உலக அமைதி மற்றும் புனித பூமியில் அமைதிக்காக செபிப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரயேல் மக்களுக்கு அமைதியைப் பெறுவதற்கான உரிமை உண்டு என்றும், சகோதரர்களாகிய அவ்விரண்டு மக்களும் நிம்மதியாக வாழ உரிமை உண்டு என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 22 புதன்கிழமை உலக அமைதி மற்றும் புனித பூமியில் அமைதி நிலவ வேண்டி வெளியிடப்பட்டுள்ளக் காணொளிச்செய்தி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போர்களின் வலியை நாம் அனைவரும் உணர்கின்றோம் என்றும், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் தலைதூக்கியதை நாம் அறிவோம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், புனித பூமியில் என்ன நடக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
போர்கள் நம்மை விட்டுத் தொலைவில் இருக்கும்போது, அதனை நாம் வலிமையானதாக உணராமல் இருக்கலாம். ஆனால் உக்ரைன், புனித பூமி ஆகிய இரண்டும் போருக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் உலக அமைதிக்காகவும், புனித பூமியில் அமைதி நிலவ செபிக்கும்படியும் கேட்டுகொண்டுள்ளார்.
புனித பூமியில் அமைதி நிலவ செபிப்போம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடல் பேச்சுவார்த்தை வழியாக இரு தரப்பிலும் மரணங்கள் மலைபோல் குவிக்கப்படும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று செபிக்க கேட்டுக்கொண்டு, தயவுகூர்ந்து புனித பூமியில் அமைதி நிலவ செபிப்போம் என்று கூறி தன் காணொளிச்செய்தியினை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்