தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - மங்கோலிய திருத்தூது அனுபவங்கள்

செப்டம்பர் 6 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மங்கோலிய திருத்தூதுப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கோடை வெயிலின் காரணமாக வத்திக்கானில் உள்ள திருத்தந்தை தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்று வந்த திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையானது செப்டம்பர் 6 புதன்கிழமை இன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

உரோம் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் காலை 12.30 மணிக்கு பெருங்கோவில் வளாகத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திறந்த வாகனத்தில் வலம்வந்தபடி திருப்பயணிகளைச் சந்தித்தார்.

வளாகத்தின்  நடுவில் போடப்பட்டிருந்த மேடையை அடைந்த திருத்தந்தை சிலுவை அடையாளம் வரைந்து  கூட்டத்தினைத் துவக்கி வைத்தார். அதன்பின் 1 சாமுவேல் 16 ஆம் அதிகாரத்தில் உள்ள 6,7 இறைவார்த்தைகள் பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

1 சாமுவேல் ; 16, 6,7

ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது சாமுவேல் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார். ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார்.

 

அதனைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்குத் தன் புதன் மறைக்கல்வி உரையினை ஆற்றத்தொடங்கினார். திருத்தந்தையின் உரைக்கு இப்போது செவிமடுப்போம்.      

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நான் செப்டம்பர் 4 திங்கட்கிழமை எனது 43ஆவது திருத்தூதுப் பயணத்தை  நிறைவுசெய்து மங்கோலியாவிலிருந்து திரும்பினேன். எனது இந்த பயணம் நன்முறையில் நிறைவடைய செபத்தாலும் செயலாலும் உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் என் வருகையை அன்புடன் ஏற்றுக்கொண்ட மங்கோலிய அரசுத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் எனது நன்றியினை உரித்தாக்குகின்றேன். என்னை அதிகாரப்பூர்வமாக வரவேற்று மங்கோலியாவை நான் சந்திக்கக் காரணமாக இருந்த  மங்கோலிய அரசுத்தலைவர் Khürelsükh, மற்றும் முன்னாள் அரசுத்தலைவர் Enkhbayar ஆகியோருக்கு எனது நன்றி. மகிழ்வான மன நிலையுடன் மங்கோலிய மக்களையும் தலத்திருஅவையையும் நினைவுகூர்கின்றேன். மிகவும் உன்னதமான, ஞானமுள்ள மங்கோலிய மக்கள் எனக்கு இதயப்பூர்வமான அன்பையும் நட்பையும் வழங்கினார்கள். இன்று இந்த இனிமையான பயணத்தின் இதயத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

திருத்தந்தை ஏன் இவ்வளவு தொலைவில் உள்ள சிறிய எண்ணிக்கையிலான மங்கோலிய மக்களைப் பார்க்கச் செல்கின்றார்? என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு 1 சாமுவேல் 16 ஆம் அதிகாரம் 7 இல் உள்ள இறைவார்த்தைகள் விளக்கம் கொடுக்கின்றன. “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” ஆம் அன்புக்குரியவர்களே கடவுள் வெளிப்புறத்தோற்றத்தைப் பார்ப்பதில்லை  மாறாக பிறரை அன்பு செய்ய விரும்புகின்ற திறந்த எளிமையான இதயத்தையேப் பார்க்கின்றார். அதுபோல மங்கோலியாவில் ஒரு தாழ்மையான மற்றும் மகிழ்ச்சியான கடவுளின் இதயத்தில் இருக்கும் ஒரு தலத்திருஅவையை சந்திக்க எனக்கு கிடைத்த அருளிற்காக நன்றி கூறுகின்றேன். தலத்திருஅவையின் முக்கியமான பகுதியில் அம்மக்களோடு இருந்ததில், அவர்களின் மகிழ்ச்சியை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

மங்கோலியா சமூகம் ஒரு மனதை தொடும் கதையைக் கொண்டுள்ளது. கடவுளின் அருளால் அப்போஸ்தலிக்க பேரார்வத்தால் உருவான ஒரு சமூகம். 30 ஆண்டுகளுக்கு முன்பு மறைப்பணியாற்ற நற்செய்திப் பணியில் ஆர்வமுடைய மறைப்பணியாளர்கள் மொழி அறியாத அந்த நாட்டிற்குத் துணிவுடன் சென்றனர்.  வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த அவர்கள் மொழியால் வேறுபட்டு இருந்தாலும் கத்தோலிக்கர்கள் என்னும் முறையில் உலகளாவிய முறையில் ஒன்றுபட்டு பணிசெய்தனர். கத்தோலிக்கர்கள் என்ற வார்த்தை உலகளாவிய என்ற பெயரில் அறியப்பட்டது. ஒரு கத்தோலிக்க மதம் தனது ஒன்றிணைந்த பணியினால் உலகளாவிய தன்மையை, கலாச்சாரத்தை மக்களிடத்தில் வளர்க்கின்றது. தான் வாழும் இடத்தில் பொதிந்துள்ள உலகளாவிய தன்மையை நன்மையைக் காண்கிறது. அங்கு வாழும் மக்களுக்கு பணியாற்றுகின்றது. அதன் வழியாக தலத்திருஅவையை வளர்க்கின்றது. இயேசுவின் அன்பை தாழ்ச்சியுடனும். ஒருவர் ஒருவருடைய வார்த்தைகளின் வழியாக உண்மையுடனும் அறிவித்து சான்றுள்ள வாழ்க்கை வாழ்கின்றது. உண்மையான செல்வமாம் மகிழ்ச்சியுடன் அறச்செயல்களின் பின்னணியில், நம்பிக்கையின் சிறந்த சான்றாகத் திகழ்கின்றது.  

