தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி - ஆன்மிகப் போராட்டம்

ஜனவரி 3 புதன்கிழமை ஆண்டின் முதல் வாரத்தில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்ற தலைப்பின் இரண்டாம் பிரிவில் ஆன்மிகப் போராட்டம் என்ற மையக்கருத்தில் தனது கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஜனவரி 3 புதன்கிழமை ஆண்டின் முதல் வாரத்தில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்ற தலைப்பின் இரண்டாம் பிரிவில் ஆன்மிகப் போராட்டம் என்ற மையக்கருத்தில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்போஸ்தலிக்கப் பேரார்வம் குறித்த தனது கருத்துக்களை தொடர் மறைக்கல்வியாக திருப்பயணிகளுக்கு வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்ற புதிய தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை வழங்கி வருகின்றார் அவ்வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் வாரமாகிய ஜனவரி 3 இப்புதன்கிழமையன்று ஆன்மிகப் போராட்டம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பல்வேறு நாடுகளைச் சார்ந்த திருப்பயணிகள் திருத்தந்தையைக் காணும் ஆவலுடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் காத்திருக்க அவர்கள் முன் அரங்கத்தில் தோன்றினார் திருத்தந்தை. மிகுந்த ஆரவாரத்துடனும் மகிழ்வுடனும் திருப்பயணிகள் திருத்தந்தையை வரவேற்க அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றார். சிலுவை அடையாளத்துடன் தனது புதன் மறைக்கல்வி உரையினை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் மத்தேயு நற்செய்தியில் உள்ள இயேசு திருமுழுக்குப் பெறுதல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், அரபு இஸ்பானியம் ஆகிய பல மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.        

மத்தேயு 3: 13- 15

இயேசு திருமுழுக்குப் பெறுதல்

அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.

நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லொழுக்கம் மற்றும்  தீயொழுக்கம் என்ற புதிய மறைக்கல்வி தொடரின் இரண்டாம் பகுதியாக ஆன்மிகப் போராட்டம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.

புதன் மறைக்கல்வி உரை

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

கடந்த வாரம் நல்லொழுக்கம் மற்றும்  தீயொழுக்கம் என்ற தலைப்பில் நமது புதன் மறைக்கல்வி உரையினை நாம் ஆரம்பித்தோம். இது கிறிஸ்தவர்களின் ஆன்மிக போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. உண்மையில், கிறிஸ்தவர்களின் ஆன்மிக வாழ்க்கை அமைதியானதும் சவால்கள் அற்றதும் அல்ல, அதற்கு மாறாக, தொடர்ச்சியான போராட்டங்களைக் கொண்டது. கிறிஸ்தவர்கள் பெறும் முதல் அருளடையாளமான திருமுழுக்கு முதல் இறுதியில் பெறும் நோயில்பூசுதல் அருளடையாளம் வரை, கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அருளடையாளங்களில் பூசப்படும் நறுமணத்தைலம் இல்லாத வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது என்பதை அடையாளப்படுத்துகின்றது. முந்தையக் காலகட்டத்தில் மல்யுத்த வீரர்கள் தங்களது தங்கள தசைகளை வலுப்படுத்துவதற்கும் எதிராளியின் பிடியில் இருந்து தப்பிப்பதற்கும் போட்டியின் முன்பு எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்பட்டனர். கிறிஸ்தவர்களாகிய நாமும் நறுமணத்தைலத்தால் ஆசீர்வதிக்கப்படுவது நமது வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்தது, சோதனைகள் மற்றும் சோதனையின் முயற்சிகள் நிறைந்தது என்பதனை எடுத்துரைக்கின்றது.

Abba Antonio என்னும் முதல் பெரிய துறவியானவர், “சோதனைகளை அகற்றாத யாரும் மீட்கப்பட மாட்டார்கள்" என்று கூறுகின்றார். புனிதர்கள் என்பவர்கள் சோதனையிலிருந்து விடுபட்ட மனிதர்கள் அல்ல, மாறாக தீமையின் மயக்கங்கள், வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோன்றும் மாயைகள் அகற்றப்பட வேண்டும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள். நம் எல்லோருக்கும் தீமையின் சக்திகளை முறியடிக்கும் மற்றும் தவிர்க்கும் அனுபவம் உள்ளது. வாழ்வில் ஏற்படும் போராட்டங்களையும் அதற்கான சூழல்களையும் சமாளிக்க நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

தங்களை "நல்லவர்கள்" என்று நம்புபவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக தங்களது பாவங்களை ஒப்புக்கொள்பவர்களைப் பார்த்து புன்னகைப்பவர்கள், இருளில் வாழும் அபாயம் உள்ளது, ஏனென்றால் அவர்கள் இப்போது இருளுக்குப் பழகிவிட்டார்கள். நல்லது கெட்டதுகளை வேறுபடுத்தி, தன் பாவங்களை அறிந்து, மனம் வருந்தி ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக மன்னிப்பு கேட்பவர், இறந்தவர்களை உயிர்த்தெழுப்புகிறவர்களை விட பெரியவர் என்று நினிவேயின் ஐசக் கூறுகின்றார். தந்தைக் கடவுளின் எல்லையற்ற இரக்கத்திற்கு முன் எந்தப் பாவமும் பெரிதல்ல என்ற நம்பிக்கையை, நம் இதயங்களில் வைத்துக்கொண்டு, மனமாற்றம் தேவைப்படும், பாவிகளாக இறைவன் முன் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதுவே இயேசு நமக்குத் தரும் அறிமுகப் பாடமாகும்.

யோர்தான் ஆற்றின் கரையில் மெசியாவின் திருமுழுக்கு பற்றி நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். இயேசு எதற்காக தன்னை தூய்மைப்படுத்த திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு யோவான் அவரிடம் “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுக்கின்றார் (மத் 3,15). ஆனால், யோவான் நினைத்ததை விட மிகவும் வித்தியாசமானவராக இயேசு இருக்கின்றார். மக்கள் அவரை தண்டனைத்தீர்ப்பு வழங்கும் கடவுளாகவும், நியாயத்தீர்ப்பு வழங்கும் கடவுளாகவும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவரோ எளியவருடன் எளியவராக, ஏழைகளுடன் ஏழையாக, பாவிகளுடன் பாவியாக, வரிசையில் இருக்கின்றார். இயேசு நம்மோடு இருக்கின்றார் நம்மை ஒருபோதும் அவர் தனியாக் விடுவதில்லை. நம் அருகில் இருந்து நம்மை உயர்த்தவும், எழுப்பிவிடவும் அவர் காத்திருக்கின்றார். அவரிடம் மன்னிப்பு கேட்போம். அவருடன் உரையாடுவோம். பாவியாகிய எங்களை விட்டு அகன்று விடாதேயும் என்று வேண்டுவோம்.   

திருமுழுக்கு பெற்ற பகுதி முடிந்ததும் இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்படும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அவர் அங்கு அலகையினால் சோதிக்கப்பட்டார் என்று  நற்செய்திகள் கூறுகின்றன. எதற்காக இயேசு சோதிக்கப்பட வேண்டும். பாலைவனத்தில் அலகையினால் சோதிக்கப்படும் நிகழ்வு வழியாக மனித பலவீன இயல்புகளில் தனது உடனிருப்பைக் காட்டுக்கின்றார். சிறந்த முன்மாதிரிகையாகத் திகழ்கின்றார். பாலைவனத்தின் வறண்ட கற்களுக்கு இடையில் அவர் கடந்து செல்லும் சோதனைகள் அவர்தம் சீடர்களாகிய நம் வாழ்க்கைக்கு வழங்கும் முதல் அறிவுரையாகும். சவால்கள், சோதனைகள், குறுக்கு வழிகள், பொய் வாக்குரைகள், மறைக்கப்பட்ட மயக்கங்கள், முரண்பாடான குரல்கள் போன்றவற்றால்தான் நமது வாழ்க்கை உருவாக்கப்பட்டுள்ளது  சில குரல்கள், அலகை மறைநூல்கள் கொண்டு இயேசுவை சோதித்தது போல  நம்மையும் சோதிக்கும்.  உண்மை மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு நம் உள்ளத்தை நாம் பாதுகாக்க வேண்டும், அதற்கு நாம் தொய்வடையாமல் தொடர்ந்து முன்னேறிச்செல்ல நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும்.

