தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (REUTERS)

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்.

காங்கோ குடியரசின் பிரஸ்ஸாவில்லில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ், தனது செபத்தையும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நெருக்கத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

காங்கோ குடியரசில் இராணுவ ஆள்சேர்ப்பின்போது இடம்பெற்ற நெரிசலில் உயிரிழப்புக்கள் குறித்த இரங்கல் தந்திச் செய்தியில், உயிரிழந்தவர்களுக்கு நித்திய இளைப்பாற்றிக்கான செபத்தையும், துக்கத்திலும் வேதனையிலும் உள்ள இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆதரவையும், நெருக்கத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காங்கோ குடியரசின் தகவல்படி, தலைநகர் பிரஸ்ஸாவில்லியில் உள்ள ஓர்னானோ அரங்கில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது முப்பத்தொரு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 145 பேர் காயமடைந்தனர் என்று தெரியவந்துள்ளது.

இத்துயரச் செய்தியினை அறிந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள் வழியாக, காங்கோவின் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Bienvenu Manamika Bafouakouahou அவர்களுக்கு வெள்ளிக்கிழமை இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆபத்தில் உள்ள இளைஞர்களுக்கு உதவ முன்வந்த அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை வெளியிட்டுள்ளதுடன்,  எல்லாருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசீருக்காக  செபிப்பதாக குறிப்பிட்டுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின்.

காங்கோ ஆயுதப் படைகளுக்கான தேசிய ஆள்சேர்ப்பு விண்ணப்பத்திற்கு இளைஞர்களின் பெரும் கூட்டம் பதிலளித்த நிலையில், ஆள்சேர்ப்புக்கு கடைசி நாளான திங்கள்கிழமை அன்று, ஆர்னாடோ மைதானத்தில் குவிந்திருந்த  இளைஞர்கள் பொறுமையிழந்ததால், இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்து, பலர் உயிரிழந்துள்ளனர். இச்சோக நிகழ்வினால், அரசு, புதன்கிழமை தேசிய துக்க தினத்தை அறிவித்ததுடன், காயமடைந்த 145 பேரின் மருத்துவக் கட்டணத்தை செலுத்துவதாகவும் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2023, 14:45