தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் உடன் பவுலின் எக்குமெனிகல் கூட்ட உறுப்பினர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் உடன் பவுலின் எக்குமெனிகல் கூட்ட உறுப்பினர்கள்  (ANSA)

விவிலிய ஆராய்ச்சியை வலிமை, துணிவு கொண்டு ஆற்றுங்கள்

திருத்தூதர் பவுலின் கடிதங்களின் அழகு, கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் திருஅவை வாழ்க்கைக்கான அதன் முக்கியத்துவத்தில் வெளிப்படுகிறது

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான தூயஆவியின் ஆற்றல் இறைவனைத் தேடும் பொதுவான பயணத்திற்கு உதவும் என்றும், உரையாடல் மற்றும் மனித உடன்பிறந்த உணர்வு,  நம்பிக்கையுள்ள மக்களிடையே வளரட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 14, வியாழன் அன்று 26ஆவது பவுலின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு உரையாற்றிய போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையின் அடித்தளத்தில் கல்வி, விவிலியம், ஆன்மிகம் மற்றும் சகோதரத்துவ உரையாடல்களில் விலைமதிப்பற்ற அவர்களின் பணியைத்தொடரவும் வாழ்த்தினார்.  

விவிலிய ஆராய்ச்சியை வலிமை மற்றும் துணிவு கொண்ட திறனோடு தொடருங்கள் என்று கூறிய திருத்தந்தை, திருத்தூதர் பவுலின் கடிதங்களில் உள்ள எண்ணிலடங்கா ஆன்மிக வளங்களான  கிறிஸ்துவின்  மீட்பின் உண்மைத்தன்மை, ஆவியின் புதுப்பிக்கும் நம்பிக்கை கண்டு வியப்படையுங்கள் என்றும் வலியுறுத்தினார்

மற்றவர்களுடன் ஒன்றிணைந்து நடத்தல், நம்பிக்கை மற்றும் பணி மனப்பான்மை  கொண்டு ஏழைகளுக்கு சேவை செய்தல், கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கும் உதவுதல் போன்ற பணிகளால் தங்களது பயணத்தைத் தொடர அக்கூட்டத்தாரை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ சமூகத்தின் தோற்றம் மற்றும் அதன் நம்பிக்கை வாழ்க்கையை, ஆய்வுகளின் தனித்தன்மையில் மட்டுமல்லாது, கலாச்சாரத்தின் அசல் தன்மையிலும் வெளிப்படுத்தி வருவதற்காக அக்கூட்டத்தின் பங்கேற்பாளர்களைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டமானது திருத்தூதர் பவுலின் மேய்ப்புப்பணி ஞானத்தால் ஒன்றுபட்ட கிறிஸ்தவர்களுக்கு இடையிலான சந்திப்பு என்றும் கூறினார்.

வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளுக்கு இடையேயான உரையாடல், கடுமையான மற்றும் விஞ்ஞான விளக்க ஒப்பீடு, செபம் மற்றும் ஆன்மிகத்தின் பின்னணியில் செய்யப்படும் ஆராய்ச்சிப் பணிகள் அதன் முக்கிய ஆதாரத்தை வெளிப்படுத்துகின்றது என்றும், திருத்தூதர் பவுலின் கடிதங்களின் அழகு, கிறிஸ்தவ மற்றும் திருஅவை வாழ்க்கைக்கான அதன் முக்கியத்துவத்தில் வெளிப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

அவ நம்பிக்கையின் தடைகளை கடக்கும் துணிவு, இறைவாக்குத்தன்மை ஆகியவை கொண்டு கிறிஸ்தவ ஒன்றிப்புடன் வாழ கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தூய ஆவியின் துணைகொண்டு ஒற்றுமையின் முழுமையை நோக்கிச் செல்லும் பாதை முன்னேறுகிறது என்றும் அதன் அர்ப்பணிப்பு ஒருபோதும் தோல்வியடையாது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2023, 12:19