தேடுதல்

புனித ரோசின் சுமைதாங்கிகளாகச் செயல்படும் தொழிலாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை புனித ரோசின் சுமைதாங்கிகளாகச் செயல்படும் தொழிலாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

எளிய புனிதர்களே, திருஅவைக்குத் தேவைப்படுகிறார்கள்!

உங்கள் சேவை மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான உங்கள் அர்ப்பணிப்பு வழியாக, புனித ரோசின் முன்மாதிரியான வாழ்க்கையை நீங்கள் தொடர்ந்து பிறருக்கும் எடுத்துச் செல்கிறீர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காலணிகளை அணிந்து கொண்டு சோபாவில் உட்காராமல், நற்செய்தியை அறிவிக்கவும் அதன்படி வாழ்ந்துகாட்டவும் வேண்டும் என்ற அடக்கமுடியாத ஆசையால் பற்றி எரிந்துகொண்டிருக்கும் புனிதர்களே இன்றும் நமக்குத் தேவைப்படுகிறார்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 11, இவ்வியாழனன்று, புனித ரோசின் சுமைதாங்கிகளாகச் செயல்படும் தொழிலாளர்கள் 250 பேரை வத்திக்கானின் கிளமென்டினா அறையில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிய நிலையில் வாழ்ந்த புனிதர்களே இன்றும் புனிதத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்கிறார்கள் என்றும் கூறினார்.

உங்கள் கதையின் வேர்கள், துறவியான புனித ரோஸ் விட்டர்போவில் வாழ்ந்த நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று கூறிய திருத்தந்தை, அங்கு அவருக்கு ஒரு மறைபொருள் அனுபவம் கிடைத்தது என்றும், அதுவே முழு நகரத்திற்கும் பக்தி மற்றும் கிறிஸ்தவ உயிர்ச்சக்தியை ஊக்குவிப்பவராக அவரை மாற்றியது என்றும் எடுத்துரைத்தார்.

புனித ரோஸ் மிகவும் இளமையாக இருந்தபோது, ​​முழுமையான ஏழ்மை மற்றும் பிறரன்புப் பணிக்கான அர்ப்பணிப்பைத் தேர்ந்தெடுத்தார் என்றும், மேலும் ஓர் உண்மையான வரைவாளராக அவர் இருந்தார் என்றும், இதனால் பலரையும் தான் இயேசுவின் மீது கொண்ட அன்புடன் இணைக்கத் தூண்டியது என்றும் விளக்கினார் திருத்தந்தை.

ஆகவே, உங்கள் சேவை மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான உங்கள் அர்ப்பணிப்பு வழியாக அவரின் இந்த வாழ்க்கையை நீங்கள் தொடர்ந்து பிறருக்கும் எடுத்துச் செல்கிறீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2024, 15:05