தேடுதல்

திருத்தந்தையின் மறைபோதகம் – ஸ்லாவ் மக்களின் மறைப்பணியாளர்கள்

ஒன்பதாம் நூற்றாண்டில், கிரேக்கத்தின் உயர் குடும்பத்தில் பிறந்து, சுகபோகங்களை இறைவனுக்காகத் துறந்து, மொராவியா பகுதிக்கு வந்து நற்செய்தி அறிவித்த சகோதரர்கள், புனித சிறிலும் மெத்தடியோசும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அக்டோபர் 25, இம்மாதத்தின் கடைசி புதனன்று, இத்தாலியின் தட்பவெப்ப நிலை, குளிரை நோக்கி மெதுவாக சென்றுவருகின்ற போதிலும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. வளாகத்தில் திருப்பயணிகள் குழுமியிருக்க, ஸ்லாவ் இனத்திற்கு மறைப்பணியாற்றிய புனிதர்கள் சிறில் மற்றும் மெத்தோடியஸ் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். நற்செய்தி அறிவித்தலுக்கான பேரார்வம், விசுவாசியின் அப்போஸ்தலிக்க பற்றார்வம் என்ற தலைப்பில் புதன்கிழமைகளில் இடம்பெற்றுவரும் திருத்தந்தையின் மறைக்கல்வித் தொடரில் இது 24ஆவது உரையாகும்.

முதலில், திருத்தூதர் பணி நூலின் பிரிவு 11லிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் திருத்தந்தையின் முன்னிலையில் திருப்பயணிகளுக்கு வாசித்தளிக்கப்பட்டது.

பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்த சேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். “நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?” என்று குறை கூறினர். பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார்…….. “நான் பேசத் தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்தது போல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது........ இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?” என்றார். (திருத்தூதர் பணிகள் 11,2-4.15.17)

அதன்பின் திருத்தந்தை தன் மறைக்கல்வி உரையை இத்தாலியத்தில் துவக்கினார்.

அன்பு சகோதரர், சகோதரிகளே,

இன்று நான் உங்களுடன் இரு சகோதரர்கள் குறித்துப் பேச உள்ளேன். இவர்கள் இருவரும் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் எவ்வளவு பிரபலம் என்றால் அவர்கள் இருவரும் ஸ்லாவ் இனத்தவரின் மறைப்பணியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள்தாம் புனித சிறிலும் மெத்தோடியசும்.

ஒன்பதாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் உயர்குடியில் பிறந்த இச்சகோதரர்கள், அரசியலில் புகழடைய இருந்த வாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு, துறவு வாழ்வுக்கு தங்களை அர்ப்பணித்தனர். ஆனால், உலகிலிருந்து ஒதுங்கி இறைவனோடு தனிமையில் வாழவேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை சிறிது காலத்திற்கு மேல் தொடரமுடியவில்லை. அவர்கள் மொரோவியா பகுதிக்கு மறைப்பணியாளர்களாக அனுப்பப்பட்டனர். அப்போது அப்பகுதி பல்வேறு இன மக்களுடன், ஓரளவு நற்செய்தி அறிவிக்கப்பட்டதாக இருந்தபோதிலும், அங்கு பிற மதங்களின் பழக்கவழக்கங்களும் பாரம்பரியங்களும் தொடர்ந்து நிலவி வந்தன. அங்கிருந்த  இளவரசரும் அவர்களின் மொழியிலேயே கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைக்கும் ஓர் ஆசிரியரைத் தேடிக்கொண்டிருந்தார். ஆகவே, இம்மக்களின் கலாச்சாரத்தை மிக ஆழமாகக் கற்றுக்கொள்ள வேண்டியது சிறில் மற்றும் மெத்தோடியசின் முதல் பணியானது. விசுவாசம் பண்பாட்டுமயமாக்கப்பட வேண்டும், கலாச்சாரத்திற்கு நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும். இது எப்போதும் இடம்பெற வேண்டிய ஒன்று. அவர்களுக்கு எழுத்து வரிவடிவம் இல்லாதிருந்தது. தண்ணிரின் மீது எவரும் உரையை எழுத முடியாது என்ற புனித சிறில், நற்செய்தி அறிவிப்பதற்கும் செபிப்பதற்கும், ஒரு சரியான எழுத்துவடிவம் தேவை என்பதை உணர்ந்து, அவர்களுக்கென்று ஒரு மொழி வடிவத்தை உருவாக்கியதுடன், விவிலியத்தையும் வழிபாட்டு ஏடுகளையும் அம்மொழியில் மொழிபெயர்த்தார். அம்மக்களும் கிறிஸ்தவ விசுவாசம் தமக்கு அன்னியமல்ல, வெளிநாட்டிலிருந்து அது இறக்குமதிச் செய்ததல்ல என்ற உணர்வை இதன் மூலம் பெற்றனர். இரு துறவிகளின் திறந்த மனதால் தன்னலமற்ற பணியால் மறைபரப்புப்பணி சாத்தியமானது.

