தேடுதல்

பரிவையும் இரக்கத்தையும் காட்டவே நாம் அழைக்கப்படுகிறோம்!

துயருறுவோர் மற்றும் தேவையிலிருப்போர் மத்தியில்தான் கிறிஸ்து அரசரின் அரச நீதிமன்றம் செயல்படுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரக்கம், பரிவு, கனிவு ஆகியவற்றை இவ்வுலகில் வெளிக்காட்ட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இவையே இறைவன் நமக்கு நீதித்தீர்ப்பு அளிப்பதற்கான அளவுகோலாகும் என்றும் திருப்பயணிகளிடம் நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்

நவம்பர் 26, இஞ்ஞாயிறு, கிறிஸ்து அரசர் பெருவிழாவை சிறப்பிக்கும் வேளை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளிடம் இவ்வாறு நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு வெளிப்படுத்தும் இறுதித் தீர்ப்பு இரக்கத்தையும் பரிவையும் அடிப்படையாகக் கொண்டது என்பதையும் எடுத்துரைத்தார்.

காய்ச்சல் போன்ற அறிகுறிகளில் இருந்து மீண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் குளிர்ந்த இலையுதிர் நாளில் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையை வழக்கமாக வழங்கும் அப்போஸ்தலிக்க அலுவல் கட்டிடத்தின் மேல் மாடத்திலிருந்து வழங்காமல், தனது இல்லமான சாந்தா மார்த்தாவிலிருந்து வழங்கினார். மேலும் திருப்பீடச் செயலகத்தின் அலுவலகத் தலைவர் பேரருள்தந்தை Paolo Braida அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அருகில் அமர்ந்துகொண்டு திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரையை வாசித்தளித்தார்.

விண்ணக  மண்ணக விழுமியங்கள்

"வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்" என்ற இன்றைய நற்செய்தி வாசகத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இயேசு என்னும் அனைத்துலக அரசரின் வலப்பக்கம் நின்றவர்கள் யாவரும், பசித்தவர்களுக்கு உணவளித்தவர்கள், நோயுற்றவர்களையும் தேவையில் இருந்தோரையும் கவனித்துக்கொண்டவர்கள் மற்றும், சிறையில் இருந்தோரைச் சந்தித்தவர்கள் என்றும் விவரித்தார்.

ஆனால் அதேவேளை, கிறிஸ்து அரசரின் இடப்பக்கம் நின்றவர்கள், இவ்வுலகம் காட்டிய மதிப்பீடுகளின்படி வாழ்ந்தவர்கள் என்றும், இவர்கள் தங்களின் அரசப் பதவியைப் பயன்படுத்தி அதிகாரம், செல்வம், புகழ் மற்றும் பயம் மற்றும் பொறாமை ஆகியவற்றை அதிகரிப்பதன் வழியாகத் தனிப்பட்ட விதத்தில் ஆதாயம் தேடியவர்கள் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

தேவையில் இருப்போருக்கு உதவி

பசியுள்ளவர்கள், வீடற்றவர்கள், நோயாளர்கள் மற்றும் சிறையில் வாடுவோர்மீது நமது அரசராம் ஆண்டவர் அக்கறை காட்டுகிறார் என்று உரைத்த திருத்தந்தை, இவை அனைத்தும் இன்று நமது வாழ்வில் நாம் காணக்கூடிய உண்மைகள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இறைத்தந்தையின் ஒரே மகனான இயேசு முற்றிலும் மாறுபட்ட அரசர், அவர் ஏழைகளை 'சகோதரர்கள்' என்று அழைக்கிறார் என்றும், அவர் பசியுள்ளவர்கள், தாகமுள்ளவர்கள், அந்நியர்கள், நோயாளர்கள் மற்றும் சிறையில் இருப்போருக்கு உதவியவர்களைப் பார்த்து, ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று கூறுகின்றார் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இரக்கம் மற்றும் பரிவு

நமது உதவி மற்றும் தோழமை தேவைப்படும் மக்களுக்குப் பணியாற்றுவதன் வழியாக, அவர்களைப் புறக்கணிக்காமல் அவர்களுக்கு  உணவு, தண்ணீர், உடை, தங்குமிடம் மற்றும் உடனிருப்பு ஆகியவற்றை வழங்குபவர்களே உண்மையில் பேறுபெற்றவர்கள் என்பதை இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், இரக்கம் பரிவு மற்றும் கனிவு வழியாக கிறிஸ்து அரசரின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றுவதால் இவர்கள் அனைவரும் அவ்வரசரின் உண்மையான நண்பர்களாகத் திகழ்கின்றனர் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

மானிடமகன் எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அரசரான நம் கிறிஸ்து, மிகவும் பலவீனமான பெண்களிலும் ஆண்களிலும் தனக்குப் பிடித்த சகோதரிகளையும் சகோதரர்களையும் காண்கிறார் என்றும், துயருறுவோர் மற்றும் தேவையிலிருப்போர் மத்தியில்தான் அவரின் அரச நீதிமன்றம் செயல்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

நமது தனிப்பட்ட வாழ்வில்...

கிறிஸ்து அரசரிடம் விளங்கிய இந்தப் பரிவிரக்கம், அன்பின் வலிமை, பிறர்நலப் பணிகள் ஆகியவற்றை நமது தனிப்பட்ட வாழ்வில் எவ்வாறு கடைபிடிக்கின்றோம் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய திருத்தந்தை, நாம் உண்மையிலேயே இந்தக் கிறிஸ்து அரசரின் நண்பர்களாக இருந்தால் இவற்றையெல்லாம் கடைபிடிக்க கடமைபட்டுளோம் என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2023, 14:45