ஒன்றிப்பு, இறைவேண்டல், தன்னலமற்ற பணி, சான்றுபகர்தல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
“நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்” (மத் 25:35)என்ற வார்த்தைகளை எடுத்துரைத்த இயேசு அதன் வழி, நாம் இவ்வுலகில் அவரின் பிரசன்னத்தையும், இறுதித் தீர்ப்பின்போது விண்ணக வாழ்வில் நுழைவதற்கான மகிழ்ச்சியையும் கண்டுகொள்வது குறித்து எடுத்துரைக்கிறார். இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு தன் துவக்கத்திலிருந்தே முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுத்திவந்த திருஅவை, தன் தனித்துவத்தின் அடிப்படைக் கூறாக பிறரன்பை முன்வைத்து செயலாற்றி வந்துள்ளது. முதல் கிறிஸ்தவ சமூகம் இயேசுவின் வார்த்தைகளில் எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது என்பதை திருத்தூதர் பணி நூலில் நாம் காண்கிறோம். ஒன்றிப்பு, திருவழிபாடு, சேவை, சான்றுபகர்தல் என்ற நான்கு தூண்களில் அது கட்டியெழுப்பப்பட்டது. இந்த முதல் கிறிஸ்தவ சமூகம் நான்கு பெரும் தூண்களில் கட்டியெழுப்பபட்டு பல நூற்றாண்டுகள் கடந்துள்ள போதிலும், இன்றும் அன்றைய உணர்வுகளை மங்கோலிய தலத்திருஅவையில் காணமுடிகிறது. அளவில் சிறியதாக இருப்பினும் இந்த தலத்திருஅவையின் வாழ்வு, உடன்பிறந்த உணர்வுடன்கூடிய ஒன்றிப்பு, இறைவேண்டல், உதவித் தேவைப்படுபவர்களுக்கான தன்னலமற்ற பணி, தன் விசுவாசத்திற்குச் சான்றுபகர்தல் போன்றவைகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு பக்கபலத்தைக் கொண்டு உங்கள் வீடான கெர் என்பது எழும்பி நின்று அதற்குள் விசாலமான இடத்தைக் கொண்டிருப்பதுபோல், திரு அவையும் வரவேற்கும் விசாலமான இடமாக உள்ளது.
ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பிய கருணை இல்லம் என்ற இந்த பிறரன்பு இல்லத்தை நான் ஆசீர்வதித்து திறந்து வைக்கிறேன். கிறிஸ்தவ சமூகத்தின் அடையாள முத்திரையாக இருக்கும், அடுத்தவர் மீதான அக்கறையின் ஆழமான வெளிப்பாடாக இந்த கருணை இல்லம் உள்ளது. எங்கு நாம் வரவேற்பையும், விருந்தோம்பலையும், பிறருக்கான மனம் திறத்தலையும் காண்கிறோமோ, அங்கு புனித பவுல் கூறுவதுபோல், கிறிஸ்துவின் நறுமணம் (2 கொரி. 2:15) உள்ளது. நமக்கு அடுத்திருப்போருக்கான தாராளமனப்பான்மையுடன் கூடிய பணி, அதாவது அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகள், கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்த அக்கறை போன்றவைகளை உள்ளடக்கிய பணி, இறைமக்கள் சமுதாயத்தின் துவக்க காலத்திலிருந்தே அதன் அடையாளமாக உள்ளது. 1990களில் உலான்பாதருக்கு வந்த நம் முதல் மறைபோதகர்கள், பிறரன்புப் பணிகளுக்கான தேவைகளை உணர்ந்தார்கள். அதனை செயல்படுத்தும் விதமாக, கைவிடப்பட்ட சிறார், நம் வீடற்ற சகோதரர் சகோதரிகள், நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகள், சிறைக்கைதிகள் என உதவித் தேவைப்படும் அனைவருக்கும் சேவையாற்றத் துவங்கினார்கள். அன்று துவக்கப்பட்ட அந்த அடிவேரிலிருந்து இன்று மரம் ஒன்று வளர்ந்து அதன் கிளைகளைப் பரப்பி, அதன் எண்ணற்ற கனிகளான பல்வேறு பிறரன்பு பணிகளுக்கு வித்திட்டுள்ளது. ஏழ்மையால் சூழப்பட்டு, அரசியல் மாற்றம் இடம்பெற்ற ஒரு காலக்கட்டத்தில் பல்வேறு சமூக நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண, கத்தோலிக்க மறைப்பணியாளர்களின் உதவியை மங்கோலிய அரசு நாடியுள்ளது. பல்வேறு நாடுகளின் மறைப்பணியாளர்களின் அர்ப்பணத்துடன் துவக்கப்பட்ட பிறரன்புத் திட்டங்கள், மங்கோலிய சமூகத்தின் தேவைக்காக தங்கள் அன்பை அர்ப்பணித்துள்ளன. இத்தகைய நற்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு பிறரன்புப்பணிகளை ஆற்றிவரும் தலத்திருஅவையின் குறியீடாக நாம் இன்று திறந்து வைக்கும் கருணை இல்லம் உள்ளது. துன்புறும் மக்களின் குரலுக்கு செவிமடுக்கும், மற்றும் அவர்களைப் புரிந்துகொண்டு இதயத்தால் வரவேற்கும் இல்லமாக இது உள்ளது. பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்களால் நடத்தப்படும் பிறரன்புப் பணிகளாக இது இல்லாமல், பல்வேறு அமைப்புக்களின் ஒன்றிணந்த பணியின் அடையாளமாக இந்த கருணை இல்லம் உள்ளது. கருணை இல்லம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது. இந்த இரு சொற்களும் திருஅவையையும் அடையாளப்படுத்துபவைகளாக