ஆனால், இலத்தீன் வழிபாட்டுமுறையைப் பின்பற்றியவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பத் துவங்கியது. ஸ்லாவ் இனமக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் உரிமை, அதுவும் இலத்தீன் மொழியிலேயே எடுத்துரைக்கும் உரிமை தங்களுக்கே உள்ளது என எண்ணியவர்கள் சிறிலையும் மெத்தோடியசையும் எதிர்த்தனர். எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் என்ற மூன்று மொழிகள் தவிர ஏனைய மொழிகளில் நற்செய்தியை அறிவிக்க அனுமதில்லை என வாதிட்டனர். ஆனால், சிறிலும் மெத்தோடியசும் திருத்தந்தைக்கு விண்ணப்பித்து அனுமதிப் பெற்றனர். இதனைக் கொண்டாட, அந்த மொழிபெயர்ப்பு திருவழிபாட்டு ஏடுகளை உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் பலிபீடத்தில் வைத்து, ஸ்லாவ் மொழியில் பாடி மகிழ்ச்சியுற்றனர். அதன்பின் சில நாட்களில் புனித சிறில் மரணமடைந்தார். அவரின் திருப்பண்டங்கள் இன்னும் உரோம் நகரின் புனித கிளமெண்ட் பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. சிறிலின் மரணத்திற்குப்பின், மெத்தோடியஸ் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, ஸ்லாவ் பகுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அவர் அங்கு துயர்களை அனுபவித்து, சிறைவைக்கப்பட்டபோதிலும்,  இறைவார்த்தை அம்மக்களிடையே நன்முறையில் பரவியது. இந்த இரு மறைப்பணியாளர்களின் சான்று வாழ்வைப் பார்த்த புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், இவர்களை ஐரோப்பாவின் உடன்பாதுகாவலர்களாக அறிவித்ததுடன், அவர்களைக் குறித்து Slavorum Apostoli என்ற தலைப்பில் அப்போஸ்தலிக்க ஏடு ஒன்றையும் வெளியிட்டார். இப்போது, மூன்று கூறுகள் குறித்து காண்போம்.

முதலில் ஒன்றிப்பு வருகிறது. கிரேக்கர்கள், திருத்தந்தை மற்றும் ஸ்லாவ் இனத்தவர். அதேவேளை, ஐரோப்பாவில் பிளவுபடாத கிறிஸ்தவம், நற்செய்தி அறிவித்தலுக்கு தன் ஒத்துழைப்பை வழங்கியது.

இரண்டாவது முக்கியக்கூறு, பண்பாட்டுமயமாக்குதல். நற்செய்தி அறிவித்தலும் கலாச்சாரமும் மிக நெருங்கிய தொடர்புடையவை. எவ்வித தேவையும் இன்றி, திறந்தவெளியில் நாம் நற்செய்தியை அறிவிக்க முடியாது. நற்செய்தி பண்பாட்டுமயமாக்கப்பட வேண்டும், அதேவேளை அது கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.

இதில் இறுதியான கூறு, சுதந்திரம். நற்செய்தி அறிவிப்புக்கு சுதந்திரம் தேவை, அதேவேளை சுதந்திரத்திற்கு மனவுறுதி தேவை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, ஸ்லாவ் இனத்தின் மறைப்பணியாளர்களாகிய புனிதர்கள் சிறிலும் மெத்தோடியசும், நாம் அனைவரும் பிறரன்பில் விடுதலையடைந்த கருவிகளாக விளங்க உதவ வேண்டும் என வேண்டுவோம். புதியனவைகளை உருவாக்குபவர்களாக, ஒரே நிலைப்பாடுடையவர்களாக, தாழ்ச்சி என்னும் பண்புடையவர்களாக செபத்திலும் சேவை புரிவதிலும் சிறந்து விளங்குவோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீனத்திலும் இஸ்ராயேலிலும் இடம்பெறும் துயர் நிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணியாளர்கள் அனுமதிக்கப்படவும் விண்ணப்பித்த திருத்தந்தை,  மத்தியக் கிழக்கிலும், உக்ரைனிலும், போர் இடம்பெறும் ஏனைய பகுதிகளிலும் அமைதியின் பாதை கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். உலகில் அமைதிக்காக செபிப்பதற்காக, அக்டோபர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, மாலை 6 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் அமைதிக்கான செப நேரம் இடம்பெறும் என்பதையும், அந்நாள், அமைதிக்கான உண்ணா நோன்பின், செபத்தின், ஒறுத்தலின் நாளாக கடைபிடிக்கப்படும் என்பதையும் நினைவூட்டினார் திருத்தந்தை.

இப்புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2023, 11:00

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >