தேடுதல்

மறைந்த முதுபெரும் தந்தை John Zizioulas அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) மறைந்த முதுபெரும் தந்தை John Zizioulas அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) 

நமக்குள் இருக்கும் விடியலையும் நம்பிக்கையையும் எழுப்புவோம்!

கடவுளே கிறிஸ்தவர்களின் நிறைவுகாலத்திற்கான நம்பிக்கையை அளிப்பவராக இருக்கின்றார்; இந்த நம்பிக்கையில் கிறிஸ்தவம் தாழ்ச்சி நிறைந்த உள்ளமுடன் பயணிக்கவேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நிறைவு காலம் என்பது (eschaton) நமது அன்றாட வாழ்க்கையின் கதவைத் தட்டுகிறது, நமது ஒத்துழைப்பை நாடுகிறது, சங்கிலிகளை தளர்த்துகிறது, நல்ல வாழ்க்கைக்கான மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கான்ஸ்டான்டினோப்பிளின் கிறிஸ்தவ ஒன்றிப்புசார் முதுபெரும்தந்தை மறைந்த ஆர்த்தடாக்ஸ் ஆயரும் இறையியலாளருமான John Zizioulas அவர்களின் “Remembering the Future: Toward an Eschatological Ontology” அதாவது, ‘நிறைவு காலத்திற்குப் பிந்தைய நிலையை நோக்கி...’ என்ற தலைப்பிலான நூல் ஒன்றிற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

தான் முதன்முதலில் John Zizioulas அவர்களை 2013-ஆம் ஆண்டு சந்தித்ததாகவும், புனிதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் விழாவிற்கு உரோமைக்கு வந்த கான்ஸ்டான்டினோப்பிளின் கிறிஸ்தவ ஒன்றுப்புசார் முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகளைத் தான் வரவேற்றதாகவும் அம்முன்னுரையில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.

John Zizioulas அவர்களுடனான தனது தொடர்ச்சியான சந்திப்புகளின் போது, நிறைவுகாலம் குறித்து அதிகம் உரையாடியதாகவும், அது இப்போது ஒரு நூலாக வெளிவந்திருப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அதில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நாங்கள் இருவரும் இணைந்து இறைவேண்டல் செய்து, கிறிஸ்தவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிந்தித்தபோது, ​​ Zizioulas அவர்கள் தனது எதார்த்தத்தை தன்னிடம் தெரிவித்தார் என்றும், இதனை வாழ்க்கையின் இறுதியில் மட்டுமே அடையமுடியும் என்றாலும், இதற்கிடையில், இதற்குச் சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டிய கடமை நமக்கிருக்கின்றது, இந்தத் தேடலில் நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று கலந்துரையாடியதாகவும் அதில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.

"வீணையே! யாழே! விழித்தெழுங்கள்; வைகறையை விழித்தெழச் செய்வேன்" (திபா 108:2) என்ற திருப்பாடலின் வசனம், மனிதகுலத்தின் அனைத்து கருவிகளையும் குரல்களையும் கடவுளின் எதிர்காலத்திற்கான நமது தேவையை உரக்க அழைப்பதுபோல, நமக்குள் இருக்கும் விடியலையும் நம்பிக்கையையும் எழுப்புவோம் என்றும் அதில் உரைத்துள்ளார் திருத்தந்தை.

உண்மையில், "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" (எபி. 11:1) என்றும், "இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான" (வெளி. 1:8) கடவுளே கிறிஸ்தவர்களின் நிறைவுகாலத்திற்கான நம்பிக்கையை அளிப்பவராக இருக்கின்றார் என்றும் இந்த நம்பிக்கையில் கிறிஸ்தவம் தாழ்ச்சிநிறைந்த உள்ளமுடன் பயணிக்கவேண்டும் என்றும் தனது முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2023, 13:46