தேடுதல்

தென் ஆப்பிரிக்காவில் தீ விபத்தில் சிக்கியவர்களின் உடல் அடக்கம் தென் ஆப்பிரிக்காவில் தீ விபத்தில் சிக்கியவர்களின் உடல் அடக்கம்  (SIPHIWE SIBEKO)

ஜோகன்னஸ்பர்க் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு செபிக்க அழைப்பு

ஜோகன்னஸ்பர்க்கின் 5 மாடிக்கட்டிடத்தில் மக்கள் அனுமதியின்றி குடியேறியிருந்த நிலையில், அங்கு இடம்பெற்ற தீவிபத்தில் இதுவரை 76 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மையத்திலிலுள்ள 5 மாடிக்கட்டிட தீவிபத்தில் பலியானவர்களுக்காக தன்னுடன் இணைந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் ஆறாம் தேதி புதன்கிழமையன்று புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மறைக்கல்வியுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இந்த விண்ணப்பத்தை விடுத்தார்.

ஜோகன்னஸ்பர்க்கில் இடம்பெற்ற இந்த 5 மாடி தீ விபத்துக் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகவும், இதில் பல குழந்தைகள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறித்து மிகவும் துயருறுவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

அவர்களுக்காக செபிக்கும்படி அனைவருக்கும் அழைப்புவிடுப்பதோடு, குடும்ப அங்கத்தினர்களை இழந்துள்ளவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவரும் பணியாளர்களுக்கு தன் ஆசீரை அளிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜோகன்னஸ்பர்க்கின் ஏழை மக்கள் வாழ்ந்து வந்த பகுதியில் கைவிடப்பட்ட ஒரு 5 மாடிக்கட்டிடத்தில் மக்கள் அனுமதியின்றி குடியேறியிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற தீவிபத்தில் இதுவரை 76 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தங்க நகரம் என செல்லமாக அழைக்கப்பட்டுவந்த ஜோகன்னஸ்பர்க் நகரின் உள்பகுதியில் உள்ள Marshalltown மாவட்டத்தில் இருக்கும் இந்த 5 மாடிக்கட்டிடம்போல், மேலும் ஏறத்தாழ 700 கைவிடப்பட்ட கட்டிடங்கள் நகரில் உள்ளதாக அறிவித்துள்ளது நகரக் காவல்துறை.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2023, 13:35