தேடுதல்

விமானத்தில் பத்திகையாளர் சந்திப்பின்போது திருத்தந்தை விமானத்தில் பத்திகையாளர் சந்திப்பின்போது திருத்தந்தை  (AFP or licensors)

திருத்தந்தை : மங்கோலிய திருப்பயணம் மனதுக்கு நிறைவானது

கலாச்சாரத்திற்கு நற்செய்தி அறிவிப்பதும், நற்செய்தியை பண்பாட்டு மயமாக்குவதும் ஒரு சேர இடம்பெறுகிறது, இவ்வாறு நடப்பதே மதரீதியான காலனி ஆதிக்கத்தைத் தடுக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அளவில் சிறியதாக இருக்கும் மங்கோலியா நாட்டு கிறிஸ்தவ சமூகத்தை சந்திக்கவும், அவர்களின் கலாச்சாரத்திற்கான மதிப்புடன் அவர்களின் விசுவாசப் பாதையில் இணைந்து நடைபோடவும் அங்கு சென்ற தன் விருப்பம் நிறைவேறியுள்ளதாக உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்,

மங்கோலியா நாட்டிற்கான தன் திருப்பயணத்தை நிறைவு செய்து செப்டம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையன்று உரோம் நகருக்குத் திரும்பும் வழியில் விமானத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதனை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மங்கோலிய மக்களின் வரலாறு, மற்றும் கலாச்சாரத்தோடு தான் உரையாடல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

எப்போதும் கலாச்சாரத்திற்கு நற்செய்தி அறிவிப்பதும், நற்செய்தியை பண்பாட்டு மயமாக்குவதும் ஒரு சேர இடம்பெறுகிறது, ஏனெனில், இவ்வாறு நடப்பதே மதரீதியான காலனி ஆதிக்கத்தைத் தடுக்கிறது, மற்றும் இத்தகைய காலனி ஆதிக்கத்திற்கு எதிரானது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மங்கோலிய மக்கள், மற்றும் அவர்களின் கலாச்சாரத்திற்கு உரிய மதிப்புடன் தலத்திருஅவையின் பயணத்தில் தானும் இணைந்து கொண்டதால் கிட்டிய பலன் குறித்து தான் மனநிறைவு அடைந்துள்ளதாகவும் தன் மங்கோலிய அண்மை திருத்தூதுப்பயணம் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சீனாவுடன் ஆன உறவுகள் குறித்த ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இரஷ்யா, உக்ரைன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சீனாவிற்கு என தன் பிரதிநிதியாக கர்தினால் மத்தேயோ சுப்பி அவர்கள் திட்டமிட்டுள்ள அமைதிப் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பதாக முதலில் கூறினார்.  

சீனாவுடன் ஆன உறவுகள் மிகவும் மதிப்புக்குரியதாக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், அந்த நாட்டுடன் ஆன உறவுப் பாதைகள் மிகவும் திறந்த மனதுடன் இடம்பெறுவதாகவும், கத்தோலிக்க ஆயர்களை நியமிப்பது குறித்த இரு நாடுகளுக்கும் இடையேயான அவை தொடர்ந்து செயல்பட்டுவருவதாகவும், கத்தோலிக்க அருள்பணியாளர்களும், கத்தோலிக்க அறிஞர்களும் சீனப் பல்கலைக்கழகங்களில் வகுப்புக்கள் நடத்த அழைக்கப்படுவதாகவும் கூறிய திருத்தந்தை, அந்நாட்டுடன் ஆன உறவு மிகச் சுமுகமாகச் சென்று கொண்டிருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

சீன கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை திருஅவை ஏற்றுக் கொள்வதில்லை என சீனக் குடிமக்கள் தவறாக எண்ணாதிருக்கவும், திருஅவை ஒரு வெளிநாட்டு அதிகாரத்தைச் சார்ந்திருக்கிறது என்ற எண்ணத்தைக் களையவும் என்ற நோக்கத்தில்  இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதில் மேலும் முன்னேற்றம் தேவைப்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.  

வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா என்ற கேள்வியை ஒரு சமூகத்தொடர்பாளர் முன்வைக்க, அதற்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தன் உடல்நிலை காரணமாக வியட்நாம் நாட்டிற்கான திருப்பயணம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டில் பிரான்சின் மார்செய்ல் நகர் திருப்பயணத்திற்குப்பின், ஐரோப்பாவின் ஒரு சிறிய நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் திட்டம் இருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவான அக்டோபர் மாதம் 4ஆம் தேதி Laudato si' திருஏட்டின் இரண்டாம் பகுதியை தான் வெளியிட உள்ளது குறித்தும், இரஷ்ய இளையோருக்கு தான் எழுதி அனுப்பிய வாழ்த்துக் கடிதம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது குறித்தும், அக்டோபர் மாதம் வத்திக்கானில் இடம்பெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டம் குறித்தும், புறநகர் பகுதிகளில் வாழும் ஏழைமக்களின் குரல்கள் செவிமடுக்கப்பட்டு அவர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் அரசுகள் ஈடுபடவேண்டும் என்பது பற்றியும் சமூகத்தொடர்பாளர்களுடன் விரிவாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் துன்புறும் மியான்மாரின் ரொகிங்கியா மக்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மங்கோலியாவில் இருந்து உரோம் நகருக்குத் திரும்பும் விமானப் பயணத்தில் ஏறக்குறைய ஒருமணி நேரம் சமுகத்தொடர்பாளர்களைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு விரிவான பதில்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2023, 14:05