தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

எவாஞ்சலி கௌதியம் சுற்றுமடலின் 10ஆம் ஆண்டு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே 2013 ஆம் ஆண்டில் நவம்பர் 24ஆம் நாள் Evangelii gaudium" நற்செய்தியின் மகிழ்ச்சி என்னும் சுற்றுமடலை வெளியிட்டார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பூமி மற்றும் ஏழைகளின் அழுகைக்கு நாம் அடிக்கடி செவிசாய்த்தால் மட்டுமே நமது நற்செய்திப் பணியை நிறைவேற்றவும், இயேசு நமக்கு வலியுறுத்திய வாழ்க்கையை வாழவும், தீவிரமான மனிதகுலப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், அதில் நமது பங்களிப்பை அளிக்கவும் முடியும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"Evangelii gaudium" நற்செய்தியின் மகிழ்ச்சி என்னும் சுற்றுமடல் எழுதப்பட்டதன் 10ஆண்டை முன்னிட்டு நவம்பர் 24 வெள்ளிக்கிழமை ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டிற்கான திருப்பீடத்துறையால் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் Evangelii gaudium" நற்செய்தியின் மகிழ்ச்சி என்னும் சுற்றுமடலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கிறிஸ்தவர்களின் மறைப்பணி மகிழ்வை மீட்டெடுக்கவும், துணிவுடன் அயராது நற்செய்தி அறிவிப்புக்கு சாதகமாக இல்லாத சூழலிலும் சுறுசுறுப்புடன் செயலாற்றவும்,  நீதி, மனித மாண்பைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி வாழவும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பு என்பது, மனித கண்ணியத்தைக் கொல்கின்ற, ஒதுக்கிவைக்கின்ற மற்றும் அழிக்கும் அமைப்பிற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில்  நடைபெறுகின்றது என்றும் கூறியுள்ளார்.

நம்மை தனிமைப்படுத்துகின்ற, அந்நியப்படுத்துகின்ற, ஒருவரின் சொந்த நலன்களுக்குள் வாழ்க்கையை மூடுகின்ற, அண்டை வீட்டாரிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் நம்மைத் தூரமாக்குகின்ற மனநிலைக்கு எதிரான எதிர்ப்பாக இக்கால நற்செய்தி அறிவிப்புப் பணி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழைகளை உள்ளடக்கிய பணி

"இயேசு கிறிஸ்து கொண்டிருந்த உணர்வுகளை நாம் கொண்டிருக்க நற்செய்தியின் மகிழ்ச்சி என்னும் சுற்றுமடல் வழியாக அழைக்கப்படுகின்றோம் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், ஏழைகளைப் புறந்தள்ளி நமது நற்செய்திப்பணியும் கிறிஸ்தவ வாழ்க்கையும் நலமாக இருக்காது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நமது மீட்பின் முழுமையான பாதை ஏழைகளால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், கன்னி மரியாவிடம் எளிய மனிதராக விலங்குகளுக்கான இடத்தில் நமக்காகப் பிறந்த இயேசு, அவரது பிறப்பின் வழியாக எளிய உள்ளம் கொண்டவர்கள் பேறுபெற்றவர்கள் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

ஏழைகளை நம் வாழ்வின் மையமாக வைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இது அரசியலோ, சமூகவியலோ, கருத்தியலோ அல்ல மாறாக, இது முற்றிலும் எளிமையான நற்செய்தியின் கோரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமத்துவமின்மை மற்றும் சமூகத் தீமைகளுக்கு அடிப்படைக் காரணமாக ஏழ்மை இருக்கின்றது என்றும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு அவசியமான நிபந்தனை, ஆழமான மனநிலை மாற்றம் மற்றும் கட்டமைப்புகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு புதிய மனநிலை

அனைத்து மக்களின் வாழ்க்கையையும் முதன்மைப்படுத்தி, சமூகத்தின் அடிப்படையில் சிந்திக்கும் மன நிலை. பொருள்களை தனிப்பட்ட முறையில் வைத்திருக்காமல் பொது நலன், பொதுச்சேவை, மற்றும் ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்தும் மன நிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.  

ஒவ்வொரு நாட்டின் சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்தை மதித்து, நாம் வாழுகின்ற இந்த பூமி அனைத்து மனித இனத்திற்கும் சொந்தமானது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளர்ச்சி குறைந்த இடத்தில், பிறந்ததால் அவர்கள் ஏழைகளாக இருக்கின்றார்கள் என்று நியாயப்படுத்தும் மனநிலை மாண்புக் குறைவு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நமது பார்வையை விரிவுபடுத்தி, பிற நாடுகளில் உள்ள  துன்புறும் மக்களின் அழுகுரலுக்கு நாம் நம் காதுகளைத் திறக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மனிதனும் வளர்ச்சியடைய அழைக்கப்படுவதைப் போல எல்லா மக்களும் தங்களுக்கான வாழ்க்கை விதியினை செதுக்கும் சிற்பிகளாக மாற அனுமதிக்க வேண்டும் என்றும், ஒற்றுமையில் நாம் வளர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2023, 14:24