்டு முக்கியமான நற்பண்புகள் நீதிபதியின் தேர்ந்து தெளிதலுக்குத் தேவைப்படுகின்றன என்றும், இது கருணையின் வழியாகவே வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, விவேகத்திற்கும் நீதிக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது, ஏனெனில் prudentia iuris அதாவது,  நீதியானத் தீர்ப்பு, பொது அறிவு மற்றும் எச்சரிக்கையுடன், குறிப்பாக நடைமுறை காரியங்களை நடத்துவதில் பெறும் பயிற்சி என்பது, உறுதியான வழக்கில் எது சரியானது என்பதை அறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

செல்லா நிலை மீதான (nullity) தேர்ந்துதெளித்தல் என்பது, அது ஒன்றிணைந்த பயணமாக (synodal) இருப்பதன் வழியாக ஆதரிக்கப்பட்டு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று உரைத்த திருத்தந்தை, தீர்ப்பாயம் கூட்டுச் சபையாக இருக்கும்போது, ​​அல்லது ஒரே ஒரு நீதிபதி மட்டுமே இருக்கும்போது, ​​​​அவர் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் கலந்தாலோசிக்கும் நிலையில், ​​உரையாடல் அல்லது விவாதத்தின் சூழ்நிலையில் தேர்ந்து தெளிதல் நடைபெறுகிறது என்றும், இதில் வெளிப்படைத் தன்மையும் ஒருவருக்கொருவர் செவிசாய்ப்பதும் அடிப்படையானது என்றும் விளக்கினார்.

நான் ஏற்கனவே கூறியது போல், உங்களின் இந்தப் பணியில் தூய ஆவியானவரை அழைப்பது  மிகவும் அவசியம், ஏனெனில் உண்மையைக் கண்டறிய அனைத்து மனித வழிகளையும் நாம் பயன்படுத்த முயற்சி செய்கிறோம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

Roman Rota நீதிபதிகள் திருத்தந்தையைச் சந்தித்தபோது
Roman Rota நீதிபதிகள் திருத்தந்தையைச் சந்தித்தபோது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2024, 15:50