தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

கடவுளின் கனவை நனவாக்கும் திருவருளடையாளங்கள்

கடவுளின் அன்பான தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செய்யப்படும் செயல்கள் நம் இதயங்களைத் திறந்து கடவுளின் கனவினை செயல்படுத்துபவர்களாக நம்மை மாற்றும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருமணம், குருத்துவம் என்னும் இரண்டு திருவருளடையாளங்கள் கடவுளின் அன்பை வெளிப்படுத்துகின்றன, திருஅவையின் மறைஉடலை உருவாக்குகின்றன என்றும், கடவுளின் கனவை நனவாக்குவதற்கான ஓர் இறைவாக்காக இரண்டும் செயல்படுகின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 9 சனிக்கிழமை, குடும்பத்தை மேம்படுத்துதல் இயக்கத்தின் 45ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அதன் உறுப்பினர்கள் ஏறக்குறைய 1200 பேரை வத்திக்கானில் உள்ள திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் அன்பான தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செய்யப்படும் செயல்கள் நம் இதயங்களைத் திறந்து கடவுளின் கனவினை செயல்படுத்துபவர்களாக நம்மை மாற்றும் என்றும்,  அவ்வாறில்லாத செயல்கள் வீரியமற்ற வீணான செயல்களாகிவிடும் என்றும் கூறினார் திருத்தந்தை.  

திராட்சைக் கொடியின் கிளைகளைப் போல தம்மோடு பிணைந்திருக்குமாறு சீடர்களை அழைத்த இயேசு, அவர்கள் அன்பில் நிலைத்து இருக்கும்படி விண்ணகத்தந்தையிடம் செபித்து அனைவரும் ஒன்றாக இருக்க செபிக்கின்றார் என்றும், மனிதநேயத்தை உருவாக்குவதற்கான வழி சகோதரத்துவத்தின் அடிப்படையிலானது, நன்மையின் பலன், முறைகேடுகள் மற்றும் சுயநலத்தின் அடிப்படையிலானது அல்ல என்பதை அறிவிப்பதற்காகவே இயேசு நம்மை உலகின் தெருக்களுக்கு அனுப்புகிறார் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் கனவை நனவாக்கும் பணி

இதன் அடிப்படையில் திருஅவை, தலத்திருஅவை, சமூகம் ஆகியவற்றிற்கு அவ்வியக்கத்தார் ஆற்றும் பணி அளப்பரியது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒத்த வயதுடையவர்கள், அருள்பணியாளர்கள் ஆகியோரோடு இணைந்து செயல்படுத்தப்படும் இப்பணி கடவுளின் கனவை நனவாக்குவதற்கான ஒன்றிணைந்த செயல்பாடு என்றும் கூறினார்.

இயேசுவின் அன்புக்கட்டளையால் ஈர்க்கப்பட்டு திருமணத்தின் புனித சடங்கு மற்றும் கட்டளைகளின் மறு கண்டுபிடிப்புக்கு ஏற்ப செயல்பட தங்களையே அர்ப்பணித்துள்ள அவ்வியக்கத்தாரைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்நாள் எல்லாம் உடனிருக்கும் தனித்துவமான பிரிக்கமுடியாத கொடையாகிய கணவன் மனைவி, மற்றும் திருஅவைப் பணிக்காக தங்கள் வாழ்க்கையை அளிக்கும் அருள்பணித்துவ வாழ்வு ஆகிய இரண்டும் வாழ்க்கைத்துணை என்னும் கடவுளின் உறவை, அன்பை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

நம்பிக்கை என்பது உறவு மற்றும் சந்திப்பின் அனுபவம் என்பதை அவ்வியக்கத்தாரின் தனிவரம் எடுத்துரைக்கின்றது என சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கடினமான சூழலில் அருள்பணியாளர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகளை உடனிருந்து கவனிக்கும் பொறுப்பை அவ்வியக்கத்தார் கொண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

திருமணமானவர்களுக்கு இடையில் பயனுள்ள பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், உறவின் கலை மற்றும், ஒற்றுமையின் கலையை ஒன்றாகக் கற்றுக்கொள்ளவும் அழைக்கப்படுகின்றார்கள் எனவும், அன்பின் அற்புதமான சிகரங்களை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, சில சமயங்களில் தனிமனிதவாதத்தின் சதுப்பு நிலப் பாதைகளை மிதிக்க விரும்புகின்ற நேரத்தில், கடவுளின் கனவை, கணவன்-மனைவி ஒற்றுமையின் கனவை முன்னெடுத்துச் செல்ல அவர்களுக்கு உதவ அழைக்கப்படுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

உறவுகளின் அழகுக்கு சான்று பகிர்வதன் வழியாக நற்செய்தியின் செழுமையை அறிவிக்கவும், ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கடவுள் வைத்திருக்கும் அன்பைக் காட்டவும், தாராள மனப்பான்மை மற்றும் ஆர்வத்துடன் தொடர்ந்து பணியாற்றவும் அவர்களை ஊக்கமூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பணியில் ஈடுபாடுள்ளவர்கள் மற்றும் இளையோர்க்கு பயணத்தின் கதவுகளைத் திறக்கவும், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டும் அருள்பணியாளர்களுக்கு இடையே ஒற்றுமையை அதிகரித்துக் கொள்வதற்கும், கிறிஸ்தவ சமூகங்களுக்கு உதவவும் புதிய பாதைகளைப் பின்பற்ற தயங்க வேண்டாம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2023, 12:45