தேடுதல்

அனைத்துலக இறையியல் கழகத்தினருடன் திருத்தந்தை அனைத்துலக இறையியல் கழகத்தினருடன் திருத்தந்தை   (ANSA)

கிறிஸ்துவின் ஒளியை உலகெங்கினும் ஒளிரச் செய்யுங்கள்!

கடவுளின் அற்புதமான மனிதமயமாக்கும் ஆற்றலின் வளமையை வெளிக்கொணரும் பெரும் பொறுப்பு இறையியலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்துவின் முடிவற்ற புதிய மற்றும் வியப்பளிக்கும் மங்காத ஒளியை திருஅவை என்னும் இல்லத்தின்மீதும் உலகின் இருளிலும் பரப்புவது இறையியலாளர்களின் கையில் உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 30, இவ்வியாழனன்று, அனைத்துலக இறையியல் கழகத்தினரைச் வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இன்றும் நாம் திருஅவையின் மறைத்தூதுப் பணிக்காக நமது இதயம் மற்றும் மனதின் முழு ஆற்றலோடும் வலிமையோடும் நம்மையே நாம் அர்ப்பணிக்க அழைக்கப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

அன்புகூரும், மன்னிக்கும், மீட்பளிக்கும், விடுவிக்கும், மக்களை ஊக்குவித்து, சகோதரத்துவ பணிக்கு வரவழைக்கும் கடவுளை எப்படி நம்பிக்கையுடன் முன்வைப்பது என்பதை அறியும் சிந்தனை முறை இன்று நமக்குத் தேவை என்பது குறித்து, இவ்வாண்டு ஜூலை ஒன்றாம் தேதி திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி மூன்று காரியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை .

ஆன்மீக நோக்கம்.

நீசேயா திருச்சங்கத்தில் இறைத்தந்தையின் ஒரே மகனான இயேசுவில் நமது நம்பிக்கை அறிவிக்கப்பட்டது. நமக்காகவும், நமது மீட்புக்காகவும் மனிதராக மனுவுருவெடுத்த இயேசு, கடவுளிடமிருந்து கடவுளாகவும், ஒளியிடமிருந்து ஒளியாகவும் உதித்தவர் என்று விளக்கிய திருத்தந்தை,  இது சிந்திக்க முடியாத அறிவின் ஒளி மட்டுமல்ல, மாறாக, அது தந்தையின் அன்புடன் இருத்தலை விளக்கும் ஒளியாகும் என்றும் கூறினார்

“மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்” (காண்க மத் 5:15) என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவின் முடிவற்ற புதிய மற்றும் வியப்பளிக்கும் மங்காத ஒளியை திருஅவை என்னும் இல்லத்தின்மீதும் உலகின் இருளிலும் பரப்புவது இறையியலாளர்களின் கையில் உள்ளது என்று கூறினார்.

ஒன்றிணைந்த பயணம்  

ஒன்றிணைந்த பயணம் என்பது, கிறிஸ்துவின் வழியாகவும், தூய ஆவியாரின் உயிர்மூச்சிலும், மனிதகுலத்தைச் சந்திக்க வரும் மூவொரு கடவுளின்  இயக்கவியலை, ஒன்றிப்பு மற்றும் பங்கேற்பு செயல்முறைகளாக மாற்றுவதற்கான வழியாகும் என்று விவரித்த திருத்தந்தை, இந்த அற்புதமான 'மனிதமயமாக்கும் ஆற்றலின்' வளமையை வெளிக்கொணரும் பெரும் பொறுப்பு இறையியலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

கடவுளின் வார்த்தையிலும், வாழும் பாரம்பரியத்திலும், வேரூன்றிய அன்புடனும் விவேகத்துடனும் தூய ஆவியாரின் இணக்கத்தின்படி நடக்கும் ஒரு திருஅவைக்கு, உங்கள் கூட்டுப் பணியிலும், உங்கள் திருஅவைசார் மற்றும் கலாச்சார தனித்தன்மைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் சாட்சிகளாக இருங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நீங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்டதில் மட்டுமே திருப்தி அடையாது, இறைவனின் அதிமிக மகிமைக்காக இன்னும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் திறந்த இதயத்துடன் இருங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு

முழு கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய பயணத்திற்கான 2025-ஆம் ஆண்டு யூபிலி விழாவினை இதனுடன் பொருத்தி சிந்திப்போம் என்று உரைத்த திருத்தந்தை, நீசேயாவின் திருச்சங்கம் இயேசுவின் சீடர்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், துல்லியமாக 2025-ஆம் ஆண்டின் உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் தேதி அனைத்து கிறிஸ்தவ சபைகளுக்கும் ஒத்ததாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டத்திற்கான தேதி எல்லாருக்கும் பொதுவானதாக அமைந்தால் அது எவ்வளவு அழகாக இருக்கும்! என்று விருப்பத்தையும் அவர்களிடம் வெளிப்படுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2023, 14:25