தேடுதல்

மத்தியதரைக்கடல் கூட்டத்தின் இறுதி நிகழ்வில் திருத்தந்தை மத்தியதரைக்கடல் கூட்டத்தின் இறுதி நிகழ்வில் திருத்தந்தை 

மத்தியதரைக்கடல் கூட்டத்தின் இறுதி நிகழ்வில் திருத்தந்தை

திருத்தந்தை : மர்செய்ல் நகரில், கடல், துறைமுகம், மற்றும் கலங்கரை விளக்கம் குறித்த என் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவல்கொள்கின்றேன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மத்தியதரைக்கடல் பகுதியில் வாழும் மக்களுக்கான கூட்டத்தில் பங்கு கொள்ள கர்தினால் Aveline அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இத்தாலியின் பாரி நகர் மற்றும் புளாரென்ஸ்க்குப்பின் தற்போது பிரான்சின் மர்செய்லில் கூடியுள்ளோம். எத்தனை துயர்கள் இருக்கின்றபோதிலும், ஒன்றிணைந்து வாழ்தல் என்பது இயலக்கூடியதே, அதுவே மகிழ்ச்சியின் ஆதாரம் என்பதன் எடுத்துக்காட்டாக மர்செய்ல் துறைமுக நகர் உள்ளது. இந்நகரை நான், மத்தியதரைக்கடல் பகுதியின் புன்னகை என அழைக்க ஆவல் கொள்கின்றேன்.  மர்செய்ல் நகரை குறித்து நிற்கும் மூன்று விடயங்களான கடல், துறைமுகம்,                          கலங்கரை விளக்கம் ஆகியவை குறித்த என் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவல்கொள்கின்றேன். கடல் என பார்க்கும்போது, அலையென இங்கு வந்து குடியேறியிருக்கும் மக்கள் இந்நகரை நம்பிக்கையின் வண்ணக்கலவையாக மாற்றியுள்ளனர்.   ஆம். இங்கு பல்வேறு இனங்கள், பல்வேறு பாரம்பரியங்கள் ஒன்றிணைந்து வாழ்கின்றன. இதன் பன்முகத்தன்மையால் இது தனித்துவம் வாய்ந்த ஒரு நகராக உள்ளது. இயேசுவின் காலத்தில் பார்த்தோமானால், திபேரிய ஏரி அல்லது கலிலேய கடல் பல்வேறு நம்பிக்கையுடைய, பாரம்பரியங்களுடைய மக்களைக் கொண்டிருந்தது. பிற இனத்தார் வாழ்ந்த கலிலேயப் பகுதியிலேயே இயேசு கிறிஸ்துவின் பொதுவாழ்வின் பெரும்பகுதி இடம்பெற்றது. அவரின் அந்த வாழ்வு, நாமும் இன, மற்றும் கலாச்சார தடைகளைத் தாண்டி, இதயத்தின் எல்லைகளை விரிவுப்படுத்தவேண்டும் என நமக்கு அழைப்புவிடுக்கிறது. வடக்குக்கும் தெற்குக்கும், கிழக்குக்கும் மேற்கும் இடையேயான சந்திப்புச் சாலையாக இருக்கும் நம் கடல், அகில உலகின் சவால்களை முன்வைப்பதாக, நம் சட்சிய வாழ்வை எதிர்பார்ப்பதாக உள்ளது. உலகின் கண்ணாடியாக இருக்கும் கடல், மோதல்களை வெற்றிகண்டு அவைகளை தடுப்பதற்கு உதவும் உடன்பிறந்த உணர்விற்கான உலகளாவிய அழைப்பை தன்னுள் கொண்டதாக உள்ளது. மத்தியதரைக்கடல் பகுதி, அமைதியின் சோதனைச் சாலையாக மீண்டும் வரவேண்டும் என்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஒன்றை நாம் நினைவில் கொள்வோம், ஆயுதங்களுடன் நாம் போரைத்தான் மேற்கொள்கிறோமேயொழிய, அமைதியைப் பெறுவதில்லை. அதிகாரத்திற்கான பேராசையில் நாம் பழைய வாழ்க்கைக்குத்தான் திரும்பிச் செல்கிறோமேயொழிய, வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதில்லை.

கலிலேயக் கடற்கரையில் இயேசு ஏழைகளை பேறுபெற்றோர் என அழைத்து அவர்களுக்கு நம்பிக்கையை வழங்கினார். அவர்களின் தேவைகளுக்கு செவிமடுத்தார். அவர்களின் காயங்களைக் குணப்படுத்தி அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். அங்கிருந்து நாமும் துவங்க வேண்டியிருக்கிறது. திருஅவையும் பொது சமுதாயமும் ஏழைகளின் மௌன அழுகுரலுக்கு செவிமடுக்கத் துவங்கட்டும்.  சமுதாயத் தீமை என்பது, பிரச்சனைகளின் அதிகரிப்பில் அதிகமாக இல்லை, மாறாக மக்கள் மீதான அக்கறை குறைந்து வருவதில் உள்ளது.        இன்றைய உலகில் எண்ணற்ற மக்கள் வன்முறைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.    இவ்வேளையில், உலகின் சில நாடுகளில் குடிமக்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் துன்பங்களை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களை எண்ணிப் பார்க்கிறேன். அதேவேளை, கலாச்சாரங்களின் தொட்டிலாக இருந்த இந்த கடல் பகுதி, மாண்புகளின் கல்லறையாக மாறியுள்ளதையும் எண்ணிப் பார்க்கிறேன். 

