தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

நவம்பர் 29 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நற்செய்தி அறிவிப்பு என்பது இன்றைக்கானது என்பது குறித்து தனது புதன் மறைக்கல்வி உரையினை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரையினை திருப்பயணிகளுக்கு வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சி, நற்செய்தி அறிவிப்பு என்பது எல்லாருக்குமானது என்ற தலைப்புக்களில் கடந்த வாரங்களில் உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக நவம்பர் 29 புதன்கிழமை “நற்செய்தி அறிவிப்பு என்பது இன்றைக்கானது“ என்ற மூன்றாவது படிநிலை பற்றி எடுத்துரைத்தார்.

கடந்த நவம்பர் 25 சனிக்கிழமை முதல் லேசான காய்ச்சலால் திருத்தந்தை உடல் நலக்குறைவு காரணமாக புதன் மறைக்கல்வி உரையினை பேரருள்திரு Filippo Ciampanelli திருத்தந்தையின் சார்பாக வாசித்தளித்தார்.

இத்தாலியின் குளிர்காலமாகிய நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் புதன் மறைக்கல்வி உரையானது வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. திருப்பயணிகள் அனைவரும் மிகுந்த ஆவலுடனும் உற்சாகத்துடனும் திருத்தந்தையின் வருகைக்காக அமைதியுடன் காத்திருக்க ஆறாம் பவுல் அரங்கத்தின் மேடையில் தோன்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்கள் அனைவரும் திருத்தந்தையைக் கண்ட மகிழ்வில் கரவொலி எழுப்பி அவரை அன்புடன் வரவேற்றனர். சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரைக் கூட்டத்தினைத் துவக்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகம் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள நீதியின் பொருட்டுத் துன்புறுதல் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம் அரபு, போர்த்துக்கீசியம், இஸ்பானியம், லித்துவானியம், பிரெஞ்சு,  போன்ற பல மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

1 பேதுரு : 3: 15 -16

உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். 16ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது புதன் மறைக்கல்வி உரையினை எடுத்துரைக்கலானார். கடந்த சனிக்கிழமை முதக் லேசான காய்ச்சலால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது உடல் மற்றும் குரல் இன்னும் சரியாக குணம் பெறவில்லை என்பதால் அவருடைய புதன்மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைக்க பேரருள்திரு Filippo Ciampanelli அவர்களை அழைத்தார். திருத்தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க, திருப்பீடச்செயலகத்தின் பேரருள்திரு Filippo Ciampanelli அவர்கள் திருத்தந்தையின் மறைக்கல்விஉரைக் கருத்துக்களை வாசித்தளித்தார்

திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே,

கடந்த வாரங்களில் நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சி அது எல்லாருக்குமானது என்ற தலைப்புக்களில் நாம் சிந்தித்தோம். இன்று அதன் மூன்றாவது பகுதியாக நற்செய்தி என்பது இன்றைக்கானது என்பது குறித்து சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்.

இன்றைய நாளை, காலத்தை குறித்து நாம் எப்போதும் மோசமான செய்திகளையே கேட்கின்றோம். போர்கள், காலநிலை மாற்றம், கோள்கள் மற்றும் கிரகங்களின் மாற்றங்கள், இடம்பெயர்வுகள், குடும்பம் மற்றும் நம்பிக்கையின் நெருக்கடிகள் இவைகளுக்கு மத்தியில் கவலைக்கான காரணங்களுக்கு இக்காலத்தில் பஞ்சமில்லை. இன்று எல்லாவற்றிற்கும் மேலாக தனிமனிதனையும், தொழில்நுட்பத்தையும் முன்னிலைப்படுத்தி பல பிரச்சனைகளை தீர்க்கும் திறன், பல துறைகளில் அதன் மாபெரும் முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதே நேரத்தில் தனி நபர் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் இத்தகைய கலாச்சாரம் எல்லைகளை அமைக்க விரும்பாத ஒரு சுதந்திர மனநிலையை உறுதிப்படுத்த வழிவகுக்கின்றது. பலவீனமானவர்கள் மற்றும் பின்தங்கியவர்களை வேறுபாடுகளுடன் பார்க்கும் மன நிலையை வெளிப்படுத்துகின்றது.

இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, நிராகரிக்கப்படும் மற்றும் உள்ளார்ந்தவற்றுக்கு அப்பால் வாழ்க்கையைப் பார்க்கப் போராடும் மனிதர்களின் வாழ்வையும் பாதிக்கின்றது. பரந்த அளவில் இருக்கும் பெரிய பெரிய நகரங்கள், தலைசுற்ற வைக்கும் வானளாவிய உயர்ந்த கட்டிடங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, கடவுள் இல்லாத மனித சமுதாயத்தை உலகளவில் ஒழுங்கமைக்க முயற்சிக்கும் வரலாற்றின் நாகரீகத்தில் இன்று நாம் நம்மைக் காண்கிறோம்.

தொடக்க நூலில் குறிப்பிடப்படும் பாபேல் நகரம் மற்றும் அதன் கோபுரம் பற்றிய கதை நினைவுக்கு வருகிறது. சமூகத்தின் செயல்திறனுக்காக ஒவ்வொரு தனித்துவத்தையும் தியாகம் செய்வதை உள்ளடக்கிய ஒரு சமூகத் திட்டத்தை பாபேல் கோபுரம் விவரிக்கிறது. மனிதகுலம் ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசுகிறது – அதனை ஓர் "ஒத்த எண்ணம்" என்று நாம் கூறலாம். இத்தகைய ஒத்த எண்ணம் நமது ஒவ்வொருவரின் தனித்தன்மையை ஒரு நீர்க்குமிழி போல ஒட்டுமொத்தமாக உறிஞ்சிவிடுகின்றது. எனவே தான் கடவுள் அவர்களின் மொழிகளில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார். அதாவது, வேறுபாடுகளை மீண்டும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றார் இறைவன். தனித்துவத்தை வளர்ப்பதற்கான நிலைமைகளை மீண்டும் உருவாக்குகிறார். தனிப்பட்டக் கருத்தியல்கள், தனித்துவம் போன்றவற்றை அவர்களிடத்தில் உருவாக்குகின்றார். மனிதர்களின் ஒட்டுமொத்த சக்தி, ஆற்றல் என்ற மயக்கத்திலிருந்து அவர்களை திசை திருப்புகின்றார். நமது பெயரை நிலை நாட்டுவோம் என்று கூறிய பாபேல் நகரத்தார், வானளவு உயர்ந்து இறைவன் இருக்கும் இருக்கும் இடத்தை அடைய எண்ணினர். இவை மிகவும் ஆபத்தான எண்ணங்கள், அழிவைத் தரும் இலட்சியங்கள், நம்மை அந்நியப்படுத்தும் செயல்கள். இவை இறைவன் வெறுத்து ஒதுக்குபவைகள், இறைவனுக்கு எதிரானவைகள். எனவே இறைவன் மனிதர்களின் இத்தகைய எதிர்பார்ப்புக்களை அழித்து அவர்களை குழப்புகின்றார். இதனால் மனிதர்கள் அழிக்கப்படாமல் அவர்களுக்கு வரவிருந்த தீமையிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர். இக்காலத்திற்கு இந்த நிகழ்வானது ஏற்றார்போல இருக்கின்றது.

