தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்  

துபாய் COP-28 உச்சிமாநாட்டில் திருத்தந்தை பங்கேற்கவில்லை!

திருத்தந்தையின் மருத்துவர்கள் அவரிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், காலநிலை மாற்றம் தொடர்பான COP-28 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவரின் பயணத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது : மத்தேயோ புரூனி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

COP-28 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகத் துபாய்க்குத் திட்டமிடப்பட்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று திருத்தந்தையின் மருத்துவர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும், அவர்களின் ஆலோசனையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.

நவம்பர் 28, இச்செவ்வாய்யன்று மாலை வெளியிட்ட அறிக்கைவொன்றில், காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று தொடர்பாக திருத்தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், அவரது மருத்துவர்கள் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், காலநிலை மாற்றம் தொடர்பான COP-28 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவரின் பயணத் திட்டம் கைவிடப்பட்டதாக உரைத்துள்ளார் புரூனி.

வரவிருக்கும் நாட்களில் நடைபெறும் விவாதங்களில் திருத்தந்தை மற்றும் திருப்பீடத்தின் விருப்பத்தைப் பின்பற்றி, இதில் வேறுவழிகளில் பங்கேற்கும் வழிமுறைகள் குறித்தும் விரைவில் வரையறுக்கப்படும் என்றும் எடுத்துரைத்துள்ளார் புரூனி.

திருத்தந்தை குணமடைவதை எளிதாக்கும் வகையில், இந்த நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த சில முக்கிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும், நிறுவனப் பணிகள் தொடர்புடைய மற்ற நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் புரூனி.

நவம்பர் 27, இத்திங்கள் முதல் திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க வகையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும், காய்ச்சல் அல்லது குறிப்பிட்ட சுவாசக் கோளாறுகள் எதுவும் இல்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள புரூனி அவர்கள், ஆனாலும், அவரது மருத்துவர்கள் அவர் தொடர்ந்து ஓய்வெடுப்பது விரும்பத்தக்கது என்று கூறியதாகவும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2023, 13:38