தேடுதல்

அமல அன்னையிடம் உலக மக்களுக்காக செபித்த திருத்தந்தை

உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் இருக்கும் Salus Populi Romani என்ற அன்னை மரியா திருவுருவம் முன் செபித்து தங்க ரோஜாவை காணிக்கையாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வன்முறையில் இருந்து மக்களை விடுவித்து, பெண்கள் மற்றும் அன்னையர்களின் கண்ணீரைத் துடைத்தருளும் என்றும் வறுமை போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பைத் தந்தருளும் என்றும் அமல அன்னையிடம் தன் செபத்தை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை அமல உற்பவ அன்னை திருவிழாவை முன்னிட்டு உரோம் உள்ளூர் நேரம் மாலை 4.00 மணியளவில், உரோம் நகரின் மையத்தில் உள்ள Spagna வளாகம் சென்று, அன்னைமரியா திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு செபித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், மோதல் மற்றும் வன்முறையினால் கொல்லப்பட்ட தங்கள் குழந்தைகளுக்காக துன்புறும் அன்னையர்கள், அவர்களை அத்துன்பத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர முயற்சிப்பவர்கள், உரோம் மற்றும் இத்தாலிய மக்கள், உக்ரேன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என பலர் Spagna வளாகத்தில் கூடியிருக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியா உருவத்தின் அடியில் வெள்ளை நிற ரோஜா மலர்க்கொத்தைக் காணிக்கையாகக் கையளித்தார்.

துன்புறும் ஒவ்வொரு மக்களையும் நினைவுகூர்ந்து வெள்ளை நிற ரோஜா மலர்க் கொத்துக்களைக் காணிக்கையாக்கிய திருத்தந்தை அவர்கள் அன்னை மரியா எல்லா தீமைகளையும் துன்பங்களையும் வென்றதற்கான அடையாளம் என்றும் கூறினார்.

அன்னை மரியே நீரும் உமது இருப்பும், தீமை என்பது முதலான மற்றும் கடைசியான வார்த்தை அல்ல என்பதை எங்களுக்கு நினைவூட்டுகின்றது என்றும், நாங்கள் அடைய வேண்டிய இலக்கு, இறப்பு அல்ல வாழ்வு, வெறுப்பு அல்ல சகோதரத்துவம், மோதல் அல்ல இணக்கம், போர் அல்ல அமைதி என்று உணர்த்துகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த வாரங்களில் நுரையீரல் தொற்று அலற்சி மற்றும் காய்ச்சலால் உடல்நலமற்று மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை அவர்கள் உரோம் நகர் பாரம்பரிய வழிபாட்டுமுறைகளில் ஒன்றான அமல அன்னை திருஉருஅவத்திற்கு மாலை அர்ப்பணித்து செபிப்பதை தொடர்ந்து  ஒவ்வொரு ஆண்டும் செய்து  வருகின்றார். 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்றினால் உலக மக்கள் அனைவரும் தடை உத்தரவின் பேரில் வீட்டில் இருந்தபோதும் திருத்தந்தை டிசம்பர் 8 அமல அன்னைத் திருவிழாவின் போது வைகறையில் அன்னையின் திருவத்திற்கு முன் நின்று உலக மக்களுக்காக செபித்தது  குறிப்பிடத்தக்கது.  

உரோம் உள்ளூர் நேரம் மாலை 4 மணி, இந்திய இலங்கை நேரப்படி இரவு 8.30 மணியளவில் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் இருக்கும் Salus Populi Romani என்ற அன்னை மரியா திருவுருவம் முன் செபித்து தங்க ரோஜாவை காணிக்கையாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது தலைமைத்துவப் பணியின் பத்தாண்டுகளில் 115ஆவது  முறையாக டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2023, 10:56