இப்படியாக கருணைப் பணிகளாலும், நம்பிக்கையுள்ள சான்று வாழ்வினாலும் பிறந்தது இளமையான மங்கோலியக் கத்தோலிக்க சமூகம். எனது இந்த திருத்த்தூதுப் பயணத்தில் காசா தெல்லா மிசரிகோர்தியா என்னும் கருணை இல்லத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இறைப்பணி மற்றும் அவரது மக்களுக்கான பணியில் கருணை மற்றும் அனைத்து கூறுகளின் வெளிப்பாடாக மங்கோலியாவில் பிறரன்புப் பணிகளுக்காக உருவான முதல் இல்லமாகத் திகழ்கின்றது. அனைவரையும் வரவேற்கும் இல்லமாக, எந்தவிதமான குற்றஉணர்வோ கூச்சமோ இன்றி அனைவரும் செல்லும் இல்லமாக குணப்படுத்தும் இல்லமாகத் திகழ்கின்றது. அனைவரையும் ஈர்க்கும் இல்லமாக, கருணையின் இல்லமாக, துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு ஒரு திறந்த மற்றும் வரவேற்கத்தக்க இடமாக விளங்குகின்றது.

திருஅவையின் சான்று வாழ்வு மங்கோலியாவில் வெளிப்படுகின்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மறைப்பணியாளர்கள் தாங்கள் ஒன்றாக இருப்பதாக உணர்கிறார்கள். மக்களுக்குப் பணியாற்றுவதிலும், அவர்களோடு வாழ்வதிலும் அங்கு ஏற்கனவே இருக்கும் அழகைக் கண்டறிவதில் மகிழ்ச்சி அடைகின்றார்கள். அங்கு இருந்த நாட்களில் அவ்வழகை என்னாலும் கண்டுணர முடிந்தது. சிலரைச் சந்தித்து அவர்களின் கதைகளைக் கேட்கும் போது அவர்களது செறிவுமிக்க கத்தோலிக்க உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

செப்டம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் மதத்தலைவர்களை சந்தித்து உரையாற்றினேன். மங்கோலியாவில் ஒரு சிறந்த புத்த பாரம்பரியம் உள்ளது. அமைதியாக தங்கள் மதத்தை நேர்மையாகவும் தீவிரமாகவும் வாழக்கூடிய புத்த மதத்தவர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது. உலகம் எனும் தோட்டத்தில் அமைதியை சிதைக்கும் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இவர்கள் அமைதி என்னும் விதையை விதைக்கும் பணியினை மறைவாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.       

நல்லதை எப்படிப் பார்ப்பது மற்றும் அங்கீகரிப்பது என்பதை அறிவது முக்கியம். நம் எண்ணங்களுக்கு ஒத்துப்போகும் அளவிற்கு இருப்பவர்களை மட்டுமே நாம் பாராட்டுகிறோம். அதற்கு பதிலாக, கடவுள் நம்மிடம் ஒரு திறந்த மற்றும் கருணையுள்ள பார்வையைக் கேட்கிறார். தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளுக்கு ஆளாகாமல், நாட்டிலும், கலாச்சாரத்திலும் மதத்திலும் எப்போதும் செழுமைகளை மட்டுமேக் கண்டறிய முயல்வோம். மங்கோலிய மக்களைப் போலவே, நம் பார்வையை மேல்நோக்கி, நன்மையின் ஒளியை நோக்கி செலுத்துவோம். இந்த வழியில் நல்லதை அங்கீகரிப்பதில் இருந்து நமது பொதுவான எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது; மற்றவரை மதிப்பதன் வழியாக மட்டுமே நாம் இறைவனை மேன்மைப்படுத்த முடியும். ஒருபுறம் மக்களுடன், அன்பு மற்றும் நம்பிக்கையின் வழியில், இதயத்தின் பார்வையில் நாம் ஒருவர் மற்றவரைச் சந்தித்து வாழும்போது மறுபுறம், கடவுள் நம்மில் அதிகமாக செயலாற்றுவார்.

ஆசியாவின் இதயமாகிய மங்கோலியாவில் இருந்தது எனக்கு மகிழ்வு. அந்த மாபெரும் கண்டத்தில் உள்ள மக்களுடன் உரையாடல்களில் ஈடுபடுவது, அப்பகுதியின் செய்திகளைப் புரிந்துகொள்வது, அதன் ஞானம், விஷயங்களைப் பார்க்கும் விதம் நன்மையைத் தந்தது. தங்களது பாரம்பரியத்தையும், மரபுகளையும் போற்றும், முதியவர்களை மதிக்கும், சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழும் மங்கோலிய மக்களைச் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. வானத்தை பார்த்து, படைப்பின் சுவாசத்தை உணரும் மங்கோலிய மக்களின் எல்லையற்ற அமைதியான மனநிலை என்னைக் கவர்ந்தது. மங்கோலிய மக்களைப் போலவே, ​​​​நமது பார்வையின் எல்லைகளை விரிவுபடுத்துவோம். மற்றவர்களிடம் இருக்கும் நல்லதைக் காணவும், நம் சொந்த எல்லைகளை விரிவுபடுத்தும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க முயல்வோம்.

இவ்வாறு தனது உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2023, 08:45