உள்ளன. அனைவரையும் வரவேற்கும் இல்லமாகவும், தந்தையாம் இறைவனின் கருணையை, அன்பை வெளிப்படுத்தும் இடமாகவும் திருஅவை உள்ளது. இத்தகைய பிறன்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து நடத்தப்பட தன்னார்வப் பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அடுத்திருப்பவர் மீதான தன்னலமற்ற அன்பினால் தன்னார்வப் பணியாளர்கள் செயல்படுவது, இயேசு நமக்குக் கற்பித்த பணிமுறையாகும். “கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” (மத் 10:8) என்பது இயேசுவே கூறிய வார்த்தைகள். எதையும் பிரதிபலனாக எதிர்பார்க்காமல் இலவசமாக கொடுப்பதும் சேவையாற்றுவதும் மிகப்பெரும் கொடை. தராளமனம் என்பது, ஆன்மாவின் சுமைகளை இறக்குகிறது, இதய காயங்களை குணமாக்குகிறது, கடவுள் அருகில் மனிதர்களைக் கொணர்கிறது, மகிழ்வின் ஆதாரமாக மாறுகிறது, நம் உள்ளுணர்வை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது. இளையோரை அதிகமாகக் கொண்டுள்ள இந்த நாட்டில் தன்னார்வப் பணியாளர்களின் பணி, தனிப்பட்ட மனிதர்களின் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பாதையாக அமையமுடியும். ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது, அதன் பொருளாதார செல்வத்தை வைத்தோ, ஆயுதங்களில் அதன் முதலீட்டை வைத்தோ கணிக்கப்படுவதல்ல, மாறாக, நலவாழ்வு, கல்வி, மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை தன் மக்களுக்கு வழங்கும் அதன் சக்தியை வைத்தே கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாகவே இந்நாட்டின் மக்களிடையே நான் தன்னார்வப் பணிகளுக்கு ஊக்கமளிக்கிறேன். இந்த கருணை இல்லத்திலுள்ள பயிற்சி முகாம் வழி நீங்கள் உங்கள் இதயத்திற்கு பயிற்சி வழங்கலாம்.
இறுதியாக நான் சில கட்டுக்கதைகள் குறித்து உங்கள் கவனத்தைத் திருப்ப ஆவல் கொள்கிறேன். முதலில், வசதி படைத்தவர்கள் மட்டுமே தன்னார்வப் பணிகளில் ஈடுபடமுடியும் என்ற தவறான எண்ணம் களையப்பட வேண்டும். உண்மை நிலைகள் அதற்கு எதிர்மாறானதைத்தான் நிரூபித்துள்ளன.
இரண்டாவதாக, கத்தோலிக்கத் திருஅவையின் பிறரன்பு மற்றும் சமூக வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டவை என்ற தப்பெண்ணம். இது தவறான கருத்து. கிறிஸ்தவர்களின், மக்களுக்கான பணியெல்லாம், ஏழைகளில் இறைவனைக் கண்டு அவருக்கு ஆற்றுவதேயன்றி வேறெந்த நோக்கமும் கொண்டதல்ல. இந்த கருணை இல்லத்தில்கூட நம் மனித குடுமபத்தின் ஏழை சகோதரர் சகோதரிகளுக்கு பணியாற்ற அனைத்து மதத்தினரும், இறை நம்பிக்கையற்றவர்கள்கூட வரவேற்கப்படுகின்றார்கள். மனிதகுல குடும்பத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். அது உடன்பிறந்த உணர்விற்கு சான்றாக இருக்கும்.
இறுதியாக, மூன்றாவது தப்பெண்ணம் குறித்து நோக்குவோம். பணமே பிரதானம் என்பதும், பிறரன்புப் பணிகளுக்கும் நிறைய ஊதியம் வழங்கவேண்டியிருக்கும் என்பதுமாகும். பிறரன்புப் பணிகள் ஒரு வியாபாரமாக நோக்கப்படக் கூடாது. பணம் கொடுக்க முடிந்தவர்களுக்கே இரக்கம் என்பது இங்கில்லை. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானல், உண்மையான நற்பணிகளை ஆற்ற பணமல்ல, இதயத்தின் நன்மைத்தனம் தேவை. மற்றவர்களுக்கு எது நல்லதோ அதனை ஆற்றும் அர்ப்பணம் தேவை. ஊதியத்திற்கான அர்ப்பணம் என்பது, ஓர் உண்மை அன்பு அல்ல. தன்னலத்தை வெற்றிகண்டு, இவ்வுலகம் முன்னோக்கிச் செல்ல உதவுவது அன்பே.
இவ்வேளையில் அன்னை தெரேசாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறி என் உரையை நிறைவுச் செய்கிறேன். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்த நோயாளியை அன்னை தெரேசா குனிந்து தூக்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர் அன்னை தெரேசாவிடம், “நீங்கள் ஆற்றுவது, ஓர் அழகானச் செயல். ஆனால், ஒரு 10 இலட்சம் டாலர் கொடுத்தால்கூட நான் இதனைச் செய்ய மாட்டேன்” என்றார். இதைக்கேட்டு புன்னகைத்த அன்னை தெரேசா அவரிடம், “நானும் 10 இலட்சம் டாலர் கொடுத்தாலும் இதைச் செய்யமாட்டேன். ஆனால், இறையன்பிற்காக இதனைச் செய்கிறேன்” என பதிலுரைத்தார். இத்தகைய அன்பே கருணை இல்லத்தின் பணிகளில் தெரியும். உங்கள் பணிகள் அனைத்தும் இப்போதுபோல் எப்போதும் தொடரட்டும். உங்கள் அனைவருக்கும் என் நன்றியும் ஆசீரும் உரித்தாகுக. எனக்காக செபிக்க மறவாதீர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்