அன்பின் வெளிப்பாடான சகோதர குறைதிருத்தம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சகோதர குறைதிருத்தம் என்பது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று என்றும், நமக்கு எதிராகப் பாவம் செய்யும் நம் சகோதர சகோதரிகளை மன்னித்து அன்பு மற்றும் இரக்க உள்ளம் கொண்டவர்களாய் ஏற்று வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை ஆற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவறு செய்யும் சகோதர சகோதரிகளை வெறுக்காமல் திருத்துவதன் வழியாக அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொதுக்காலத்தின் 23ஆம் ஞாயிறு நற்செய்தி வாசகமான மத்தேயு நற்செய்தி 18:15-20 இறைவார்த்தைகள் எடுத்துரைக்கும் பாவம் செய்யும் சகோதரர் என்ற தலைப்பின் கீழ் திருப்பயணிகளுக்குத் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தவறு செய்யும் சகோதரர்களைத் தனிமையில் குறைதிருத்தம் செய்தல், கேட்கவில்லையெனில் இரண்டு அல்லது மூன்று பேர் முன்னிலையில் எடுத்துரைத்து திருத்துதல், அப்படியும் செவிசாய்க்காவிடில் திருச்சபையில் உள்ள பெரியோர்களின் முன்னிலையில் எடுத்துரைத்து குறைதிருத்தம் செய்தல் என்பவற்றை வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், செபம், உண்மையான அன்பு, இரக்க உள்ளம் கொண்டு அவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வதந்திகள் மற்றும் புரணிப்பேச்சுக்கள்
தவறு செய்பவர்களைச் சுற்றி முதலில் உருவாக்கப்படும் வதந்திகள் மற்றும் புரணிப்பேச்சுக்கள் கடவுளுக்குப் பிடிக்காத ஒன்று என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையில் அவை ஒரு கொள்ளைநோய் என்றும் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய கொள்ளை நோய்கள் பிளவு துன்பம் மற்றும் அவதூறுகளை மட்டுமே தருகின்றது எனவும், உறவுகளை மேம்படுத்தவும் வளரச் செய்யவும் ஒருபோதும் உதவாது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
‘‘வீரியமற்ற ஆர்வமும், மேலோட்டமான வார்த்தைகளும் பெருமை என்னும் ஏணியின் முதல் படிகள். இவை மேல்நோக்கி வழிநடத்தாது, மாறாக கீழ்நோக்கி, அழிவு மற்றும் இழப்பை நோக்கி மனிதனைத் தள்ளுகிறது‘‘ என்ற சிறந்த ஆன்மீக குருவான கியாராவால்லேயின் புனித பெர்னார்ட் அவர்களின் வரிகளையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.
தனிமையில், நண்பர்கள் மத்தியில், சமூகத்தில் குறைதிருத்தம்
சகோதர சகோதரிகள் தவறு செய்வதற்கான சூழல் என்ன என்பதைக் கண்டறிந்து புரிந்துகொள்ள, அவருக்கு உதவ, நம்பிக்கையுடன் ஒருவருக்கொருவர் பேசுங்கள் என்றும், அவர்களுடைய நன்மைக்காக இதைச் செய்து, அவமானத்தைக் கடந்து உண்மையான துணிவைக் கண்டடையவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அவர்களது முகத்திற்கு நேராக கடுமையாக, கோபமாகப் பேசாமல் சாந்தம் மற்றும் இரக்கத்துடனும் பேச வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நமது நன்மையில், உறவில் கைகொடுக்கும் நண்பர்கள் இருவர் மூவர் மத்தியில் அவர்களுக்கு சகோதர குறைதிருத்தம் கொடுக்க அழைப்புவிடுத்தார்.
திருச்சபையின் பெரியோர்கள் முன்னிலையில் குறைதிருத்தம் கொடுப்பது என்பது அவர்களது குறைகளை சூட்டிக்காட்டி புண்படுத்தும் நோக்கத்திற்காக அல்ல மாறாக, அவர்கள் தங்களது குற்றத்தை, தவறை உணர்ந்து, மீண்டுவர கொடுக்கப்படும் வாய்ப்பு என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு, இரக்கம், மன்னிப்பு, அவர்களின் மனமாற்றத்திற்கான தொடர்செபம் ஆகியவற்றின் வழியாக நமது நெருக்கத்தையும் மன்னிப்பையும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்பதனை நமது செயல்களின் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செவிசாய்க்காதவர்கள் உங்களுக்குப் புறவினத்தார் போல இருக்கட்டும் என்றும் நினைவூட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்