தேடுதல்

நவம்பர் மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து

ஒருவர் திருத்தந்தை ஆகிவிட்டதால் அவர் மனித நேயத்தை இழக்கிறார் என்று அர்த்தமில்லை. மாறாக, கடவுளின் புனிதமான மற்றும் உண்மையுள்ள இறைமக்களுடன் தனது மனிதநேயம் ஒவ்வொரு நாளும் வளர்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை, தனது பணியின் போது, ​​இயேசுவால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை, எப்போதும் தூய ஆவியாரின் உதவியோடு, விசுவாசத்தில் தொடர்ந்து வளர்த்தெடுக்க அவருக்காக இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 31, இச்செவ்வாயன்று, வெளியிட்டுள்ள நவம்பர் மாதத்திற்கான தனது செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்களின் செபம் தனக்குப் பலத்தைத் தருவதாகவும், தூய ஆவியானவருக்குச் செவிமடுத்து, சரியானவற்றைத் தேர்ந்துதெளிந்து திருஅவையை சிறப்பாக வழிநடத்திட தனக்குப் பெரிதும் உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவர் திருத்தந்தை ஆகிவிட்டதால் அவர் மனித நேயத்தை இழக்கிறார் என்று அர்த்தமில்லை. மாறாக, கடவுளின் புனிதமான மற்றும் உண்மையுள்ள இறைமக்களுடன் தனது மனிதநேயம் ஒவ்வொரு நாளும் வளர்கிறது என்றும் தனது செபக் கருத்தில்  எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையாக இருப்பதும் ஒரு செயல்முறைதான் (procces) என்றும், ஒரு மேய்ப்பராக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை அந்த நபர் இதன்வழியாக அறிந்து கொள்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும் இந்தச் செயல்முறையில், ஒரு திருத்தந்தை என்பவர் எவ்வாறு அதிக அறப்பண்பு கொண்டவராக, அதிக இரக்கம் நிறைந்தவராக, மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, நமது இறைத்தந்தையான கடவுளைப் போல மிகவும் பொறுமை உள்ளவராக இருப்பது எப்படி என்பதை அவர் கற்றுக்கொள்கிறார் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையர் பதவியேற்பின் தொடக்கத்தில், அவர் கடுமையாகத் தீர்ப்பளிக்கப்படுவார் என்பதை அறிந்த அனைத்துத் திருத்தந்தையர்களும் இந்த நடுக்கம், பயம் போன்றவற்றை உணர்ந்ததாக தன்னால் கற்பனை செய்ய முடிகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

தயவுகூர்ந்து, பரந்த மனப்பான்மையுடன் மதிப்பீடு செய்யுமாறு தான்  கேட்டுக்கொள்கொள்வதாகவும், மேலும், தான் உட்பட திருத்தந்தை என்பவர் யாராக இருந்தாலும் தூய ஆவியாரின் உதவியைப் பெற்று அந்த உதவிக்கு அவர் பணிவாக இருக்குமாறு இறைமக்கள் இறைவேண்டல் செய்யவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு நவம்பர் மாதத்திற்கான தனது செபக் கருத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை தனக்காக செபிக்கும்படி இறைமக்களை கேட்டுக்கொண்டு வருகின்றார். குறிப்பாக, அவர் பல்வேறு குழுக்களைச் சந்திக்கும்போதும், ஒவ்வொரு புதன்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நிகழும் புதன் பொதுமறைக்கல்வி உரை மற்றும் மூவேளை செப உரையின்போது  பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளைச் சந்திக்கும்போதும் அவர் இவ்வாறு விண்ணப்பித்து வருகின்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

திருஅவையின் வரலாற்றில் இன்றுவரை உள்ள திருத்தந்தையர்களின் மொத்த எண்ணிக்கை 266. இவர்களில் 82 பேர் புனிதர்களாகவும் 11 பேர் அருளாளர்களாகவும், இருவர் இறைஊழியர்களாகவும், ஒருவர் வணக்கத்திற்குரியவராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2023, 09:52