தேடுதல்

போர்த்துக்கல் பயணத்தின்போது இளைஞருடன் திருத்தந்தை போர்த்துக்கல் பயணத்தின்போது இளைஞருடன் திருத்தந்தை  

கனவுகாணும் அனைவரையும் மனித மாண்புடன் நடத்துங்கள்!

பிறந்து, வளர்ந்து, துளிர்விட்டு, உங்கள் கைகளில் கனிகளைத் தந்த அந்த உலக இளையோர் தினத்தை வீணாகப் போக விடாதீர்கள் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒன்றாகக் கனவு காணுங்கள், அனைவராலும் உருவாக்கப்பட்ட சமூகத்தில் சகமனிதர்களாகப் புதிய கனவு காணும் அனைவரரையும் மனித மாண்புடன் நடத்துங்கள் என்றும், என் வாழ்வைப் பிரதிபலிக்கும் பலரைக் கண்டு நான் பெரிதும் மகிழ்வடைகின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் மாதம் 1 முதல் 6 வரை லிஸ்பனில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டிற்கான உலக இளையோர் தினத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், ஒத்துழைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட தூதுக்குழுவினரை, நவம்பர் 30, இவ்வியாழனன்று, வத்திக்கானில் புனித ஆறாம் பவுலரங்கத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

உங்களை இங்கே ஒன்றாகக் காண்பதில் நான் மிகவும் மகிழ்வடைகின்றேன் என்றும் உங்களுக்கும், தலத்திருஅவை முழுமைக்கும், குறிப்பாக, இளையோர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் கூறி தனது உரையைத் தொடங்கினார் திருத்தந்தை.

எவரையும் ஒதுக்காமல், ஒரு பணியைப் பகிர்ந்து கொள்வது எப்படி சாத்தியமாகும் என்பதற்கு நீங்கள் எங்களுக்கு ஒரு ஒளிமயமான முன்மாதிரிகையைக் காட்டியுள்ளீர்கள் என்றும் உண்மையில், இதுவரை விளிம்புநிலையில் இருந்தவர்களை மையநிலைக்குக் கொண்டுவந்து நிறுத்துவதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றும் பெருமிதத்துடன் கூறினார் திருத்தந்தை.

கடவுளின் இதயத்தின் உலகளாவிய பரிமாணங்களைப் பெறுபவர்களும் அதனை அறிவிப்பு செய்பவர்களும் பேறுபெற்றவர்கள் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஒருவருக்கொருவர் கொண்டுள்ள திறமைகள் மீது எப்படி நம்பிக்கைக்கொள்வது என்பது உங்களுக்குத் தெரியும் என்றும், அவர்கள் யாராக இருந்தாலும்  ஒரு பொதுவான கனவில் அவர்களை ஒன்றிணைப்பதன் வழியாக அதனை நீங்கள் நிறைவேற்றிக் காட்டியிருக்கின்றீர்கள் என்றும் புளங்காகிதம் அடைந்தார் திருத்தந்தை.

வயல்களில் அறுவடை செய்பவர்கள் தொலைந்து போன தானியங்களை எடுக்கத் திரும்பிச் செல்வது போல, பின்தங்கியவர்களை மீண்டும் அழைத்து வந்து பொது மேசையில் ஒன்றாக அமர வைத்த உங்களின் நற்செயல்களுக்குப் புகழும் மரியாதையும் உண்டாகட்டும் என்றும் வாழ்த்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2023, 14:31