தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

கடவுளின் செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை

பகுத்தறிவை விட வாழ்க்கையின் மறைபொருள் மிகப்பெரியது. – திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பகுத்தறிவின் பயன்பாடு மற்றும் சிந்தனையின் ஆழம் செபத்திலிருந்து எழும் போது மட்டுமே அறிவின் பாதைகளைத் திறக்கின்றன என்றும், கடவுளின் அருள் செல்வம் மிகுதியானது, அவருடைய ஞானமும் அறிவும் ஆழமானவை, அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை, அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட இறையியல் கல்வி நிறுவனத்தின் தலைவரான பேரருள்திரு அந்தோணியோ ஸ்டாக்லியானோ என்பவரால் எழுதப்பட்டு, ஒசர்வத்தோரே ரோமானோ என்ற இத்தாலிய பத்திரிக்கையினால் வெளியிடப்பட்ட Ripensare il pensiero அதாவது மறுசிந்தனை என்ற புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மறைபொருளின் முன்பாக நம்மை நிறுத்தும்போது வாழ்க்கையின் மறைபொருள் இன்னும் உண்மையாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இறையியல் ஆராய்ச்சி, குறிப்பாக கல்வியியல் ஆராய்ச்சி, பகுத்தறிவின் கடுமையான பயன்பாட்டுடன் தொடர்புடையது, முக்கியமானது மற்றும் அவசியமானது என்றும், எந்தவொரு பகுத்தறிவையும் விட வாழ்க்கையின் மறைபொருள் மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

மேஜையில் அமர்ந்து பகிரப்படும் கருத்துக்களிலிருந்து அல்ல மாறாக உறுதியான வரலாற்றுத் துயரங்கள், மக்களின் வாழ்க்கை, கலாச்சார அடையாளம், மறைக்கப்பட்ட கேள்விகள் போன்றவற்றிலிருந்து இறையியலின் பாதையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்விக்கூடத்தில் மட்டுமல்ல தெருக்களில், அறிவியல் ஆராய்ச்சியில் மட்டுமல்ல இதயத்தின் கேள்விகளில், பகுத்தறிவில் மட்டுமல்ல கற்பனையில் எல்லாவற்றிற்கும் மேலாக நிலையற்ற மனித வாழ்வில் இறைஅன்பின் தாளத்தைக் கண்டறிய உதவும் இறையியலாக இப்புத்தகம் திகழ்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

இருளில் இருக்கும் நம் இதயத்திலும் உலகத்திலும் ஒளிவீசும் இயேசுவின் கண்கள், மனித உடன் பிறந்த உறவுடன் கூடிய வாழ்விற்காக தூய ஆவியினால் திறக்கப்பட்ட பாதைகள் போன்றவற்றில் இறையியல் வெளிப்பட்டு, சகோதர உறவுடன் கூடிய ஓர் உலகை உருவாக்க நமக்கு உதவுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2023, 09:38