தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

47ஆவது விவிலிய வாரத்தின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை

கடவுளுடைய மக்களுக்கு நிரந்தர சொத்தான இறைவார்த்தையால் ஊட்டமளித்து உதவும் பணியில் முன்னோக்கிச் செல்லுங்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 7 வியாழன் அன்று 47 ஆவது தேசிய விவிலிய வாரத்திற்காக உரோமில் கூடியிருக்கும் பங்கேற்பாளர்களை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோவாவின் உடன்படிக்கை, ஆபிரகாமின் உடன்படிக்கை, சீனாய் உடன்படிக்கை  என்னும் மூன்று கருப்பொருள்களின் அடிப்படையில் அவர்களுக்குத் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

தன்னோடு, அருகில் இருப்பவர்களோடு, உலகோடு நாம் கொண்டுள்ள உடன்படிக்கையைப் பற்றி சிந்திக்கும் வகையில், ‘‘உடன்படிக்கை, உலகளாவியம், தனித்துவம் ஆகியவற்றிற்கு இடையிலான உடன்படிக்கைகள்‘‘ என்ற தலைப்பில் நடைபெறும் இவ்விவிலிய வாரமானது இதயத்திற்கு நெருக்கமானதும் திருஅவையின் கவனத்தில் இருக்கும் ஒன்றாகவும் திகழ்கின்றது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோவாவுடனான உடன்படிக்கை மனிதகுலத்திற்கும் படைப்புக்கும் இடையிலான உறவையும், ஆபிரகாமுடனான உடன்படிக்கை மூன்று பெரிய மதங்களை அவற்றின் பொதுவான கருத்துக்களான ஒற்றுமை மற்றும் பலனளிக்கும் கடவுள் நம்பிக்கையையும், சீனாய் உடன்படிக்கை கொடையாக அளிக்கப்பட்ட கடவுளின் கட்டளைகள் மற்றும், அனைத்து மக்களுக்கும் மீட்பளிக்கும் கருவியாக இஸ்ரேலை தேர்ந்தெடுப்பதையும் மையமாகக் கொண்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை.

கடவுளுடைய மக்களுக்கு அவர்களின் நிரந்தர சொத்தான இறைவார்த்தையால் ஊட்டமளித்து உதவும் பணியில் முன்னோக்கிச் செல்லுங்கள் என்று வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவிவிலியத்திற்கு செவிமடுக்கும் மக்கள் தங்களது துன்பங்கள் மற்றும் இடர்ப்பாடுகளிலிருந்து கடந்து ஒற்றுமையின் பாதைக்குச் செல்ல வழி நடத்தப்படுகின்ரார்கள் என்றும் கூறினார்

நோவாவின் உடன்படிக்கை

மனிதனுக்கும் படைப்பிற்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றிய தெளிவான குறிப்பை உள்ளடக்கிய நோவா காலத்து வெள்ளப்பெருக்கு, வெறுப்பு மற்றும் வன்முறையால் அழிக்கப்பட்ட மனிதகுலத்திற்கு கடவுள் நம்பிக்கையையும் மீட்பையும் வழங்குகின்றார் என்பதை எடுத்துரைக்கின்றது.

மறுகண்டுபிடிப்பு என்னும் ஒரு தவிர்க்க முடியாத, சூழலியல் பரிமாணத்தைக் கொண்டுள்ள நோவா உடன்படிக்கை, கடவுள் ஒருபோதும் தோல்வியடையவில்லை என்பதை வலியுறுத்தி, கோள்களின் வளங்களை நியாயமான முறையிலும் அளவோடும் பயன்படுத்த வேண்டும் என்று நம்மைத் தொடர்ந்து தூண்டுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆபிரகாமுடன் உடன்படிக்கை

இரண்டாவது வத்திக்கான் சங்கம் கற்பிப்பது போல, மரணம் மற்றும் போரின் எதிரொலிகளால் துன்புறும் நேரத்தில், ஒரே கடவுள் மீது பொதுவான நம்பிக்கை கொண்ட சகோதரர்களாக வாழ நம்மை அழைக்கிறது, ஊக்குவிக்கிறது என்றும், மனித மற்றும் இறைப்பணிக்கு அழைக்கப்பட்டு, வன்முறை மற்றும் வஞ்சகமின்றி, உலகை உண்மையான அமைதியுடன் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் அடைய முடியும் என்றும் வலியுறுத்தினார்.

சீனாய் உடன்படிக்கை

கடவுளின் கொடையான கட்டளைகள் மற்றும் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்கள்பற்றிய சீனாய் உடன்படிக்கையானது, எந்தவொரு சோதனைக்கும் எதிராக, தேர்ந்துகொள்ளப்படுதலின் தனித்துவம் எப்பொழுதும் உலகளாவிய நன்மையின் செயல்பாட்டில் உள்ளது என்றும், பிரித்தல் அல்லது விலக்குதல் வடிவங்களில் அவை வராது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடவுள் ஒருபோதும் மற்றவர்களை ஒதுக்கி வைப்பதற்காக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக எப்போதும் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காகவே தேர்ந்துகொண்டார் என்றும், மனித இனம் மற்றும் கிறிஸ்துவின் உடலாகிய ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் வகையில் ஏற்படும் பிரிவினையின் சறுக்கல்கள் நமது காலத்திற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தைப் பணியில் ஒன்றிணைந்து பணியாற்றுவது, இத்தாலியில் தலத்திருஅவைக்கு நிரந்தரமாக வழங்கும் ஒரு பரந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதி என்றும், நாட்டில் உள்ள முதல் இறையியல் சங்கங்களில் ஒன்றாகச் செயல்படும் இக்கூட்டம் பல்வேறு மறைமாவட்டங்களில் இன்னும் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2023, 13:31