நாம் எப்போதும் எதிரெதிர் போராட்டங்கள் மற்றும் சவால்களுக்கு இடையில் இருக்கின்றோம் என்பதை மனதில் இருத்த வேண்டும். பெருமை மனத்தாழ்மையுடன் சவாலை மேற்கொள்கின்றது.   வெறுப்பு  நற்செயல்களுக்கு எதிராக செயல்படுகின்றது. சோகம் தூயஆவியின் உண்மை மகிழ்ச்சியின் வழியில் இடைநிற்கிறது. இதயத்தின் கடினத்தன்மை இரக்கத்தை எதிர்க்கிறது. கிறிஸ்தவர்கள் இந்த மேடுகளில் தொடர்ந்து நடந்து செல்கின்றனர். எனவே நல்லொழுக்கங்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றி சிந்திப்பது மிக முக்கியம். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான எல்லைகள் எப்போதும் மங்கலாக தெளிவற்றதாக இருக்கும். மற்ற உயிரினங்களைப் போலல்லாமல், மனிதனால் இந்த எல்லையைக் கணித்து அதனைத் தாண்டி நடக்க முடியும். கடவுள் முன் நம் மனதைத் திறந்து, புனிதத்துவத்தை நோக்கி நடக்க முயல்வோம்.

ஆன்மிகப் போராட்டம், இத்தகைய தீமைகளை உற்றுநோக்கிப் பார்க்கவும், கடவுளின் அருளுடன், நம்மில் செழித்து வளரக்கூடிய நற்பண்புகளை நோக்கி நடக்கவும் நம்மை வழிநடத்துகிறது. தூயஆவியின் வசந்தத்தை நம் வாழ்வில் கொண்டுவருகிறது. நம்மை மன்னிக்க வந்த காப்பாற்ற வந்த இயேசு நம் இதயத்தைத் திறக்க விரும்புகிறார்." அவர் மன்னிக்க மறக்க மாட்டார். மன்னிப்பு கேட்கும் திறனை நாம் பல நேரங்களில் இழந்து விடுகின்றோம். மன்னிப்பு கேட்கும் திறனை திரும்பப் பெறுவோம். நம் ஒவ்வொருவருக்கும் மன்னிப்பு கேட்க பல விடயங்கள் உள்ளன. ஆண்டவராகிய இயேசுவிடம்  மன்னிப்பு கேட்போம். ஆண்டவரே, நான் ஒரு பாவி, என்னை விட்டு விலகாதேயும் என்று இயேசுவிடம் நமது செபத்தை எடுத்துரைப்போம். நன்றி

இவ்வாறு தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளையும், இலத்தீனா மறைமாவட்டத்தின் இளையோர் அனைவரையும் வாழ்த்தினார். மேலும் அவர்களிடம் அன்புள்ள சிறார்களே, அன்னை மரியாவைப் போல, மனிதனாக மாறிய இறைவார்த்தையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்,  தியானிக்கவேண்டும்  பின்பற்றவேண்டும் என்று அறிந்து கொள்ளுங்கள் என்றும் கூறினார். உங்கள் நண்பர்கள் மற்றும் தோழர்களிடையே நன்மை மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்புவதற்காக இதனை செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

போரினால் பாதிக்கப்படும் மக்களை நாம் மறந்துவிடக் கூடாது: போர் என்பது அறிவற்ற செயல். போர் எப்போதும் தோல்விதான்! ஆம் போர் எப்போதும் தோல்விதான். எனவே அமைதிக்காக செபிப்போம். பாலஸ்தீனம், இஸ்ரயேல், உக்ரைன் மற்றும் போர் நடக்கும் பல இடங்களில் உள்ள மக்களுக்காக நாம் தொடர்ந்து செபிப்போம். மேலும் துன்புறுத்தப்படும் ரோஹிங்கியா சகோதரர்களுக்காகவும் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இறுதியாக,  இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து இயேசுவை உண்மையாகப் பின்பற்றவும், அவருடைய நற்செய்தியைப் பரப்புவதற்கு தாராளமாக ஆதரவளிக்கவும் அனைவரையும் கேட்டுக்கொள்வதாகக் கூறினார். 

இவ்வாறு தனது விண்ணப்பங்களையும் வாழ்த்துக்களையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2024, 08:47