மனித உடன்பிறந்த உணர்வு, அமைதி ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பதிலாக பெரும்பாலும் தனிமனித இலட்சியம், தேசியவாதம், தரப்படுத்தல், தொழில்நுட்ப-பொருளாதார கட்டமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இவற்றையே நான் எவாஞ்சலி கௌதியம் சுற்றுமடலில் விளக்க முயன்றேன் எல்லாவற்றிற்கும் மேலாக நற்செய்தி அறிவிப்பு என்பது கடவுளுடனும், மற்றவர்களுடனும், சுற்றுச்சூழலுடனும், தொடர்புகொள்வதற்கான புதிய வழிகளை விளக்குகின்ற மற்றும் அடிப்படை மதிப்புகளை ஊக்குவிக்கின்ற ஓர் அழைப்பாக இருக்க வேண்டும். நற்செய்தி அறிவிப்பு புதிய கதைகள் மற்றும் முன்னுதாரணங்கள் உருவாகும் இடத்திற்குச் செல்வது அவசியம், நகரங்கள் மற்றும் ஆன்மாவின் ஆழமான மையங்களை இயேசுவின் வார்த்தையுடன் அடைய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒருவர் தனது காலத்தின் கலாச்சாரத்தில் வாழ்வதன் வழியாக மட்டுமே இயேசுவை அறிவிக்க முடியும்; இன்று திருத்தூதர் பவுலின் வார்த்தைகளான ‘தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன் என்ற இறைவார்த்தைகளை எப்போதும் நம் இதயங்களில் வைத்திருப்போம். ஆக கடந்த காலத்திலிருந்து வேறுபட்டுள்ள இன்றைய கால மாற்றுப் பார்வைகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பெற்றுக்கொண்ட நம்பிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவது மட்டும் போதாது ஏனெனில் அது உண்மையாக இருந்தாலும், காலப்போக்கில் அந்த நம்பிக்கைக் குறைந்து விடுகின்றது. உண்மை என்பது உரக்க சொல்வதால் மட்டும் அது நம்பகத்தன்மை உடையதாக மாறிவிடாது மாறாக நமது சான்றுள்ள வாழ்வால் எடுத்துரைப்பதாலேயே அது நம்பகத்தன்மை உடையதாகின்றது.

நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் என்பது எளிமையான மீண்டும் மீண்டும் சொல்லப்படும் மறுபரிசீலனை அல்ல மாறாக இன்று இங்கு இப்போது உயிருடன் இருக்கின்றது என்பதற்கான சான்று. இதனை உணர்ந்து நமது காலத்தையும் கலாச்சாரத்தையும், இறைவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு கொடையாகக் கருத வேண்டும் பார்க்கவேண்டும். நற்செய்தி அறிவிப்பவர்கள் நம்முடையவர்கள், தொலைவிலிருந்து தீர்ப்பிடப்படுபவர்கள் அல்ல. உயரமான இடத்தில் இருந்து கொண்டு இயேசுவின் பெயரை உரக்க கூறுபவர்களாக அல்ல மாறாக தெருக்களில், எளிய மக்கள் வாழும் இடங்களில், துன்புறும் மக்கள் வாழும் இடங்களுக்குச் சென்று வாழ்பவர்களே நற்செய்தி அறிவிப்பாளர்கள். இயேசுவைப் பிரதிபலிக்கும், மனிதர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளவகையில் பகிர்ந்து கொள்பவர்கள். ஒரே திருஅவையாக "உரையாடல், சந்திப்பு, ஒற்றுமை ஆகியவற்றின் புளிக்காரமாக செயல்படுபவர்கள். உரையாடலுக்கு நாம் ஒருபோதும் பயப்படக்கூடாது. உண்மையில் உரையாடலின் துல்லியமான ஒப்பீடு மற்றும் விமர்சனம் தான் இறையியலை கருத்தியலாக மாற்றாமல் பாதுகாக்க உதவுகிறது.

தேவையில் இருக்கும் மக்களை விட்டு விலகுவது என்பது நற்செய்தியை குறைவுபடுத்துவது மற்றும் திருஅவையை ஒரு பிரிவாகக் குறைப்பது என்று பொருள்படும். எவ்வாறாயினும், கிறிஸ்தவர்களாகிய நமது நம்பிக்கைக்கான காரணங்களைப் புதுப்பிக்கவும், நம்பிக்கையின் புதையலிலிருந்து "புதிய மற்றும் பழைய விடயங்களை" பிரித்தெடுத்து பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. சுருக்கமாகச் சொன்னால், இன்றைய உலகத்தை மாற்ற விரும்புவதைக் காட்டிலும், இன்றைய நற்செய்தியை சிறப்பாக உள்ளடக்கியதாக நமது மேய்ப்புப்பணிப் பராமரிப்பை மாற்ற வேண்டும். இயேசுவின் விருப்பத்தை நமது விருப்பமாக மாற்றிக் கொள்வோம். நமது பயணத்தில் நம்முடன் பயணிக்கும் நண்பர்கள் கடவுள் மீதான விருப்பத்தை இழக்காமல் இருக்கவும், அவருக்கு நம் இதயங்களைத் திறக்கவும் உதவுவோம். இன்றும் எப்போதும் மனிதனுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஒரே கடவுளாம் இயேசுவைக் கண்டுபிடிப்பதற்கும் அவர்களுக்கு நாம் உதவுவோம்.

