தேடுதல்

அன்னை மரியா, அமைதியின் பேராலயம்!

அன்பு, தன்னை பிறருக்கு வழங்குவதில் ஒருபோதும் மூச்சுத் திணறுவதில்லை, அன்பு மற்றவருக்கு இடமளிக்கிறது மற்றும் அவர்களை வளர்ச்சியடையச் செய்கின்றது : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்னை மரியா அமைதியின் பேராலயம் என்பது அழகான ஓர் உருவம் என்றும், அவரிடம் துலங்கிய அமைதி மற்றும் தாழ்ச்சியின் வழியாக, கடவுளும் மனிதரும் சந்திக்கும் அவரின் முதல் பேராலயமாக மரியா விளங்கினார் என்றும் புகழாரம் சூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 1, புத்தாண்டின் முதல் நாளான திங்களன்று, நம் அன்னையாம் திருஅவை, ‘மரியா, இறைவனின் தாய்’ என்ற பெருவிழாவைச் சிறப்பிக்கும் வேளை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

இன்றைய நற்செய்தி, மரியாவின் மகத்துவம் என்பது, சில அசாதாரண செயல்களைச் செய்வதில் இல்லை, மாறாக, இடையர்கள், வானதூதர்களிடமிருந்து குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை அவரிடம் தெரிவித்தபோது, அவர் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் (காண். லூக்கா 2:15-16) என்பதில்தான் அடங்கியுள்ளது என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

அன்னை மரியா கொண்டிருந்த அமைதி என்பது ஓர் அழகான தனிச்சிறப்பு என்றும், இது வார்த்தைகள் இல்லாதது அல்ல, ஆனால் கடவுள் செய்யும் அதிசயங்களை வியந்து அவரை வழிபாடும் அமைதி என்று உரைத்த திருத்தந்தை, கடவுளின் வியப்புக்குரிய செயல்களையெல்லாம் மரியா தனது உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்ததன் காரணமாக, அவர் தன்னுள் பிறந்த கடவுளின் மகனுக்கு இடமளிக்கிறார் என்றும், அமைதி மற்றும் வழிபாட்டில்  மரியா இயேசுவை மையப்படுத்தி, அவரே மீட்பர் என்பதற்கு சான்று பகர்கின்றார் என்றும் எடுத்துக்காட்டினார்.

மரியா, இயேசுவைத் தன் வயிற்றில் கருத்தாங்கி பெற்றெடுத்ததால் மட்டுமல்ல, மாறாக, அவருடைய இடத்தை ஆக்கிரமிக்காமல் அவரைப் பெற்றெடுத்ததாலே அவர் தாயாகப் போற்றப்படுகிறார் என்று விளக்கிய திருத்தந்தை, மரியா, சிலுவையின் அடியிலும், இருள்சூழ்ந்த நேரத்திலும் தன் மகனைக் குறித்து தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்தார் என்றும், மேலும் அவருக்குத் தொடர்ந்து இடமளித்து, நமக்காக அவரை உருவாக்குவார் என்றும் தெரிவித்தார்.

இன்றைய நம் அன்னையர்களும், அவர்களின் மறைவான கவனிப்பு மற்றும் அக்கறையுடன், அவர்கள் பெரும்பாலும் அமைதியின் அற்புதமான பேராலயங்களாகத் திகழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவர்கள் நம்மை இவ்வுலகில் பிறப்பித்து, தொடர்ந்து நாம் வளர்ச்சி காணவேண்டும் என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் நம்மைப் பின்தொடர்கின்றனர் என்றும் விவரித்தார்.

ஆகவே, சகோதரர் சகோதரிகளே, புத்தாண்டின் தொடக்கத்தில் அன்னை மரியாவை உற்றுநோக்குவோம், இந்நாளில் நன்றி நிறைந்த இதயங்களுடன், நம் அன்னையர்களை நினைத்துப் பார்ப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக மனித மாண்பை மதிக்கும், பிறருக்காக ஓர் இடத்தை வழங்கும், சுதந்திர மனப்பான்மையை அளிக்கும்,  அனைத்து வகையான தன்னலம், அடக்குமுறை மற்றும் வன்முறையை நிராகரிக்கும் அமைதியும் தூய்மையும் நிறைந்த அன்பை நம் அன்னையர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இன்றைய உலக அமைதி நாளுக்கான செய்தி நமக்கு நினைவுபடுத்துவதுபோல், மனிதர்கள் சுயநலம், தன்னல ஆர்வம், இலாப வேட்கை மற்றும் அதிகாரத் தாகம் ஆகியவற்றின் தூண்டுதலுக்கு அடிபணியும்போது சுதந்திரம் மற்றும் அமைதியான சகவாழ்வு அச்சுறுத்தப்படுகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை,  மறுபுறம் அன்பு என்பது,  மரியாதை மற்றும் இரக்கத்தால் பிறப்பது என்றும், இது தடைகளை உடைத்து  உடன்பிறந்த உறவுநிலையில் நம்மை வாழச் செய்கிறது என்றும், நியாயமான மற்றும் மனிதாபிமான,  மிகவும் அமைதியான சமூகங்களை உருவாக்க உதவுகிறது என்றும் உரைத்தார் திருத்தந்தை

புத்தாண்டான இந்நாளில், நல் வாழ்வை உருவாக்கும் இந்தக்  கனிவான, அமைதியான மற்றும் விவேகமான அன்பில் வளர, உலகில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பாதைகளைத் திறக்க, கடவுளின் அன்னையும் நமது அன்னையுமான மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம் என்று கூறித் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2024, 13:52