தேடுதல்

Nolite timere அமைப்பு சிறுமியுடன் திருத்தந்தை பிரான்சிஸ் Nolite timere அமைப்பு சிறுமியுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

குழந்தைகளின் புன்னகை எதிர்காலத்திற்கான நம்பிக்கை

1994 ஆம் ஆண்டில் ருவாண்டாவில் நடந்த கொடூரமான இனப்படுகொலையின் விளைவினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக Nolite timere சங்கம் தொடங்கும் முயற்சிக்கு அதிக நிதியுதவி அளித்து உதவியவர் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

25 ஆண்டுகளாக குழந்தைகளின் நனலுக்காக திறந்த மனம் மற்றும் அளவில்லாத அன்பு, அவர்களின் புன்னகையை திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற பொதுவான விருப்பம் போன்றவற்றால் ஒன்றுபட்டு, ருவாண்டா குழந்தைகள் நலஅமைப்பினர்  பணியாற்றுகின்றனர் என்றும், குழந்தைகளின் புன்னகை எதிர்காலத்திற்கான நம்பிக்கை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 27 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் Nolite timere அதாவது அஞ்சவேண்டாம் என்னும் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 300 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ருவாண்டாவில் குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட Cité des Jeunes Nazareth a Mbare சங்கத்தின்  25 ஆம் ஆண்டிற்காக தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டில் ருவாண்டாவில் நடந்த கொடூரமான இனப்படுகொலையின் விளைவினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக Nolite timere சங்கம் தொடங்கும் முயற்சிக்கு அதிக நிதியுதவி அளித்து உதவியவர் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் என்றும், இனப்படுகொலை என்பது மிகவும் கொடியது, பயங்கரமானது இதனை மறந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கையைத் தருகிறோம் என்ற பாடலை பாடிய அக்குழுவினரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், நூற்றுக்கணக்கான குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி, வாழ்வாதாரம், சமயம் போன்றவற்றிற்காக உதவிகள் செய்துவரும் அவர்கள் பணி பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

Cité இயக்கத்தின் சின்னமானது ஒற்றுமை மற்றும் பகிர்வினை அடையாளப்படுத்துகின்றது என்றும், மக்களுக்கு இடையிலான சுவர்களும் பிளவுகளும் அதிகரித்து இருந்தாலும் தொண்டுப்பணிகளுக்கு எந்த தடையும் இல்லை என்பதனை இவ்வியக்கம் அடையாளப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தைகளின் புன்னகையைப் பறிக்கும் போர் 

போர்களும் ஆயுதங்களும் குழந்தைகளின் புன்னகையைப் பறிக்கின்றன, இது வருத்தத்தை விளைவிக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மக்கள் மற்றும் குழந்தைகளிடையே ஒற்றுமையையும் நட்புணர்வையும் வளர்ப்பதற்கான சூழலை இவ்வியக்கத்தார் உருவாக்கி நீடித்த உறவுகளுக்கு உயிர் கொடுக்கின்றார்கள் என்றும் கூறினார்.

இந்த ஒற்றுமை மற்றும் நட்புணர்வினால் வயது, நாடு, கலாச்சாரம், சமூகநிலை போன்றவற்றின் வேறுபாடுகளைக் கடந்து, அன்பின் வலையமைப்பினை குழந்தைகள் நலனுக்கான இவ்வியக்கம் உருவாக்குகின்றது என்றும் கூறினார்.    

சமுதாயத்தில் மனித மற்றும் கிறிஸ்தவ முகத்தை வெளிப்படுத்துகின்ற தன்னார்வலர்கள், இரக்கத்தின் கைவினைஞர்களாக, மக்களோடு நெருக்கமாக இருந்து, மற்றவரின் தேவைகளுக்கு எப்போதும் செவிமடுப்பவர்களாக இருக்கின்றார்கள் என்ற தனது டிசம்பர் (2022) மாத செபக்கருத்தையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகில் வன்முறை மற்றும் மோதல்கள் நிறுத்தப்பட ஒன்றிணைந்து செபிப்போம் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், பல குழந்தைகள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், இறக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளான போர் இனி ஒருபோதும் வேண்டாம் என்பதனையும் வலியுறுத்தினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2024, 13:15