உங்களின் திருப்பயணப் பணியில் அன்னையின் துணையைத் தேடுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அன்னை மரியாவை நம்புங்கள், அவருடைய அரவணைப்பு பெரும்பாலும் உங்கள் திருப்பயணங்களின் இலக்காகும் என்றும், ஒவ்வொருவரும் கொண்டு வரும் உழைப்பு, வேதனைகள், வலிகளை அன்னையின் காலடியில் கிடத்தவும் அவரைப் பற்றி சிந்திக்கவும், தொடர்ந்து மரியாவை நாடித்தேடுங்கள் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 14, இவ்வியாழனன்று, UNITALSI எனப்படும் லூர்து மற்றும் அனைத்துலகத் திருத்தலங்களுக்கு நோயாளர்களை அழைத்துச் செல்லும் இத்தாலிய தேசிய ஒன்றியத்தின் உறுப்பினர்களைத் திருபீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
உங்கள் எண்ணற்ற மற்றும் மாறுபட்ட இருப்பு நோயாளர்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், தன்னார்வத் தொண்டர்கள், குடும்பங்கள், நலப் பணியாளர்கள், இளைஞர்கள், அருள்பணியாளர்கள் யாவரையும் திருஅவையின் அழகுக்குச் சான்றாக விளங்கச் செய்கின்றது என்றும், உங்களின் இப்பணிகள் வழியாக நற்செய்தியை அறிவிக்கத் தெரிந்த ஒரு திருஅவையாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்றும் அவர்களைப் பாராட்டினார் திருத்தந்தை.
மீளமுடியாத சிதைக்கும் மூட்டுவலியால் அவதியுற்ற இளம் Giovanni Battista Tomassi, லூர்து பயணத்தின் போது இறைவேண்டலின் ஆறுதலை அனுபவித்த பிறகு UNITALSI என்ற அமைப்பை நிறுவியதிலிருந்து திருப்பயணம் என்பது உங்கள் பணியின் மையமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
திருப்பயணத்தின் அனுபவமானது வரவேற்பு, விருந்தோம்பல், ஒன்றிப்பு போன்ற மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது என்றும், மேலும் உங்கள் முயற்சிகளில் நலமான மற்றும் நோயாளர்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுநிலையினரை நீங்கள் ஒரே பாதையில் நடுத்துகிறீர்கள் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, உங்களின் இந்தச் செயல் ஒன்றுபட்டு நடக்கும், அதைச் செய்ய முடியாதவர்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் யாரையும் விட்டுச் செல்ல விரும்பாத ஒரு திருஅவையின் உயிருள்ள அடையாளமாக அமைகிறது என்றும் கூறினார்.
நல்ல சமாரியரைப் போலவே, இரக்கமுடன் அணுகி, எண்ணெய் மற்றும் மதுவை ஊற்றி காயங்களைக் கட்டும் ஒரு "கள மருத்துவமனை" (காண்க லூக் 10:34) என்ற திருஅவையின் உருவமாக உள்ளது உங்களின் அமைப்பு என்று கூறிய திருத்தந்தை, இப்படிப்பட்ட மேன்மைவாய்ந்த உங்கள் பணி எப்போதும் உங்கள் பாணியாக இருக்கட்டும் என்றும் அவர்களிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்