தேடுதல்

திருத்தந்தையுடன் பேராயர் Svjatoslav Shevchuk -  (2022.02.28) திருத்தந்தையுடன் பேராயர் Svjatoslav Shevchuk - (2022.02.28)  (AFP or licensors)

உக்ரைனுடன் ஒருமைப்பாட்டை வெளியிடும் திருத்தந்தையின் கடிதம்

உக்ரைன் போர் ஒரு மறக்கப்பட்டதாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, அனைத்துலக சமூகம் அமைதிக்கான வழிகளைக் கண்டுகொள்ள தூண்டிக்கொண்டேயிருப்பது நம் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உக்ரைன் நாட்டு பொதுமக்களின் வாழ்வையும் நாட்டின் உள்கட்டமைப்புக்களையும் அழிவுக்குள்ளாக்கிவரும் இரஷ்ய நாட்டு ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டு உக்ரைன் தலத்திருஅவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைன் மக்களையும் அந்நாட்டின் உள்கட்டமைப்புக்களையும் அழிவுக்குள்ளாக்கிவரும் இரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் பழிப்புக்குரியன, மற்றும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோ நியாயப்படுத்தப்படவோ முடியாதவை என உக்ரைன் பேராயர் Sviatoslav Shevchuk அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த் தியாகங்களை மேற்கொண்டுவரும் உக்ரைன் நாட்டோடு தான் நெருக்கமாக இருப்பதாகவும், இறந்தோரை கடவுளின் இரக்கத்திற்கு அர்ப்பணித்து, காயமடைந்தோர் மற்றும் இப்போரால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலை வேண்டுவதாகவும், இத்துன்பகரமான வேளையில் மக்களுக்கு நம்பிக்கையின் ஒளியை வழங்குவதில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் தலத்திருஅவை மேய்ப்பர்களுடன் தான் நெருக்கமாக இருப்பதாகவும் தன் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைனில் இடம்பெறும் தாக்குதல்கள் ஒரு மறக்கப்பட்டப் போராக மாறிவிடக்கூடாது என்பதை மனதில்கொண்டு, அனைத்துலக சமூகம் அமைதிக்கான வழிகளைக் கண்டுகொள்ள தூண்டிக்கொண்டேயிருப்பது நமது கடமை என்பதையும் தன் கடிதத்தில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் என்பது பைத்தியக்காரத்தனம், மற்றும் அது மனிதக்குலத்தின் தோல்வி, ஆகவே பாலஸ்தீனம், இஸ்ராயேல் மற்றும் உக்ரைன் மக்களுக்காக தொடர்ந்து செபிப்போம் என தான் ஏற்கனவே அழைப்புவிடுத்துள்ளதை இக்கடிதத்தில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, உக்ரைனில் ஆயுதங்களின் மோதல் நிறுத்தப்படவேண்டும் மற்றும் நீதியுடன்கூடிய அமைதி நிலவ வேண்டும் என தொடர்ந்து உயிர்துடிப்புடைய விண்ணப்பங்களை விடுக்க உள்ளதாகவும் உறுதி கூறியுள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2024, 15:45