தேடுதல்

திருஅவைக்கு அன்னை மரியா எப்போதும் தேவைப்படுகிறார்!

இப்புத்தாண்டை அன்னை மரியாவின் பாதுகாவலில் ஒப்படைப்போம், நமது வாழ்வை அவரில் அர்ப்பணமாக்குவோம், கனிவான அன்புடன்,அவர் முழுமையாக நம் கண்களைத் திறப்பார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்னை மரியாவின் தாய்மை என்பது கடவுளின் தந்தைவழி கனிவுக்கு நம்மை அழைத்துச் செல்லும் பாதை என்றும், இப்பாதை மிகவும் நெருக்கமான, நேரடி மற்றும் எளிதான பாதையாகும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 1, புத்தாண்டு தினமான இத்திங்களன்று, நம் அன்னையாம் திருஅவை, 'கன்னி மரியா கடவுளின் தாய்' என்ற பெருவிழாவைச் சிறப்பிக்கும் வேளை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் தான் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

"காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்" (கலா 4:4) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகள் இப்புதிய ஆண்டின் தொடக்கத்திற்கு ஒளிபாய்ச்சுகின்றன என்றும், இங்கே, 'காலம் நிறைவேறியபோது' என்ற வார்த்தை நம்மை வியக்க வைக்கிறது என்றும்  கூறி, இதன் அடிப்படையில் தனது மறையுரைச் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

ஒரு பெண்ணாகிய அன்னை மரியா வழியாகக் கடவுள் ஒரு மனிதராக மனுவுருவெடுத்தார் என்றும், அவர் இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பு, மரியாவை தேர்ந்தெடுத்து மனிதரின் நீண்ட நெடிய வரலாற்றில் தனது வருகைக்காக அவரைத் துளித் துளியாகத் தயார் செய்தார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

மரியாவை மையப்படுத்தி மனித வரலாற்றை மாற்றியதில் கடவுள் மகிழ்ந்தார் என்றும், பெண் என்ற அந்த ஒற்றை வார்த்தை வழியாக, திருவிவிலியம் நம்மை மீண்டும் படைப்பின் தொடக்கமாகிய தொடக்க நூலிற்குக் கொண்டு சென்று, தாயும் குழந்தையும் புதுப்படைப்பு மற்றும் புதிய தொடக்கத்திற்கான அடையாளமாக இருக்கின்றனர் என்பதை உணரவைக்கின்றது என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை. இவ்வாறு மீட்பின் காலத்தின் தொடக்கத்தில் கடவுளின் தாயும் நமது தாயுமான மரியா முன் குறித்துக்காட்டப்படுகின்றார் என்றும் உரைத்தார்.

அப்படியானால், புத்தாண்டின் தொடக்கத்திலேயே அன்னை மரியாவை அழைப்பது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அன்று கடவுளின் உண்மையுள்ள மக்கள் எபேசு திருச்சங்கத்தில் செய்தது போன்று, இன்று ‘மரியா இறைவனின் தாய்’ என்று மகிழ்ச்சியுடன் அவரைப் போற்றிப்புகழ்வது பொருத்தமானது என்றும் விளக்கினார்.

‘மரியா, இறைவனின் தாய்’ என்ற வார்த்தைகள், அன்னை மரியாவின் கரங்களில் பொதிந்துள்ள அந்தச் சிறிய குழந்தை, மனிதகுலத்துடன் எப்போதும் முழுமையாக ஒன்றிணைந்துள்ளது என்ற மகிழ்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், ‘மரியா, இறைவனின் தாய்’ என்பது இறைவனின் என்றுமுள்ள உடன்படிக்கையை நம்முடன் ஒப்புக்கொள்ளும் ஒரு எளிய சொற்றொடர் என்றும், இது விசுவாசத்தின் கோட்பாடு மட்டுமல்ல, ஆனால் அதேவேளையில், என்றென்றும் ‘மனிதரில் கடவுள், கடவுளில் மனிதர்’ என்பதன் நம்பிக்கையின் கோட்பாடாகவும் இருக்கின்றது என்றும் விவரித்த திருத்தந்தை, இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து 'மரியா, இறைவனின் தாய்!' என்று மும்முறை அறிக்கையிடுவோம் என்றும் அழைப்புவிடுத்தார்.

