தேடுதல்

சான் எஜிதியோ ஏற்பாடு செய்த ஜெபக்கூட்டத்தில் திருத்தந்தை (2021 அக்டோபர் 7) சான் எஜிதியோ ஏற்பாடு செய்த ஜெபக்கூட்டத்தில் திருத்தந்தை (2021 அக்டோபர் 7) 

நம்பிக்கையின் பாதையில் பிரிவினைச் சுவர்களே எழும்பி நிற்கின்றன

பிரிவினைச் சுவர்கள் தகர்த்தெறியப்படும் என்ற நம்பிக்கையுடன் 1989ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பயணம் அதிக எண்ணிக்கையில் சுவர்கள் எழுப்பப்பட்டதையேக் கண்டு வந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மேற்கு, கிழக்கு என ஜெர்மனியை இரண்டாகப் பிரித்து வைத்திருந்த சுவர் இடிக்கப்பட்டபோது கிட்டிய நம்பிக்கையின் பாதையில் தற்போது இவ்வுலகில் பல்வேறு பிரிவினைச் சுவர்களே எழும்பி நிற்பதைக் காணமுடிகிறது என உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் ஏற்பாட்டின்பேரில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இடம்பெறும், அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களின் பன்னாட்டு ஜெபக்கூட்டத்தில் பங்குபெறுவோருக்கு செவ்வாய்க்கிழமையன்று வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவர்கள் தகர்த்தெறியப்படும் என்ற நம்பிக்கையுடன் 1989ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பயணம் அதிக எண்ணிக்கையில் சுவர்கள் எழுப்பப்பட்டதையே கண்டு வந்துள்ளது என்ற கவலையை வெளியிட்டுள்ளார்.

ஆப்ரிக்காவிலும், மத்தியக்கிழக்குப் பகுதியிலும், ஐரோப்பாவின் உக்ரைனிலும் இடம்பெற்றுவரும் முடிவற்ற மோதல்கல் குறித்தும் தன் செய்தியில் எடுத்தியம்பியுள்ளார் திருத்தந்தை.

2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதத்தலைவர்களுடன் இணைந்து உரோம் நகரின் கொலோசேயத்தில் தானும் கலந்துகொண்ட உலக அமைதிக்கான செபக்கூட்டம் குறித்தும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னையரின் இதயங்களில் இருந்தும், அகதிகள், குடிபெயர்ந்த குடும்பங்கள், காயமுற்றோர், மடியும் தறுவாயில் இருப்போர் ஆகியோரிலிருந்தும் எழும் அமைதிக்கான அமைதியான விண்ணப்பத்தை எவரும் அடக்கி ஒடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலகளைப் பார்த்து நாம் முடங்கிவிடக்கூடாது என பெர்லின் கூட்டத்திற்கு அனுப்பியுள்ளச் செய்தில் அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை, இவைகளுக்குத் தீர்வு காண அமைதியின் துணிச்சலைக் கையில் எடுக்கவேண்டும் என கேட்டுள்ளார்.

அனைத்து மக்களும் இவ்வுலகைக் காப்பாற்றும் நோக்கத்தில் அமைதிக்காக ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2023, 15:29