இரண்டாவதாக, மர்செய்லின் துறைமுகத்தைக் குறித்து சிந்திக்க உங்களை அழைக்கிறேன். இது தன்னைப் பெரிய அளவில் கடலுக்குத் திறந்த ஒரு துறைமுகமாக உள்ளது. தங்கள் வாழ்வையும் பணயம் வைத்து அடைக்கலம் தேடிவரும் மக்கள் ஆக்ரமிக்க வரவில்லை, மாறாக, வரவேற்பை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை புரிந்துகொள்வோம். கல்லறைகளை உள்ளடக்கியுள்ள இந்த கடல் நீதிக்கான குரலை எழுப்புகிறது, ஏனெனில், அதன் கரைகளில் ஒருபக்கம், செல்வச் செழிப்பும், நுகர்வுக் கலாச்சாரமும் வீணடித்தலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.  மறு பக்கமோ, ஏழ்மையும் நிலையற்றத் தன்மையும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இங்கும் நாம் மத்தியதரைக்கடல் பகுதி உலகின் கண்ணாடியாக விளங்குவதைக் காண்கிறோம். ஆம் தென் பகுதி, வடபகுதிய நோக்கி நிற்கிறது.

இரண்டாம் வத்திக்கன் பொதுச்சங்கம் நிறைவுற்ற சிறிது காலத்திலேயே, திருத்தந்தை புனித ஆறாம் பால் அவர்கள், தன்                   Populorum Progressio சுற்றுமடலில்,  ஏழைகளின் அழுகுரலுக்கு நாம் அனைவரும் செவிமடுக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.

நம்மிடம் அடைக்கலம் தேடிவருவோரை நாம் ஒரு சுமையாக ஒரு நாளும் நோக்குதல் கூடாது. அவர்களை நம் உடன்பிறந்த சகோதரர் சகோதரிகளாக நாம் பார்த்தோமானால், அவர்களை நமக்கான ஒரு கொடையாகத்தான் காண்போம். இன்று நம்மை மட்டும் நாம் காப்பற்ற முயல்வோமானால், நாளை அது நமக்கே துயரமாக முடியக்கூடும்.

மர்செய்ல் துறைமுகத்தை நாம் விசுவாசத்தின் வாசலாக நோக்குவோம். பாரம்பரியக் கூற்றின்படி, புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் ஆகியோர்                   இந்நகர் வந்து நற்செய்தியின் விதைகளை விதைத்ததாக கூறப்படுகிறது. பிறரன்பின் நற்செய்தி நம் மறைப்பணிகளுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். பிறரன்பை ஆற்றுவதில் கிறிஸ்தவர்கள் முன்னணியில் நிற்கவேண்டும். நம்பிக்கையிழந்தவர்களுக்கு நம்பிக்கையின் துறைமுகமாக திருஅவை செயல்படட்டும்.

நாம் இப்போது நம் மூன்றாவது உருவகமான, கலங்கரை விளக்கம் குறித்து நோக்குவோம். கலங்கரை விளக்கமானது தன் ஒளியை கடலுக்கு அனுப்பி, துறைமுகத்தை மற்றவர்கள் கண்டுகொள்ள உதவுகிறது. மத்தியதரைக்கடல் நாடுகளின் திருஅவைகள்  எத்தகையை ஒளியால் நம்பிக்கைச் சுடரைப் பெறமுடியும் என சிந்தித்துப் பார்ப்போம்.

இந்நேரத்தில் இந்த கலங்கரை விளக்கம், இளையோரை நோக்கி என் எண்ணங்களை எடுத்துச் செல்கிறது. வருங்கால வழியைக் காட்டும் விளக்கு இளைஞர்களே. இது மிகப்பெரும் பல்கலைக்கழக நகர். இங்குள்ள பல்கலைக்கழகங்களில் 35,000 மாணவர்கள் உள்ளனர், அதில் 500 பேர் வெளிநாட்டவர்.  பலகலைக்கழகங்கள் வழியன்றி, நாம் கலாச்சரங்களுக்கிடையேயான உறவின் பின்னலை எவ்வாறுக் கட்டியெழுப்ப முடியும்?. அன்புள்ளங்களே, நன்மைத்தனங்களின் கடலாக இருந்து, இன்றைய ஏழ்மை நிலைகளை ஒருமைப்பாட்டிலும் ஒத்துழைப்பிலும் எதிர்கொள்ளுங்கள். நல்லதொரு வருங்காலத்தை தேடி வருவோருக்கு வரவேற்பின் துறைமுகமாக செயல்படுங்கள். வன்முறை மற்றும் போரின் இருண்ட படுகுழியில், கலாச்சாரங்களிடையேயான சந்திப்பின் வழி ஒளியைப் பாய்ச்சும் அமைதியின் கலங்கரை விளக்கமாக இருங்கள். நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2023, 12:57