தேடுதல்

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருக்காட்சிப் பெருவிழா

ஏராளமான கர்தினால்கள், ஆயர்கள் அருள்பணியாளர்கள் திருத்தந்தையுடன் இணைந்து வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சனவரி 6 சனிக்கிழமை காலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியினை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். திருப்பலியில் ஏராளமான கர்தினால்கள், ஆயர்கள் அருள்பணியாளர்கள் திருத்தந்தையுடன் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். ஏறக்குறைய 6000 திருப்பயணிகள் ithதிருப்பலியில் பங்கேற்றனர்.

முதல் வாசகமானது ஆங்கிலத்திலும், இரண்டாம் வாசகமானது இஸ்பானிய மொழியிலும். வாசித்தளிக்கப்பட்டன. பதிலுரைப்பாடலானது இத்தாலியின் சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர்கள் குழுவினரால் இத்தாலியத்தில் பாடப்பட்டது.

திருத்தொண்டர் ஒருவர் நற்செய்தி வாசகத்தை இத்தாலிய மொழியில் வாசித்தளித்தார். அதன்பின் உயிர்ப்பு பெருவிழா பற்றிய அறிவிப்பானது திருத்தொண்டரால் எடுத்துரைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் நாள்  உயிர்ப்புப்பெருவிழா கொண்டாடப்பட உள்ளது என்பதையும், தவக்காலமானது பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவானது மே மாதம் 9ஆம் நாளும், திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையானது டிசம்பர் மாதம் 1ஆம் நாள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்தாலியில் நமதாண்டவரின் விண்ணேற்றப்பெருவிழா மே மாதம் 12 ஆம் நாள் சிறப்பிக்கப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.  அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருக்காட்சிப் பெருவிழா மறையுரையினை திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

நம்பிக்கையாளர்கள் மன்றாட்டானது சீனம், பிரெஞ்சு, போர்த்துக்கீசீயம், கொரியம், ஸ்வாகிலி ஆகிய மொழிகளில் திருஅவை மற்றும் நற்செய்தி அறிவிப்பாளர்கள்,  பூமியில் வாழும் எல்லா மக்கள், துன்புறுபவர்கள், உண்மையைத் தேடுபவர்கள் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சமூகங்களுக்காகவும் எடுத்துரைக்கப்பட்டன.

காணிக்கைப் பவனியின் போது மூன்று குடும்பங்கள் திருத்தந்தைக்கு தங்களது காணிக்கைப் பொருள்களைக் கொடுத்து மகிழ்ந்தனர். நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் திருப்பலியின் நற்கருணை மன்றாட்டினை எடுத்துரைத்து இறையருள் வேண்டினார். திருப்பயணிகள் மற்றும் மக்கள் அனைவரும் பக்தியுடன் இத்திருப்பலியில் கலந்து கொள்ள, திருப்பலியின் நிறைவில் கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பலிக்கு முன்பாக வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும்  அர்ஜெண்டினாவின் பெனடிக்டைன் துறவற சபை அருள்சகோதரிகளை சந்தித்து வரவேற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2024, 12:11