தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

இளையோரே, திருஅவையில் மகிழ்ச்சியான கதாநாயகர்களாக இருங்கள்!

யாரெல்லாம் உரையாடலை விரும்பவில்லையோ, அவர்கள் அனைவரும் அமைதியை விரும்பாதவர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 26, இஞ்ஞாயிறன்று, தான் வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்பு, கிறிஸ்து அரசர் பெருவிழாவைச் சிறப்பிக்கும் இந்நாளில், உலகின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலமாகத் திகழும் இளையோர் அனைவரும் திருஅவையின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் கதாநாயகர்களாக இருக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

1930-களில் சோவியத் ஒன்றியத்தின் கீழ் இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் பட்டினியால் கொல்லப்பட்ட Holodomor எனப்படும் இனப்படுகொலை நிகழ்வையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

இரஷ்யாவின் உக்ரைன் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பைக் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்தச் சிதைந்த காயத்தைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த அன்பான மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தும் போரின் அட்டூழியச் செயல்கள் மனதிற்கு இன்னும் அதிக வேதனையை அளிக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

மோதலில் பிளவுபட்ட அனைத்து மக்களுக்காகவும் தொடர்ந்து அயராது இறைவேண்டல் செய்யுமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை,  இறைவேண்டல் என்பது, வெறுப்பின் சூழலைத் தகர்க்கும், பழிவாங்கும் போக்கை உடைத்து, ஒப்புரவிற்கான பாதைகளை வழங்கும் அமைதிக்கான வலிமை என்று கூறினார்.

அப்போது புனித பூமியை நோக்கித் தனது பார்வையைத் திருப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான சண்டையை நிறுத்தியதற்காகவும், போரிடும் தரப்பினரால் பிடிக்கப்பட்ட சில பிணையக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவித்ததற்காகவும் கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் மற்ற அனைவரும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களது குடும்பங்களைக் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் சென்றடைவதற்கான வழிகள் திறக்கப்பட இறைவேண்டல் செய்யுமாறும், அதேவேளையில் உரையாடலின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இறுதியாக, துபாயில் அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் COP-28 எனப்படும் காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய மாநாடு குறித்து நினைவுகூர்ந்த திருத்தந்தை, போரைத் தவிர, நமது உலகம் பருவநிலை மாற்றம் எனப்படும் மற்றொரு பெரிய ஆபத்தால் அச்சுறுத்தப்படுகிறது என்றும், இது பூமியில் உள்ள உயிர்களுக்கு, குறிப்பாக நம் எதிர்கால சந்ததியினருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது, வாழ்க்கைக்கான அனைத்தையும் படைத்த கடவுளின் திட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2023, 14:51