தேடுதல்

டிசம்பர் மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து!

சமுதாயத்திலுள்ள மற்ற எல்லோருடனும் மாற்றுத்திறனாளிகளையும் ஒன்றிணைக்கும் விதமாக அவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களும் முன்முயற்சிகளும் தேவைப்படுகின்றன : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் கவனத்தின் மையமாக இருக்க வேண்டும் எனவும், அவர்களின் செயல்பாட்டுப் பங்கேற்பை மேம்படுத்தும் உள்ளடக்கத்  திட்டங்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் ஒன்றித்து இறைவேண்டல் செய்ய அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 28, இப்புதனன்று வெளியிட்ட, டிசம்பர் மாதத்திற்கான செபக் கருத்தில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மிடையே இருக்கும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் பலவீனமானவர்கள் என்றும், அவர்களில் சிலர் அறியாமை அல்லது முற்சார்பு எண்ணங்களில் வேரூன்றி நிராகரிப்புக்கு ஆளாகிறார்கள், அதுவே அவர்களை ஓரங்கட்டுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இத்தகைய காரணங்களால், சமுதாய நிறுவனங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அவர்தம் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் வழியாக அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

சமுதாயத்திலுள்ள மற்ற எல்லோருடனும் மாற்றுத்திறனாளிகளையும் ஒன்றிணைக்கும் விதமாக அவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களும் முன்முயற்சிகளும் தேவை என்பதையும், அனைத்திற்கும் மேலாக, அவர்களுடன் இணைந்து பயணிக்கும் பெரிய இதயங்கள் தேவைப்படுகின்றன என்பதையும் தனது செபக் கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

மேலும் சமுதாயத்திலும், திருஅவையின் வாழ்க்கையிலும், மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் மற்றும் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நமது மனநிலையை சிறிது மாற்றிக்கொண்டு நாம் திறந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்பதையே மேற்சொன்ன செயல்கள் குறிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இவ்விதத்தில், மாற்றுத்திறனாளிகளை முற்றிலும் அணுகக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பங்குத்தளத்தை உருவாக்குவது என்பது உடல் தடைகளை அகற்றுவது மட்டுமல்ல, மாறாக,  நாம் 'அவர்களை' பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு 'நம்மை' பற்றி பேசத் தொடங்குவதைக் குறிப்பிடுகின்றது என்றும் தனது செபக் கருத்தில் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

இன்றைய நம் உலகில் 130 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இது உலக மக்கள்தொகையில் 16 விழுக்காடு. அதாவது, நம்மில் ஆறு பேரில் ஒருவரைக் குறிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 121 கோடி மக்கள் தொகையில், 2.68 கோடி பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 2.21 விழுக்காடாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2023, 13:32