தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் அதிகமான விழிப்புணர்வுத் தேவை!

ஒவ்வொரு செயலிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை, இரக்கமுள்ள விவேகத்துடன் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திடுங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகரில் பணிபுரிபவர்கள் நிச்சயமாக உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுகிறார்கள் என்றும், ஆனால் அதேவேளையில், ஊழலின் மோகம் மிகவும் ஆபத்தானதாக இருப்பதால் அவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 11, இத்திங்களன்று, வத்திக்கான் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலக ஊழியர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊழலின் நயவஞ்சகத்தை எதிர்த்துப் போராடுமாறு அதன் பணியாளர்களை வலியுறுத்தினார்.

ஊழல்கள் தவறான நடத்தையை சரிசெய்வதை விட செய்தித்தாள்களின் பக்கங்களை நிரப்புவதற்கு அதிகம் சேவை செய்வதால், ஒவ்வொரு செயலிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை, இரக்கமுள்ள விவேகத்துடன் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்களிடம் அதிகம் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இதுமட்டுமன்றி, ஊழலின் நயவஞ்சகத்தன்மையை தடுக்கக்கூடிய பாதுகாப்புகளை உருவாக்கத் திருப்பீடச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதன் பொறுப்பானவர்களுக்கு உதவ அவர்களுக்குத் தான் அழைப்புவிடுப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

சுதந்திரம், அனைத்துலகக் கொள்கைகளில் கவனம் செலுத்துதல், தொழில்முறை ஆகிய திருப்பீட தணிக்கை அலுவலகத்தில் விளங்கவேண்டிய மூன்று முக்கிய பண்புகளையும் தனது உரையின்போது அவர்களுக்கு வலியுறுத்தினார் திருத்தந்தை.

உங்களில் சிலர் காரித்தாஸின் உணவுகளை வழங்கும் சுயவிருப்பப் பணியாளர்களாகப் பணியாற்றுவது தனக்குத் தெரியும் என்றும், இது ஒரு அழகான விடயம் என்றும் பாராட்டிய திருத்தந்தை, திறந்த மனதுடன் எளிமையாகவும் சுதந்திரமாகவும் இப்பணியைச் செய்யுங்கள் என்றும், மக்களுடன் பேசவும் அவர்களின் கதைகளைக் கேட்கவும் நேரம் ஒதுக்குங்கள் என்றும் அவர்களிடம் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2023, 15:13