விசுவாசத்தின் தொடக்கம் மற்றும் இதயத்திற்கு நம்மை மரியா அழைத்துச் செல்கிறார் என்றும், இது ஒரு கோட்பாடோ அல்லது பணியோ அல்ல, ஆனால் நம்மை அன்பான மகன்கள் மற்றும் மகள்களாக மாற்றும் எல்லையற்ற தூய இறைவனுடைய அன்பின் பேழைகள் என்றும் கூறிய திருத்தந்தை. "நாம் கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பினால், நாம் 'மரியாளுக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்" என்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுலின் மறையுரைச் சிந்தனையையும் (24 April 1970) மேற்கோள் காட்டினார் திருத்தந்தை.

திருஅவை தனது பெண்மையின் முகத்தை மீட்டெடுக்கும் பொருட்டும் பெண்மையை முழுமையாக ஒத்திருக்கும் பொருட்டும், முன்மாதிரியாகவும் முழுஉருவாகவும் இருக்கும் அன்னை மரியா திருஅவைக்குத் தேவைப்படுகிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அமைதியைக் கண்டறிவதற்கும், வன்முறை மற்றும் வெறுப்பின் சுழலில் இருந்து வெளிவருவதற்கும், மீண்டும் ஒருமுறை உண்மையான மனிதக் கண்களாலும் இதயங்களாலும் விடயங்களைப் பார்ப்பதற்கும் இவ்வுலகமும் கூட அன்னையர்களையும் பெண்களையும் உற்றுப்பார்க்கவேண்டிய அவசியம் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஒவ்வொரு பெண்ணையும் உயர்ந்ததொரு கொடையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கின்றது என்றும், ஒவ்வொரு சமூகமும் பெண்களை மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என்றும் விண்ணப்பித்த திருத்தந்தை, ஒரு பெண்ணுக்குத் தீங்கு விளைவிப்பவர், ஒரு பெண்ணால் பிறந்த கடவுளை அவமதிக்கிறார் என்பதை அறிவார் என்றும் உரைத்தார்.

காலம் நிறைவேறிய வேளையில், அன்னை மரியா ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தது போல, அவர் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உறுதிகொண்ட ஒரு தாயாக விளங்குகின்றார், ஏனென்றால் ஒரு தாயை விட வேறு யாருக்கும் அவரது குழந்தைகளின் வளர்ச்சியின் நிலைகள் மற்றும் அவசரத் தேவைகள் பற்றி தெரியாது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

அன்னை மரியா நம் தேவைகளை நன்கு அறிவார், அவர் நம் வாழ்வில் அருளைப் பெருக்குவதற்கும்,  நம்பகத்தன்மையின் முழுமைக்கு நம்மை வழிநடத்துவதற்கும் நமக்காகப் பரிந்து பேசுகிறார். ஆகவே, சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவருமே குறைபாடுடையவர்கள் என்றும் நமது தனிமையின் நேரங்கள், நமக்குள்ளிருக்கும் வெறுமை நிரப்பப்படவேண்டுமென கூக்குரலிடுகிறது என்றும் கூறினார்.

நமது செயல்பாடுகளில் நாம் பின்வாங்க வேண்டும் என்ற சோதனைக்கு உட்படும்போதெல்லாம், நாம் அன்னை மரியாவை நோக்கி ஓடுவோம் என்றும், நம் வாழ்வில் உள்ள பிரச்சனைக்குரிய முடிச்சுகளை அவிழ்க்க முடியாதபோதெல்லாம் இனி அவரிடம் அடைக்கலம் தேடுவோம் என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை,  அமைதியின்றி தவிக்கும் நம் காலத்தில், மனித குடும்பத்தை இணைக்கக்கூடிய ஒரு தாய் தேவை என்பதையும் வலியுறுத்தினார்.

நாம் ஒற்றுமையின் கைவினைஞர்களாக மாற அன்னை மரியாவை உற்றுநோக்குவோம் என்றும்,  அவருடைய தாய்வழி படைப்பாற்றல் மற்றும் அவருடைய குழந்தைகளுக்கான அக்கறையுடன் அவ்வாறு செய்வோம் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இதற்கு காரணம் என்னவெனில் மரியா, அவரது குழந்தைகளை ஒன்றிணைத்து ஆறுதல்படுத்துகிறார்; அவர்களின் துயரங்களைக் கேட்கிறார், அவர்களின் கண்ணீரைத் துடிக்கிறார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

இப்புத்தாண்டை அன்னை மரியாவின் பாதுகாவலில் ஒப்படைப்போம், நமது வாழ்வை அவரில் அர்ப்பணமாக்குவோம், கனிவான அன்புடன்,அவர் முழுமையாக நம் கண்களைத் திறப்பார். ஏனென்றால், காலத்தின் முழுமையாய் இருக்கின்ற இயேசுவை நோக்கி அவர் நம்மை வழிநடத்திச் செல்வார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2024, 14:04