தேடுதல்

இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையினரோடு திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையினரோடு திருத்தந்தை பிரான்சிஸ்.   (VATICAN MEDIA Divisione Foto)

சமாரியப் பெண்ணை சந்தித்த இயேசுவின் முன்மாதிரிகை...

சமாரியப்பெண்ணைப்போல நாம் அனுபவித்த இயேசுவை வந்து பாருங்கள் என்று மற்றவர்களிடன் அறிவிக்க வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளைத் தேடுதல், நற்செய்திக்கு சான்று பகர்தல், மறைந்த வாழ்வின் அன்பு ஆகியவற்றின் வலுவான அனுபவம் பெற்று வாழ வேண்டும் என்றும், சமாரியப்பெண்ணை சந்தித்த இயேசுவை முன்மாதிரிகையாக, வழிகாட்டியாகக் கொண்டு  வாழுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 2 திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையின் 12ஆவது பொதுப்பேரவையை முன்னிட்டு அதன் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 57 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபையின் நிறுவனரான சார்லஸ் தே போக்கால்டு போல நற்செய்தி அறிவிப்பதில் பேரார்வம் கொண்டு வாழ வலியுறுத்தினார்.

கடவுளைத் தேடுதல்.

நமது கடவுளான இயேசு, வாழ்வு தரும் கிணற்றருகில் நமக்காகக் காத்திருக்கின்றார் என்றும், புனித Charles செய்தது போல திருநற்கருணைப்பேழையின் காலடியில் அமர்ந்து, செவிமடுப்பது இன்னும் அழகானது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை மற்றும் தீய எண்ணங்களிலிருந்து விலகி, நற்செயல்களை செய்வதற்கான ஆற்றல், தன்மை மற்றும் உணர்வுகளை திருநற்கருணையிலிருந்துப் பெறுகின்றோம் என்றும் கூறினார்.

சமாரியப் பெண்ணுக்கு வழங்கியது போலவே, தனது அன்பை நமக்கும் வழங்கும் இயேசு, சவாலை ஏற்றுக்கொள்ளவும், பழக்கவழக்கங்கள், வெளிப்படையான தீர்வுகள், அவநம்பிக்கை போன்றவற்றால் நிரப்பப்பட்ட நமது குடத்தை விட்டுவிட, தனது வாழ்க்கையையே நமக்குப் பரிசாக அளிக்கின்றார் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்திக்கு சான்று பகர்தல்

"நமது முழு உள்ளத்துடன் வீட்டின் கூரையிலிருந்து நற்செய்தியை உரக்க அறிவிக்க வேண்டும், நம் முழு மனிதமும் இயேசுவை வெளிப்படுத்த வேண்டும், நம் முழு வாழ்க்கையும் இயேசுவுக்கே சொந்தம் என்று உரக்கச் சொல்ல வேண்டும் இதன் வழியாக நற்செய்தியை வாழ்வின் மாதிரியாக வைக்க வேண்டும்‘‘ என்ற புனித Charles de Foucauld வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், சமாரியப்பெண்ணைப்போல நாம் அனுபவித்த இயேசுவை வந்து பாருங்கள் என்று மற்றவர்களிடம் அறிவிக்க வலியுறுத்தினார்.

‘‘கேட்பவர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதாது: தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டும்" என்ற புனித சார்லஸின் வரிகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், மற்றவர்களைக் கவனித்துக்கொள்வது, அவர்கள் கேட்கும் வரை காத்திருக்காமல் தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது, அக்கறை செலுத்துவது, அருகாமையில் இருப்பது போன்றவைகள் அன்பின் வெளிப்பாடுகள் என்றும் எடுத்துரைத்தார்.

சமுதாயத்தில் விலைமதிப்பற்றதாகக் கருதப்படும் இத்தகைய நெருக்கம், அருகாமை இதயத்திலிருந்து எழ வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், துன்புறுவோர் மற்றும் எளியோரிடத்திலான நமது மென்மையான அருகாமை, அலட்சிய கலாச்சாரத்தில் இருக்கும் நமக்கு ஒரு சவாலாக இருக்கட்டும் என்றும் கூறினார்.

மறைந்த வாழ்வு

கடவுளின் மகனாக இருந்த போதிலும் அதனைத் துறந்து எளிய மனிதனாக நாசரேத்தில் வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றி, எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளம்பரப்படுத்தப்படாமல் நமது வாழ்வு எவ்வளவு மறைக்கப்படுகின்றதோ அவ்வளவு புனிதமாகின்றது என்றும், இதனை மாசுபடுத்தாமல் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தங்களது உண்மையான தோற்றத்தை மறைத்து ஒப்பனைக் கலாச்சாரத்தில் வாழாமல், திறந்த இதயத்துடன், மென்மையான பண்பு நலன்களால் வாழவும், நற்செய்தியின் விலைமதிப்பற்ற முத்துக்களை, மென்மையான சான்று வாழ்வின் வழியாக எடுத்துரைக்கக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2023, 12:29