இவ்வாறு திருத்தந்தையின் கருத்துக்களை பேரருள்திரு பிலிப்போ சம்பனெல்லி அவர்கள் எடுத்துரைத்தார். அதன்பின் இத்தாலிய சர்க்கஸ் குழுவினர் திருத்தந்தையின் முன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். அதன் பின் சர்க்கஸ் திறமையை வெளிப்படுத்திய திறமையாளர்கள் அனைவரையும் வாழ்த்திப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். அவர்களின் செயல்பாடுகளின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு பெருகிய முறையில் அங்கீகரிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், சர்க்கஸின் இந்த சிறுவர் சிறுமிகளுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மனித ஆன்மாவின் பரிமாணத்தை வெளிப்படுத்தும்  சர்க்கள் குழுவினருக்கு என் நன்றி. நம்மை சிரிக்க வைக்கும் இவர்கள் மிகவும் வலுவான பயிற்சியின் உதாரணத்தையும் நமக்குத் தருகின்றார்கள். ஏனென்றால் அவர்கள் எதை அடையவிரும்புகின்றார்களோ அதற்கு வலுவான, மிகவும் உறுதியான பயிற்சி தேவை என்பதை வெளிப்படுத்துகின்றார்கள். எனவே அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கரவொலி எழுப்பி நம் மகிழ்வைத் தெரிவிப்போம்.

அதனைத் தொடர்ந்து இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகள் குறிப்பாக ஆண்ட்ரியா, L'Aquila, "Aosta" பகுதிகளிலிருந்து வந்திருந்த இராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்புப்படையினர் ஆகிய அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை. இறுதியாக, இளையோர், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், பொதுக்காலத்தின் கடைசி நாள்களில் இருக்கும் நாம் இக்காலம் கடந்து செல்லும் நேரத்தை நம்பிக்கையின் பார்வையுடன் சிந்திக்க நம்மை அழைக்கிறது என்றும், எப்பொழுதும் இறைபராமரிப்பில் நம்பிக்கை வையுங்கள், அது நம் வாழ்க்கையை வழிநடத்திச்செல்லும் என்றும் கூறினார்.

அதன்பின் போரினால் பாதிக்கப்படும் இடங்களை,  மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனத்தின் மோசமான நிலைமைக்காக தொடர்ந்து செபிக்க வலியுறுத்தினார். தயவுசெய்து அமைதிக்காக செபிப்போம். காசாவில் போர்நிறுத்தம் வேண்டி செபிப்போம், பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படட்டும். தேவையான மனிதாபிமான உதவிகளுக்கான அணுகுமுறைகள் இன்னும் அனுமதிக்கப்படட்டும் என்று கூறினார். மேலும், காசா தலத்திருஅவையில்  உள்ள மக்கள் உண்ண உணவு, நீர் இன்றி துன்புறுகின்றார்கள் என்று கேள்விப்பட்டதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை. போரினால் அதிகமாக பாதிக்கப்படுவது எளிய மக்கள் தான். போர் செய்பவர்களுக்கு துன்பம் இல்லை. எனவே உலகில் அமைதி நிலவ செபிப்போம்.  அமைதியைக் கேட்போம் அமைதிக்காக செபிப்போம்.

அமைதியைப் பற்றி பேசும்போது, இந்தப்போரினால் மிகவும் துன்புறும் ​​​​அன்பான உக்ரேனிய மக்களை மறந்துவிடக் கூடாது. சகோதர சகோதரிகளே, போர் எப்போதும் தோல்விதான். போரினால் எல்லாரும் எல்லாவற்றையும் இழக்கிறார்கள். எல்லோரும் இல்லை. இப்போரினால் நிறைய சம்பாதிக்கும் ஆயுத உற்பத்தியாளர் குழுக்களும் உள்ளன. இவர்கள் மற்றவர்களின் மரணத்தின் மீது பணம் சம்பாதிக்கின்றனர்.

இவ்வாறு தனது கருத்துக்களை விண்ணப்பங்களாகவும் வாழ்த்துக்களாகவும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.      

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2023, 08:38