தேடுதல்

கத்தோலிக்க நடவடிக்கைகளின் சிறார் அமைப்பு என்ற குழுவின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை கத்தோலிக்க நடவடிக்கைகளின் சிறார் அமைப்பு என்ற குழுவின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை  (ANSA)

அன்புகூர முதலில் கடவுள், இரண்டாவது அயலார், மூன்றாவது படைப்பு

திருத்தந்தை : வன்முறைகளின் சக்கரச் சுற்றை நிறுத்தும் நோக்கத்தில், அதற்கு பொறுப்பான மனங்களைத் தொடுவதற்கு நாம் சிறு விளக்குகளாகச் செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

போர்களின் காரணமாக எண்ணற்ற சிறார் வேதனைகளை அனுபவித்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஒருவரையொருவர் உடன்பிறப்புக்களாக நடத்தி அன்புகூர்வது என்பது ஒரு மாபெரும் கொடையாக இருக்கும் என சிறார் அமைப்பு ஒன்றிடம் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க நடவடிக்கைகளின் சிறார் அமைப்பு என்ற குழுவின் அங்கத்தினர்களை டிசம்பர் 15ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல நாடுகளில் போர்களால் எண்ணற்ற குழந்தைகள் இறந்துவருவது குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.

தற்போது காசாவில் இடம்பெற்றுவரும் போரால் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதையும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரால் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளும், ஏமனில் சில ஆண்டுகளாக தொடரும் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் உயிரிழந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறைகளின் சக்கரச் சுற்றை நிறுத்தும் நோக்கத்தில், அதற்கு பொறுப்பான மனங்களைத் தொடுவதற்கு நாம் சிறு விளக்குகளாகச் செயல்படவேண்டும் என இப்போரில் உயிரிழந்த குழந்தைகள் நம்மை நோக்கிக் கேட்கிறார்கள் என மேலும் கூறினார்.

அன்புகூர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அக்குழுவிடம் எடுத்துரைத்த திருத்தந்தை, முதலில் கடவுளையும், இரண்டாவது அயலாரையும், மூன்றாவதாக படைப்பையும் அன்புகூர நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்து, ‘இது நம் இல்லம்’ என அக்குழுவால் எடுக்கப்பட்டுள்ள இவ்வாண்டிற்கான தலைப்பு குறித்தும் பாராட்டுக்களை வெளியிட்டார்.

உடன்பிறந்த உணர்வுநிலைகளைப் பகிர்ந்து அன்பின் பாதையில் அர்ப்பணத்துடனும் நம்பிக்கையுடனும் நடைபோடுங்கள் என்ற விண்ணப்பத்தையும் அக்குழுவின் சிறாருக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2023, 15:00